இலங்கையில் நாடுதழுவிய முடக்க நிலை நடைமுறைப்படுத்தப்படமாட்டாது -பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உத்தரவாதம்

0
311
Article Top Ad

சமீப வாரங்களாக இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்ற போதும் நாடுதழுவிய முடக்கநிலையை நடைமுறைப்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாடுதழுவிய முடக்கநிலையை நடைமுறைப்படுத்தாதிருப்பதற்கு அத்தகைய முடக்கநிலைகள் பொருளாதாரத்தின் மீதும் சமூகத்தின் மீதும் செலுத்தும் தாக்கங்களே காரணம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றையதினம் வருகைதந்த சீனப்பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்வுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற பரஸ்பர பேச்சுவார்ததையின் போதே பிரதமர் இந்த உத்தரவாதத்தை வழங்கினார்.

‘ கொரோனாவிற்கு பிந்திய பொருளாதார மீட்பு நடவடிக்கை விடயத்தில் இன்னமும் பல விடயங்கள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன என்பது குறித்து நீங்களும் உடன்படுவீர்கள் என நம்புகின்றேன். உலகெங்கிலுமிருந்து முதலீடுகளை ஈர்த்துக்கொள்வதே எமது முன்னுரிமைக்குரிய விடயங்களாக காணப்படுகின்றன. இலங்கையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்’ எனப் பிரதமர் சீனப்பாதுகாப்பு அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றுநோய்க்கு மத்தியிலும் உயர் மட்ட சீன அதிகாரி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமையை பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.

இன்று முற்பகல் சீனப்பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றையதினம் இலங்கையின் முன்னணி ஆங்கில இணையத்தளமொன்றுக்கு கருத்துவெளியிட்டிருந்த இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் நாட்களில் அதிகமான தொற்றாளர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து இனங்காணப்படும் பட்சத்தில் அந்தப்பகுதிகள் முடக்கநிலைக்கு உள்ளாக்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளமையால் மக்கள் தேவையான பொருட்களை க் கொள்வனவு செய்து சேமித்துவைத்திருக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.

பல நாட்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்து சேமித்துவைத்திருப்பது நல்லது எனத்தெரிவித்த இராணுவத் தளபதி அனைத்துமே எதிர்வரும் நாட்களில் இனங்காணப்படும் தொற்றாளர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தே தங்கியுள்ளது எனக்குறிப்பிட்டார்.