கொரோனாத் தொற்று மீண்டும் உச்சமடைய அரசின் அசமந்தப்போக்கே காரணம்-ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் பகிரங்கக் குற்றச்சாட்டு

0
256
Article Top Ad

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு சரியான கவனம் செலுத்தத் தவறியதால் மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது.

பி.சி.ஆர். பரிசோதனைகளை அரசு குறைத்திருந்தது எனவும், இதன் விளைவாக அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியைக் காட்டியிருந்தது எனவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

சமீபத்திய பி.சி.ஆர். பரிசோதனை மூலம், கிராமப்புறங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளும் அதிகரித்து வருவதால் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன என அரசு கூறியதாலேயே பொதுமக்களும் கொரோனா குறித்த அச்சத்தைத் தணித்து, நிதானமாகப் பயணிக்கத் தொடங்கினர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
……