– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, ‘அடுத்த வருடத்துக்குள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுவேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விரைவில் பேசுவேன் என்றும் தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்துத் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்முடன் பேசுவதென்றால் முக்கியமாக புதிய அரசமைப்பு தொடர்பில்தான் அந்தப் பேச்சு அமைய வேண்டும்.
தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு புதிய அரசமைப்பின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த விடயம் சம்பந்தமாக எமது நிலைப்பாட்டை விளக்கி நாம் எழுத்துவடிவிலான கோரிக்கைகளை ஏற்கனவே இலங்கை அரசிடம் சமர்ப்பித்திருக்கின்றோம். அந்தக் கோரிக்கைகள் மிகவும் விவரமானமானவை.
ஆனால், அதன் அடிப்படையில் ஒன்றும் நடைபெறவில்லை. ஆட்சிகள் மாத்திரம் மாறியிருக்கின்றன. ஒவ்வொரு ஆட்சியிலும் தாங்கள் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று அரச தரப்பினர் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை.
இந்த விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு வித்தியாசமாக – நம்பிக்கைக்குரியதாக – முன்னேற்றம் காணக்கூடிய வகையில் கையாளப்படுமாக இருந்தால் , தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் என்ற வகையில், எங்களால் இயன்ற ஒத்துழைப்பை நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழங்குவோம்” – என்றார்.