அன்னை பூபதியின் நினைவேந்தல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கில் உணவுபூர்வமாக அனுஷ்டிப்பு!

0
425
Article Top Ad

தியாக தீபம் அன்னை பூபதியின் 33ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் அரச புலனாய்வாளர்கள் ஆகியோரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் நேற்று  உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

இதன்படி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காலை நினைவஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர் தூபி, மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல்போனவர்களின் உறவினர்களாலும் அன்னை பூபதிக்கு அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் உள்ள, அன்னை பூபதியின் சமாதிக்கு அருகிலும் நினைவஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

1932 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி பிறந்த அன்னை பூபதி, இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தினரை வெளியேற்ற வலியுறுத்தி 1988 மார்ச் 19ஆம் திகதி மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலயத்திற்கு முன்பாக நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

அவரது கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளபடாத நிலையில் போராட்டத்தை ஆரம்பித்து 31ஆவது நாளான 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி அவர் மரணித்தார்.