2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி நடாத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலானது தமது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக ஒரு குறித்த குழுவினரால் பயன்படுத்தப்பட்டது என கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை பொரளையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வொன்றில் பங்கேற்ற பேராயர் மதத்தீவிரவாதம் இந்த ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
தமது அரசியல் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்காக மதத் தீவிரவாதத்தை சிலர் பயன்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய கர்த்தினால் மல்கம் ரஞ்சித் சில தனிப்பட்டவர்கள் தம்மைப் பலப்படுத்திக்கொள்வதற்கு இந்த தாக்குதல்களைப் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக மேலும் கூறினார்.
இன்னொரு மனிதனை துன்புறுத்துவதற்கு மதத்தையோ இனத்தையோ அன்றேல் மொழியையோ பயன்படுத்த வேண்டாம் எனப் பொதுமக்களிடன் கர்தினால் வேண்டுகோள் விடுத்தார்.
ஒருசிலரது எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்காக மக்களின் உயிர்கள் பயன்படுத்தப்படக் கூடாது எனவும் பேராயர் மேலும் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்களினால் கொல்லப்பட்டவர்களின் நினைவாக பொரளை மயானத்தில் நினைவுத்தூபியொன்றை திறந்துவைத்ததன் பின்னரே கர்த்தினால் இந்தக்கருத்துகளை வெளியிட்டார்.
இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள், ஒரு கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் மூன்று ஐந்துநட்சத்திர விடுதிகளில் தற்கொலைக்குண்டுதாரிகளால் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களின் போது 45 வெளிநாட்டவர்கள் உட்பட 250ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் 500ற்கும் மேற்பட்டோர் காயமுற்றமை குறிப்பிடத்தக்கது.