விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களையும் நினைவுகூர இடமளிக்கப்படவேண்டும்- இறுதியுத்தத்தில் பங்கேற்ற இலங்கையின் முக்கிய இராணுவத் தளபதி சுட்டிக்காட்டு

0
346
Article Top Ad

இலங்கை இராணுவத்துடன் போரில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் இயக்க அங்கத்தவர்களை நினைவுகூர்வதற்கும் இடமளிக்கப்படவேண்டும் என இறுதிப்போரின் போது 57வது படையணியின் தளபதி (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.

அத தெரண தொலைக்காட்சியினால் ‘வெற்றிமயமான 12ம் வருடம் ‘ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றபோது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி கேட்பவர் ( சதுர டி அல்விஸ்) – யுத்தத்தின் போது இந்த நாட்டின் அன்னையர்களுக்கு பிறந்து உயிரிழந்த பிள்ளைகளும் உள்ளனர். போர் நடைபெற்ற வேளை அவர்கள் பயங்கரவாதிகளாக இருந்தார்கள் நீங்கள் பயங்கரவாதத்தைத்தான் இல்லாதொழிந்திருந்தீர்கள். ஆனாலும் அந்த அன்னையர்கள் தொடர்ந்தும் அழுதுகொண்டிருக்கின்றனர். ஒன்று அவர்களின் புதல்வர்கள் காணமல்போயுள்ளனர். அன்றேல் புதல்வர்களின் மரண அத்தாட்சிப்பத்திரம் கூட இல்லாத நிலை உள்ளது. அவர்கள் தொடர்ந்தும் அழுதுகொண்டிருக்கின்றனர். தீபத்தை ஏற்றுவதற்கும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர். யுத்தத்தின் போது படையணியொன்றுக்கு தலைமைதாங்கியவர் என்ற வகையில் உங்களின் கருத்து என்ன?

பதிலளிப்பவர் ( ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்) -நல்ல வேள்வி. தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் காலத்திற்கு பொருத்தமான நல்லதொரு கேள்வி. தவறிப் போன அன்றேல் திசைமாறிய எமது பிள்ளைகள் அன்றேல் சகோதர சகோதரிகள். இந்த நாட்டில் பிறந்த பிரஜைகள் தவறான வழியில் சென்று இந்த நாட்டைப் இரண்டாக கூறுபோடுவதற்கு பயங்கரவாத தலைவர்களுடன் இணைந்து எமக்கெதிராக நேருக்கு நேர் யுத்தம் புரிந்து காயமுற்று உயிரிழந்தவர்கள் இவர்கள் இந்த நாட்டிற்கு உரித்துடைய பிரஜைகளாவர். நான் இல்லாது போனால் எனது தாய்க்கு இருக்கும் அதேவலிதான் அந்தப் பிள்ளையின் தாய்க்கும் இருக்கும். பயங்கரவாதியாக மாறுவது தவறான சிந்தனையினால் அல்லவா ? அந்தவகையில் நாம் ( உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை) சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்தாது நாம் எமது சகோதர சகோதரிகளுக்காக நாம் தேசிய மட்டத்தில் அவர்களின் பிள்ளைகளை நினைவுகூருவதற்கு தேசியமட்டத்தில் நாம் ஏற்பாடொன்றைச் செய்யவேண்டும் என நான் எண்ணுகின்றேன்.இதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. உயிரிழந்த அன்றேல் காயமுற்றவர்களில் நூற்றுக்கு 95 மானவர்கள் தமது விருப்பின் படி இயக்கத்தில் இணைந்தவர்கள் அல்ல அவர்கள் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டவர்கள். சில தமிழ் அரசியல் கட்சிகள் இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஆதாயம் தேடப்பார்க்கின்றனர் . இதனை நாம் இல்லாது செய்யவேண்டும். நாம் அந்தப்பெற்றோருக்கு ஆறுதலையும் பலத்தையும் கொடுக்கவேண்டும். பெருமையுடன் சென்று தாம் இழந்த பிள்ளைகளை நினைவுகூருவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் அதில் என்ன பிரச்சனை இருக்கின்றது.