15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹசரங்கா டி சில்வா 36 ரன்னும், தனஞ்செய டி சில்வா 28 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்டும், நசீம் ஷா, சதாப் கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கியது. இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார்.
இப்திகார் அகமது 32 ரன்கள் எடுத்தார். இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.