பெருந்தோட்டத் துறையில் களை கொல்லியாகப் பயன்படுத்தப்படும் கிளைபோசேட்டை இறக்குமதி செய்வது தொடர்பில் 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், நீண்ட கலந்துரையாடலுக்குப் பின்னர் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையிலான குழு அண்மையில் கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கமைய இந்த ஒழுங்குவிதிகள் அடங்கிய 2291/44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பூச்சிகொல்லிகள் பதிவாளர் நாயகத்தின் பரிந்துரையின் கீழ் கிளைபோசேட் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது.
இந்த ஒழுங்குவிதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டாலும், அது நிபந்தனைக்கு உட்பட்டதாகவே வழங்கப்படுகிறது என இக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் அரசாங்க நிதி பற்றிய குழுவின் பரிந்துரைக்கு அமைய இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்கள் தொடர்பில் இந்த கிளைபோசேட் பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையடலை அடுத்துத் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்றை நடத்திய பின்னர் எதிர்கால தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ள சட்டமூலங்கள் மற்றும் ஏனைய துணைச் சட்டங்கள் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு முற்கூட்டியே வழங்கப்பட வேண்டும் என்றும், அவை குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் மாத்திரமே அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பெருந்தோட்டத்துறையில் களை கொல்லியாகப் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய சுகாதார தாக்கங்களைக் கருத்தில் கொண்டு கிளைபோசேட் இறக்குமதி தடை செய்யப்பட்டாலும் தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதிக்குக் காணப்படும் தடைகள் மற்றும் வெலிகம தென்னோலைகள் பாதிக்கப்படும் நோயை ஒழிப்பது போன்ற காரணங்களுக்காக வரையறுக்கப்பட்ட வகையில் கிளைபோசேட் இறக்குமதி செய்யப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இதனால் ஏற்படக்கூடிய சுகாதார மற்றும் சூழலியல் தாக்கங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதற்கமைய இது தொடர்பில் எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடலை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கும் அவசியம் குறித்தும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், எம்.ஏ.சுமந்திரன், ஷெஹான் சேமசிங்க, பிரமித்த பண்டார தென்னக்கோன், சுரேன் ராகவன், ஹர்ஷன ராஜகருணா, சமிந்த விஜயசிறி, கௌரவ அநூப பஸ்குவல், (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், நிதி அமைச்சு, ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், பெருந்தோட்ட அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் பூச்சிகொல்லிகள் பதிவாளர் நாயக அலுவலகத்தின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்ததுடன், சுகாதார அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் ஒன்லைன் ஊடாக இணைந்திருந்தனர்.