சுமந்திரனை இல்லாதொழிக்க யாரேனும் முயற்சிக்கின்றனரா? விபத்தையடுத்து இந்தியாவின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சந்தேகம்

0
394
Article Top Ad

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது தொடர்பாக இந்தியாவின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆ.கே. ராதாகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி பத்திரிகைகளிலொன்றான இந்துப்பத்திரிகையின் இலங்கைக்கான செய்தியாளராக பணிபுரிந்தவரான ஆ.கே. ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

‘ சுமந்திரனின் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. விமானநிலைய அதிவேகவீதியில் மற்றுமொரு விபத்திற்குள்ளானதாக சற்றுமுன்னர் செய்தியொன்றைப்பார்த்தேன். இது யாரேனும் அவரை ( அரசியல்) வெளியில் இருந்து இல்லாதொழிக்க முற்படுவதன் காரணமாகவா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் அதிஷ்டமவசமாக உயிர்தப்பியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இந்தவிபத்தில் சுமந்திரனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கொழும்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த அவரின் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

சுமந்திரன் பயணித்த வாகனம் கடுமையாக விபத்துக்குள்ளானதில் முழுமையாக சேதமடைந்துள்ளது.

மழை பெய்து கொண்டிருந்த போது அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வாகனம் வீதியில் வழுக்கி, பலமுறை உருண்டு விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும் வேறு வாகனம் ஒன்றின் மூலம் அவர் கல்முனை நோக்கி பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றமைக்காக அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகும் பொருட்டு அங்கு செல்லும் வழியிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.