விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முனைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட யாழ் மேயர் மணிவண்ணன் பிணையில் விடுவிப்பு!

விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையின் நிறத்தை ஒத்த நிறத்தில் இந்தச் சீருடை இருப்பதாகக் கூறி அதைப் பார்த்து பொலிஸார் மிரள்வது, போர் முடிந்து ஓர் தசாப்பதமாகியும் அந்த திகைப்பில் இருந்து பொலிஸார் இன்னும் மீளவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது- சுமந்திரன்

0
405
Article Top Ad

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்றிரவு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால்  பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் மீது தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பரப்புக்குள் சபை நிர்வாகத்துக்கு உட்பட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சீருடை விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கத்தைக் காட்டுவதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்றிரவு 8 மணியளவில் அழைக்கப்பட்ட மாநகர மேயர் நேற்று  அதிகாலை 2 மணியளவில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப்  பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் நேற்றிரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது மாநகர மேயர் வி.மணிவண்ணன் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 20 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

இலங்கை தண்டனைச் சட்டக்  கோவை பிரிவுகள் 120, 332, 343 ஆகிய  இலக்கங்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க அனுமதிக்க வேண்டும் எனப் பொலிஸார்  கோரிக்கை விடுத்தனர். அதை ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆட்சேபித்தார்.

”யாழ்ப்பாணம் மாநகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட மாநகர சபை கட்டளைச் சட்டம் 73, 78, 83 ஆகிய பிரிவுகளின் கீழான பணியைப் பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் நிறைவேற்றியவர் என்ற காரணத்துக்காக அவரைத் தண்டிக்க முடியாது. அதேநேரம் விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையின் நிறத்தை ஒத்த நிறத்தில் இந்தச் சீருடை இருப்பதாகக் கூறி அதைப் பார்த்து பொலிஸார் மிரள்வது, போர் முடிந்து ஓர் தசாப்பதமாகியும் அந்த திகைப்பில் இருந்து பொலிஸார் இன்னும் மீளவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது” என்று வாதிட்டார் சுமந்திரன்.

இதேநேரம் இது மாநகர சபையின் தீர்மானத்தை நிறைவேற்றிய செயல் என்பதோடு அதனை உறுதி செய்யும் வகையில் மாநகர சபையின் உறுப்பினரும் மற்றுமோர் சட்டத்தரணியுமான மு.றெமீடியஸும் கூட மணிவண்ணன் சார்பில் நீதிமன்றில் ஆஜராகினார்.

மாநகர சபை ஊழியர்கள் அணிந்த உடையில் விடுதலைப்புலிகளின் அடையாளம் சார்பில் ஏதும் உண்டா என நீதிவான் வினவினார். இதற்குப் பொலிஸார் இல்லை எனப் பதிலளித்த நிலையில் மேயரை 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் நீதிவான் விடுவித்தமையோடு வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.