கட்டுப்பாடற்ற தொழில்மயமாதலே காலநிலை மாற்றம் ஏற்படுகிறது ; ஜனாதிபதி உரை!

0
119
Article Top Ad

அபிவிருத்தியடைந்த நாடுகளின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாதலே காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்றும், இதன் விளைவுகளையே வறிய நாடுகள் அனுபவிக்க நேரிட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எகிப்தின் ஷாம் அல்-ஷேக் நகரில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, போதுமான நிதி இல்லாததால் வறிய நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதன் விளைவாக, இந்த நாடுகள் தங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க போராடும் அதேவேளையில் பொருளாதார ரீதியாக முன்னேறவும் போராடுவதனால், இந்த நாடுகள் இரட்டை ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனவே, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் தமது நிதியை இரட்டிப்பாக்குவதன் மூலம் அபிவிருத்தியடைந்த நாடுகள் கிளாஸ்கோவில் வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

காலநிலை தொடர்பான பாதிப்புகளை அடையாளப்படுத்தும் பேரவையால் முன்மொழியப்பட்டதற்கமைய, எதிர்கால சவால்களுக்கு பதில் வழங்கக்கூடியவாறு சர்வதேச விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் ஒரு விசேட அறிக்கையை உருவாக்குவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

COP 28 இற்காக நாம் டுபாய் செல்வதற்கு முன், ‘காலநிலை நிதி’ மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் மட்ட கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி, கோப்-27 இல் முன்மொழிந்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிறைவான உயிர்ப் பல்வகைமையைக் கொண்டுள்ள இலங்கை, காலநிலை மாற்றத்தின் சவால்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை முன்னெடுத்த நடவடிக்கைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

2030 ஆம் ஆண்டளவில் காபன் வெளியேற்றத்தை 14.5 சதவீதமாக குறைக்கும் செயன்முறையை இலங்கை ஆரம்பித்துள்ளது. கடல் சார்ந்த பிரதேசங்களில் திட்டமிடலை ஆரம்பித்துள்ளதோடு காலநிலை அலுவலகம் ஒன்றை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்தது. மார்ச் 1 ஆம் திகதியை உலக கடல் புல் தினம் எனும் ஐ.நா பிரகடனத்தை தலைமை தாங்கியமை, சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நிலைபேண்தகு பயன்பாட்டிற்கான தேசியக் கொள்கையை அமுல்படுத்துதல், காலநிலை மற்றும் சமுத்திரங்களில் ஏற்படக்கூடிய அபாயம் மற்றும் பாதிப்புக்கான பொதுநலவாயத்தின் முன்னோடி திட்டத்தை செயல்படுத்துதல், சதுப்புநில சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரம் பற்றிய பொதுநலவாயத்தின் Blue Charter Action Groupஐ வழிநடத்துதல், நிலக்கரி சக்தி மூலமான ஆற்றல் திறனை மேலும் அதிகரிக்காதிருத்தல், படிம எரிபொருள் மானியங்களை படிப்படியாக நீக்குதல், 2030 ஆம் ஆண்டுக்குள் மின்சார உற்பத்திக்காக 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இலக்காகக் கொள்ளுதல், வொஷிங்டனில் அண்மையில் வழங்கப்பட்ட உலகளாவிய மீத்தேன் உறுதிமொழியில் இணைதல் என்பன அதில் அடங்கும்.

இருந்தாலும், காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு UNFCC மற்றும் பரிஸ் உடன்படிக்கையை பூர்த்தி செய்வதற்கான பரந்த அளவிலான நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும். காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் ஆற்றலின்மை மிகப்பெரிய தடையாக உள்ளது. எனவே ஆற்றல்களை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.

இப்பிரச்சினையிலிருந்து மீள்வதற்காக நாம், பல்கலைக்கழக மாதிரியில் இதுவே முதல் வகை எனக் குறிப்பிட்டுக் கூறும் வகையில், சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் நிறுவ வேண்டும். அதன் துணை நிறுவனம் மாலைதீவில் அமைக்கப்பட வேண்டும்.

இப்பல்கலைக்கழகமானது, விஞ்ஞானிகள், சூழலியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்போர், அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவோர் மற்றும் உலகின் அனைத்து நாடுகளையும் சேர்ந்த மாணவர்களுக்கும் தமது எல்லைகளைத் தாண்டி கற்கைகளை மேற்கொள்ளும் உலகளாவிய மையமாக செயற்படும்.

உத்தேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகமானது காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் மற்றும் அதனுடன் ஒத்திசைவாக்கும் ஆற்றல்களை உருவாக்கும் வகையிலான குறுகிய கால கற்கைநெறிகள் மற்றும் பட்ட பின்படிப்புக்களை தொடரும் வாய்ப்புகளை வழங்கும். இப்பல்கலைக்கழகமானது காலநிலை மாற்றத்தில் இருந்து உலகைப் பாதுகாப்பதற்கு தேவையான அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மற்றும் டிஜிட்டல் மாற்றங்களை வழங்குவதற்காக புதிய தலைமுறையினரின் ஆற்றல்களை மேம்படுத்தும், காலநிலை மாற்ற சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பில் உள்நாட்டில் அறிவூட்டும் வாகனமாக இது செயற்படும்.

ஸ்தாபிக்கப்படும் உயர்கல்வி நிறுவனமானது – பல பங்குதாரர் கூட்டுமுயற்சியாகவும் தேசிய எல்லைகளை தாண்டிய ஒரு நிறுவனமாகவும் திகழ்வதற்காக பொதுநலவாய அமைப்பு, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்தரப்பு நிறவனங்கள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும்.இலங்கையின் பிரேரணைக்கு சர்வதேச சமூகத்தின் விரிவான ஆதரவும் ஒப்புதலும் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.

காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகள் உலகளாவிய களத்தில் முன்வைக்கப்பட வேண்டியிருப்பதனால், அதிக நம்பிக்கையுடன் அடுத்த ஆண்டு மீண்டும் சந்திப்போம். இருப்பினும், COP 26 உட்பட முந்தைய முடிவுகளின் முன்னெடுப்புகள் மிகவும் வருத்தமளிக்கிறது.

காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகள் உலகளாவிய களத்தில் வழங்கப்பட வேண்டியிருப்பதால், அதிக நம்பிக்கையுடன் அடுத்த ஆண்டு மீண்டும் சந்திப்போம். இருப்பினும், COP 26 உட்பட முந்தைய முடிவுகளின் சரிபார்ப்புச் செயலாக்கம் மிகவும் வருத்தமளிக்கிறது.

படிம எரிபொருள் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த G7 மற்றும் G20 அமைப்புக்கள் பசுமை ஹைட்ரஜனின் முக்கிய ஊக்குவிப்பாளர்களாக இருந்தபோதும் நாளடைவில் அவர்கள் அதிலிருந்து பின்வாங்கி படிம எரிபொருளை பயன்படுத்துவதே வருத்தமளிக்கும் அடிப்படை உண்மையாகும். இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அபிவிருத்தியடைந்த நாடுகள் தங்கள் பொறுப்புகளிலிருந்து விலகுவதை விட காலநிலை மாற்றத்திலிருந்து மீள்வதற்கான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். காலநிலை நிதியுதவியானது தனது இலக்கை தவறவிட்டது என்பது இரகசியமல்ல.

காலநிலை சவால்களுக்கு நிதியளிப்பதற்காக ஆண்டுதோறும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 100 பில்லியன் டொலர்கள் பெட்டகத்தில் இல்லை என்பது நகைப்புக்குரியது. பல அபிவிருத்தியடைந்த நாடுகள் காலநிலை சவால்களுக்காக தாம் முன்னெடுக்க வேண்டிய பங்களிப்பை புறக்கணிப்பதே பொருத்தமானதென நினைக்கின்றனர். பாதுகாப்பு நலன்களுக்காக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் உக்ரைன் போரின் இரு தரப்பிலும் இருக்கும் நாடுகள், 350 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிக தொகையை போருக்காக செலவழிப்பதில் எந்த கவலையும் கொள்ளவில்லை.

எனினும் தற்போது பாதுகாப்பு தேடவேண்டிய ஆபத்தில் உணவுப் பாதுகாப்பின்மை விடயம் காணப்படுகிறது. இது போருக்கு முன்பு அனுபவித்திராத அளவுக்கு அதிகரித்துள்ளது.

அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைச் சேர்ந்த பலர் மூன்று வேளை உணவுக்கே வழியில்லாமல் இருக்கின்றார்கள். குறிப்பாக ஆப்பிரிக்காவில் 30 முதல் 40 மில்லியன் மக்கள் பட்டினியில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த யுத்தமானது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கும், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகங்களின் தட்டுப்பாட்டுக்கும் காரணமாக அமைந்ததுடன் இது பசிக்கு எதிரான போராட்டமாக நம் வீடுகளுக்கு வந்துள்ளது.

எதிர்பார்த்தபடி, இதே நாடுகளால் உறுதியளிக்கப்பட்ட மிகவும் அவசியமான காலநிலை நிதியைக் குறைக்க வழிவகுத்தது. போருக்குப் பொறுப்பான தரப்பைக் கண்டுபிடிப்பது அல்ல, போரை முடிவுக்குக் கொண்டுவரும் தரப்பைக் கண்டுபிடிப்பதே எமக்குள்ள பிரச்சினையாகவுள்ளது.

எங்களுக்கு இந்த நிதி ஏன் தேவை? காலனித்துவ ஆட்சிகளின் போது ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பெறுமதியான வளங்களை ஐரோப்பாவிற்கு மாற்றியதுடன் அவர்களின் நாடுகளை தொழில்மயமாக்க இவை பயன்படுத்தப்பட்டன. இந்தக் கொள்ளையின் காரணமாகவே நாங்கள் ஏழைகள் ஆனோம்.

அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாக்கலும் காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தன. இதன் விளைவுகள் காரணமாகவே ஏழை நாடுகளாகி பாதிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். போதிய நிதி இல்லாததால் எங்களின் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. எனவே, தெற்கில் உள்ளவர்கள் இரட்டை ஆபத்தை எதிர்கொள்கின்றனர். நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க போராடும் அதே வேளையில் பொருளாதார ரீதியாக முன்னேறவும் போராட வேண்டியுள்ளது.

எனவே அபிவிருத்தியடைந்த நாடுகள் தங்களின் நிதியுதவியை இரட்டிப்பாக்குவதாக கிளாஸ்கோவில் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவது கட்டாயமாகும். காயத்திற்கு அவமானம் சேர்க்கும் வகையில் காலநிலை மாற்றங்களும் தீவிரமாக அதிகரித்து வருகின்றன. மேலும் அவற்றின் தாக்கங்கள் மிகவும் விலை உயர்ந்தவை.

தொழில்மயமான உலகில் இருந்து வெளியேறும் உமிழ்வின் அதிகரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்நோக்கியிருக்கும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இழப்புக்களும் சேதங்களும் பற்றிய பிரச்சினை இப்போது எங்கள் முறையான நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான தரப்பினர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி அளிப்பதை உறுதி செய்தாக வேண்டும்.

காலநிலை தொடர்பான பாதிப்புகளை அடையாளப்படுத்தும் பேரவையால் முன்மொழியப்பட்டபடி, எதிர்கால சவால்களுக்கு பதில் வழங்கக் கூடியவாறு சர்வதேச விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் ஒரு விசேட அறிக்கையை உருவாக்குவது பொருத்தமானதாக இருக்கும்.

உறுதியளித்த வகையில் நிவாரணங்களை வழங்குவதில் அபிவிருத்தியடைந்த நாடுகள் தோல்வி கண்டுள்ள நிலையில், இதனைக் கருத்திற் கொண்டாயினும் COP 28 இற்காக நாம் டுபாய் செல்வதற்கு முன், காலநிலை நிதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் மட்ட கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.