7 வருடங்களுக்கு முன்னர் எலைஸா டெபி Elaisha Debbie பிறந்தபோது அவரது தாயார் தனது பிள்ளைக்கு திருவிவிலியம் ( பைபிள்) நூலொன்றை கொடுத்து அதன் இறுதிப் பக்கத்தில் ‘ எப்போதுமே இறைவனில் மகிழ்ந்திரு. உன் இதயத்திலுள்ள விருப்பங்களை அவர் உனக்குத் தருவார் ‘ என்ற வாசகத்தை எழுதியிருந்தார்.
தனது தாயார் குறித்த நினைவுகளை மீட்டுப்பார்க்க அந்த வாசகம் மட்டுமே இன்று டெபிக்கு எஞ்சியுள்ளது. ஏனெனில் டெபியால் இன்று எதனையுமே பார்க்கமுடியாது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2019ம் ஆண்டு இதேபோன்று ஏப்ரல் 21ம் திகதி மட்டக்களப்பிலுள்ள ஸயோன் தேவாலயத்தில் தற்கொலைகுண்டுதாரி நடத்திய தாக்குதலின் போது டெபி தனது இரு கண்களையும் பெற்றோர்களையும் ஒரு சகோதரனையும் பறிகொடுத்திருந்தாள்.
அன்றைய நாளிற்கு பின்னர் டெபியின் உலகம் இருண்டு போனமை அவரது 66வயது பாட்டி அரசரத்னம் யோகம்மாவிற்கு சொல்லோணா பெருந்துயரை தந்திருக்கின்றது.
“அந்தவருடத்தில் தான் அவள் பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்தாள் . மூன்று மாதங்களுக்குள்ளேயே இந்தக் கோரச் சம்பவம் நடந்தேறிவிட்டது.” என கண்ணீர்மல்க கூறினார் யோகம்மா.
டெபியுடன் தொலைபேசியில் பேசியபோது அவளது குரலில் மழலைத் தொனி இன்னமும் மாறதிருப்பதை உணரமுடிந்தது. சிறுவயதிலேயே புத்திக்கூர்மையுடைய சிறுமி என பாட்டி கூறும் போதும் கல்வி தொடர்பாக கேள்விகளைக் கேட்கும் போது அவள் விடையற்றுப் போகின்றாள் .
காயங்களுக்கு சிசிச்சைக்காக பலமாதங்கள், அதனைத் தொடர்ந்து கொரோனாவால் ஏற்பட்ட முடக்க நிலை இவை டெபியின் கல்வி வாழ்க்கையை பாதித்து விட்டதை உணரமுடிகின்றது.
மீண்டும் வழமையான பாடசாலைகள் தொடங்கிவிட்டாலும் பார்வையற்றவர்களுக்கான விசேட பாடசாலைக் கல்வியை இன்னமும் டெபி ஆரம்பிக்கவில்லை என்பதை என்பதை அறிந்தபோது டெபியைச் சூழ்ந்த இருள் கல்வியால் தானும் சற்றும் விலகாதிருப்பதை உணர்ந்து மனது வலித்தது.
டெபியின் பரிதாப நிலை குறித்து ஸயோன் தேவாலயத்தின் தலைமைப் போதகர் ரொஷான் மகேசனிடம் கேட்டபோது “யாழ்ப்பாணத்திலுள்ள பார்வையற்றோர் பாடசாலையில் படிக்க வைக்க ஏற்பாடுசெய்தோம். ஆனாலும் வீட்டார் ஏதோ காரணங்களுக்காக அங்கு செல்லவிரும்பவில்லை. அங்கு தான் செல்லமுடியவில்லை என்றாலும் மட்டக்களப்பிலேயே பார்வையற்றோருக்கான பாடசாலை உள்ளது ” எனக் குறிப்பிட்டார்.
“பார்வையற்றவர்கள் பாடசாலையில் தங்கியிருந்தே கற்கவேண்டும் என்று முதலில் கூறினார்கள் . ஆனால் டெபியை அங்கு தங்கவைப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.”என்கிறார் பாட்டி.
பார்வையற்றோர் பாடசாலைக்கு டெபியை தற்போது தினமும் காலையில் கூட்டிச்சென்று மாலையில் திரும்பி அழைத்துவர ஏற்பாடாகி ஆசிரியரொருவரையும் ஒழுங்கு படுத்தியிருந்தாலும் பார்வையற்றவர்கள் படிக்கும் பிரையில் பேப்பர் இல்லாமல் இருப்பதால் கல்வியைத் இன்னமும் ஆரம்பிக்கமுடியவில்லை என்கிறார் பாட்டி.
அந்த 7வயதுக் குழந்தையின் வாழ்வில் இப்படியும் விதி விளையாட வேண்டுமா என்ற கேள்விகள் என் மனதைத் துளைத்தன.
டெபியின் கண்களைப் பறித்த குண்டுச் சிதறல்களின் பாகங்கள் இன்னமும் அவரது தலைக்குள் இருக்கின்ற போதிலும் அது தொடர்பான சிசிச்சைகளைச் செய்வதற்கான தொழில்நுட்பமும் நிபுணத்துவமும் இலங்கையில் இல்லை என்கிறார் டெபியின் மாமா ரொபர்ட் அந்தனி மோசஸ் . கனடாவைச் சேர்ந்த மருத்துவரொருவர் டெபியைப் பரிசோதித்தபின்னர் அவருக்கான சத்திரசிசிச்சையை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்தாக கூறிய மோசஸ் ‘ ஆனால் அதற்கு அதிகமான பணம் தேவை அதற்கான முயற்சிகளை எடுத்துவருகின்றோம்’ எனக் கூறுகின்றார்.
கேள்விக்குறியாக நிற்கும் டெபியின் கல்வி ஒருபுறம் மீண்டும் அவளால் பார்க்கவே முடியாதா என்ற ஏக்கம் ஒருபுறமாக அவளது பாட்டியின் ஆதங்கங்கள் வெளிப்பட்டன.
பல்வேறு மேற்குலக விசேட மருத்துவர்கள் டெபியின் பார்வையை மீளக் கொண்டுவருவது தொடர்பாக நம்பிக்யையற்ற கருத்துக்களை வெளிப்படுத்தியிருப்பினும் இந்தியாவிற்கு கொண்டுபோனால் அவளுக்கு பார்வை திரும்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவிடலாம் என்பது பாட்டி யோகம்மாவின் நம்பிக்கையாக இருக்கின்றது.
இந்தியா சென்று சிகிச்சையளிப்பதற்கான செலவுகளை கத்தோலிக்க திருச்சபை ஏற்பதாக உறுதிமொழியளித்திருந்தாலும் கொரோனா காரணமாக இந்தியாவிற்கு செல்லமுடியவில்லை என்கிறார் பாட்டி.
டெபியின் இரண்டு பெற்றோரும் ஞாயிறு கிறிஸ்தவ பாடசாலையில் ஆசிரியர்களாக விளங்கினர். ஸயோன் தேவாலயத்தில் ஒரு புத்தகக் கடையை வைத்திருந்தனர். அவர்களது கடைக்கு சற்றே முன்பாக தற்கொலைதாரி குண்டை வெடிக்கவைத்தபோது இருவரது உயிரும் காவுகொள்ளப்பட்டது. அவர்களோடு டெபியின் சகோதரனும் இறந்துபோனான் . இந்தச் சம்பவத்தில் டெபியோடு அவளது சித்தியும் கடுமையான காயங்களுக்குள்ளாகியிருந்தார்.
ஸயோன் தேவாலயம் உட்பட பல அமைப்புக்கள் இவர்களுக்கு உதவிகளைச் செய்தபோதும் இவர்களுக்கான சிசிக்சைகளுக்கு அதிகமான செலவுகள் ஏற்படுவதாகவும் மேலதீகமாக சிசிச்சைகளை வழங்குவதெனில் அதற்கு இன்னமும் பல மடங்கு தேவைப்படும் என்பதையும் குடும்ப உறவினர்களின் கருத்துக்களில் இருந்து அறியமுடிகின்றது.
இத்தனை இழப்புக்கள் சொல்லோணா துயரங்களுக்கும் மத்தியிலும் அதிகமாக பாதிக்கப்பட்ட டெபியின் வார்த்தைகள் தான் அந்தக்குடும்பத்தினருக்கு ஆறுதலாகவும் தேறுதலாகவும் அமைந்திருக்கின்றது.
“உயிரிழந்தவர்களை நினைத்து எமது குடும்பத்தவர்கள் சோகமாக இருக்கின்றபோது டெபி, எம்மைப்பார்த்து ஏன் நீங்கள் அழுகின்றீர்கள் அவர்கள் இறைமகன் இயேசுக் கிறிஸ்துவோடு விண்ணகத்தில் இருக்கின்றார்கள் . மீட்பராம் இயேசு அவர்களைக் கவனித்துக்கொள்வார்” என கூறுவாள் என்கின்றார் டெபியின் மாமி வேதனி மோசஸ்.
டெபியின் சித்தி 25 வயதுடைய ரெபேக்கா அரசரட்ணம் கடுமையான எரிகாயங்களுக்குட்பட்டிருந்தார். ஏற்கனவே அவருக்கு பலதடவை பிளாஸ்டிக் சத்திரசிசிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னமும் பல மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன. ‘ குண்டு வெடித்தபோது நான் எனது தாயாருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். ‘ என்கிறார் ரெபேக்கா. குண்டுவெடித்தபின்னர் நான் சுயநினைவற்று விழுந்துவிட்டேன். ‘ நான் நினைவுதிரும்பியதும் அனைத்து இடங்களிலும் நெருப்பு எரிவதையே கண்ணுற்றேன்’ என்கிறார்.
தனது தாயாரைப்போன்றே ஞாயிறு பாடசாலையின் ஆசிரியராக வேண்டும் என்ற கனவு டெபிக்கு உள்ளது. தான் வளர்ந்தபின்னர் ஆயிரமாயிரம் மக்களுக்கு நற்செய்தியை எடுத்துச்சொல்ல வேண்டும் அதனைப் பரப்பவேண்டும் என அவள் கூறுகின்றாள். ‘ இயேசு எனக்கு ஏற்கனவே கண்களை உருவாக்கிவிட்டார்’ எனக்கூறும் டெபி ‘ தனக்கு தேவையான நேரத்தில் அவர் அதனைத் தருவார் ‘ எனக்கிறார் நம்பிக்கையோடு.
ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் தமது குடும்பத்தினர் இயேசுக் கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கை அதிகரித்துள்ளதாக டெபியின் குடும்பத்தினர் கூறுகின்றனர். ‘ அவரே எமது ஒரே நம்பிக்கை ‘ என்கிறார் டெபியின்மாமா ரொபர்ட் . டெபியின் சித்தி ரெபேக்கா தாம் தன்னுடைய வாழ்க்கையை இயேசுவை நோக்கிய மீளவழிப்படுத்திவிட்டதாக கூறுகின்றார். ‘ அவரே எமது பலம். இந்த கடினமான காலத்தில் அவரது பலத்தைக்கொண்டே நாம் வாழமுடியும் ‘ என்கிறார் அவர்.
எவ்வளவு இழப்புக்களைச் சந்தித்தபோதும் நம்பிக்கையே வாழ்க்கை என்பதை டெபியும் அவரது குடும்பத்தினரும் எமக்கு கற்றுத்தருகின்றனர். அவர்களது குடும்பத்தினரை இந்த வேளையில் நினைத்து பிரார்த்திப்பதோடு மட்டும் எமது கடமை முடிந்தது என்று இல்லாமல் டெபியின் கல்வியை நல்ல தடத்திற்கு கொண்டுவருவதற்கும் அவர்களது சிசிச்சைக்கு உதவுவதற்கும் நல்மனமுடைய அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் முன்வரவேண்டும். டெபியின் பாட்டியின் வங்கிக் கணக்கு இலக்கம் இதோ
இந்தக் கட்டுரையின் சில பகுதிகள் என்ற www.religionunplugged.com இணையத்தளத்தில் வெளிவந்தவை. அந்த இணையத்தளத்திற்கு மிக்க நன்றிகள்