ஐ.நா. பொதுச்சபை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார்.
நியூயார்க்கில் நேற்று முன்தினம் அவர் ஐ.நா. ெபாதுச்சபையில் உரையாற்றினார். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்களையும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசையும் அவர் சந்தித்தார்.
இத்துடன் தனது அமெரிக்க பயணத்தின் முதல் பகுதியை நிறைவு செய்து 2-வது பகுதி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேற்று வாஷிங்டன் பயணமானார். முன்னதாக இந்திய பத்திரிகையாளர்களை நியூயார்க்கில் சந்தித்து பேசினார். அப்போது தனது முதல் பாதி அமெரிக்க பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
உலகின் தற்போதைய நிலையை இந்த ஐ.நா. பொதுச்சபை பிரதிபலிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் தற்போதைய உலகுக்கு இந்தியா மிகவும் முக்கியமானது ஆகும். நாம் ஒரு பாலம், ஒரு குரல், ஒரு பார்வை, ஒரு ஊடகமாக இருக்கிறோம்.
உலக அளவில் தெற்கின் குரலாக இந்தியா பரவலாகக் கருதப்படுகிறது. இந்தியா எப்போதும் பல வளரும் நாடுகளுக்காக பேசுகிறது. சர்வதேச மன்றங்களில் அவர்களின் பிரச்சினைகளை அழுத்தமான முன்னிலைப்படுத்துகிறது.
உலகப் பொருளாதாரத்தில் உணவு மற்றும் எரிபொருளின் விலை, உரங்கள் பற்றிய கவலை, கடன் நிலைமை ஆகியவை தற்போது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இது பல நாடுகளுக்கு ஆழ்ந்த கவலைகளை கொடுத்துள்ளது.
இந்த பிரச்சினைகள் செவிசாய்க்கப்படாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த உணர்வுகளை பேசுவது, இதற்காக குரல் கொடுப்பது, இந்தியாதான். கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த ஐ.நா. பருவநிலைமாற்ற மாநாடு மற்றும் சமீபத்திய பிராந்திய சந்திப்புகளில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து பலரும் என்னிடம் பேசினர்.
இது நிலப்பரப்பு மற்றும் தலைமைத்துவம் ஆகிய இரண்டும் சார்ந்தது ஆகும். இது இந்தியாவின் முக்கியத்துவத்தை உருவாக்கியுள்ளது. அந்தவகையில் இந்த உலகில் இந்தியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதற்கு பிரதமரின் தலைமைத்துவம், அவரது பிம்பம், உலக அரங்கில் அவர் என்ன செய்துள்ளார் என்பதும் தான் காரணம்.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார். இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் பிரேசிலுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதற்கு ரஷியா ஆதரவு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்சபையில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவ் பேசும்போது கூறுகையில், ‘இந்தியாவும், பிரேசிலும் முக்கிய சர்வதேச செயல்பாட்டாளர்களாகவும், கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கு தகுதியான உறுப்பினர்களாகவும் இருப்பதை கவனிக்கிறோம்’ என்று தெரிவித்தார். பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போதும் இந்த கருத்தை அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.