பாதிப்பு ஏற்படாதவாறு பயணக் கட்டுப்பாட்டை செயற்படுத்துங்கள்! – அதிகாரிகளுக்கு கோட்டா ஆலோசனை

0
222
Article Top Ad

 

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும்போது பொதுமக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையில் அதனைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

இன்றிரவு 11 மணி முதல் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக கொரோனாத் தடுப்புச் செயலணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையே இன்று காலை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தாலும் தொழிற்சாலைகளைத் தொடர்ந்தும் நடத்திச் செல்லவும், மருந்தகங்களைத் திறந்து வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

அத்துடன் பேக்கரி உற்பத்திகளைத் தொடர்ந்தும் மேற்கொள்ளவும், அவற்றை மக்களுக்கு விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதிக்குமாறும், அத்துடன், கப்பல் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களை திறந்து வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலின்போது, அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு பிரதேச செயலாளர் ஊடாக அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்கவும், வீதிச் சோதனை நடவடிக்கைகளுக்காகப் பொலிஸாருடன் இராணுவத்தையும் இணைந்துக்கொள்ளவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அரச அதிகாரிகள் மற்றும் பொறுப்புவாய்ந்த தரப்பினர் ஊடக சந்திப்புக்களில் மக்களை அச்சுறுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதற்குப் பதிலாக அது தொடர்பில் தனக்கு அறிவிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்றும், இதுவரையில் எடுத்த தீர்மானங்களும் இனி எடுக்கும் தீர்மானங்களும் விசேட குழுக்களின் ஆலோசனைகளுக்கமையவே இருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், மக்களுக்காக எந்தவொரு சரியான தீர்மானத்தை எடுப்பதற்கும் தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச இந்தக் கலந்துரையாடலில் தெரிவித்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.