பாணந்துறையில் பிள்ளைகளுக்கு உணவுவாங்கச் சென்றவர் பிணமாக பெட்டியில் வந்த சோகக்கதை; பொலிஸ் தாக்குதலே காரணம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

0
453
Article Top Ad

பொலிஸாரின் தாக்குதலிலேயே தமது கணவர் உயிரிழந்ததாக பாணந்துறையில் உயிரிழந்தவரின் மனைவி உறுதிபடத்தெரிவித்துள்ளார். பொலிஸ் ஜீப்பிலிருந்து தப்பியோட முற்படுகையில் அவர் உயிரிழந்தததாக கூறப்படும் கதை பொய்யானது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பசிவயிற்றிலுள்ள பிள்ளைகளுக்கு உணவுவாங்குவதற்காக வெளியே சென்ற தனது கணவர் பிணமாக பெட்டியில் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாணந்துறையில் உயிரிழந்தவரின் மனைவி ஆழ்ந்த கவலைவெளியிட்டுள்ளார். பொலிஸாரால் தமது கணவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கூலி வேலைசெய்து பிழைப்பு நடத்திவந்த தமது கணவன் பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்தாக அவரது மனைவி ஆணித்தரமாக சிங்களத்தில் பேசும் காணொளி வெளியாகியுள்ளது

தனக்கும் பெற்றோர்கள் இல்லை தன்னை பார்த்துக்கொண்ட கணவரும் தற்போது இல்லை என பொலிஸ் அதிகாரி முன்பாக இறந்தவரின் மனைவி கதறியழும் காட்சி மிகுந்த வேதனையளிக்கின்றது.

இன்று காலை, பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததில் நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக  செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக வடக்கு பாணந்துறை பொலிஸின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் மற்றும் சார்ஜென்ட் ஒருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

தனிமைப்படுத்த சட்டத்தை மீறிய நிலையில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பிக்க முயற்சித்ததில் நேற்றைய தினம் (06) உயிரிழந்திருந்தாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வடக்கு பாணந்துறை வத்தல்பொல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிக்க முயற்சித்ததாகவும் இதன்போது படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (06) மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் முன்னதாக விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் வெலிகமயில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினருக்காக உணவுவாங்க வெளியே சென்றவர் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்ட நிலையில் அவர்களது உதவியாளரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை மற்றும் இம்மாத முற்பகுதியில் மட்டக்களப்பில் இளைஞன் ஒருவர் பாதுகாப்பு தரப்பினரால் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் சடலமாக ஒப்படைக்கப்பட்ட சம்பவங்கள்

பாதுகாப்புத்தரப்பினரின் அராஜங்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குளோப் தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் சுட்டிக்காட்டியிருந்தார்.

பாதுகாப்புத் துறையில் உடனடியாக சீர்த்திருத்தங்கள் முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நேர்காணல் இடம்பெற்று இரண்டுநாட்களுக்குள் பொலிஸார் மீது கடுமையான குற்றச்சாட்டு மீண்டும் பாணந்துறையிலிருந்து சுமத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.