முதலாவது Doseஆக AstraZeneca ஐ எடுத்தவர்கள் 2வது Doseஆக Pfizer தடுப்பூசியை நம்பி அடிக்கலாமா?

0
336
Article Top Ad

முதலாவதாக AstraZeneca  தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட, கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவதாக Pfizer தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை நாளை (07) முதல் ஆரம்பமாகவுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்படும் தினம் மற்றும் இடம் என்பன குறுஞ்செய்தியூடாக (SMS) அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Pfizer தடுப்பூசியின் முதல் தொகுதி நேற்று (05) அதிகாலை நாட்டை வந்தடைந்தது.

குறித்த தொகுதியில் 26,000 தடுப்பூசிகள் அடங்குவதுடன்இ இம் மாதத்திற்குள் 02 இலட்சம் Pfizer தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக கிடைக்கவுள்ளன.

முன்னதாக, ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா முதலாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பைசர் தடுப்பூசிகள் இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முதலாவது Doseஆக AstraZeneca ஐ எடுத்தவர்கள் 2வது Doseஆக Pfizer தடுப்பூசியை நம்பி  ஏற்றலாமா ? என்பது தொடர்பான கேள்விகள் பலரிடம் இருப்பதனை உணர்ந்துகொள்ளமுடிகின்றது.

இந்தக் கேள்விக்கான பதிலைப் பெறுவதற்கு இலங்கையிலுள்ள அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் சிலரிடம் வினவினோம்.

விசேட சமுதாய மருத்துவ நிபுணர் டொக்டர் முரளி வல்லிபுரநாதன் ‘ முதற்கட்டமாக அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியவர்களுக்கு இரண்டாம் கட்டமாக பைஸர் தடுப்பூசியை ஏற்ற முடியும் என்பது வெளிநாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கையில் ஏற்றுவதில் எந்தச் சிக்கலும் இல்லை.

பைஸர் தடுப்பூசியை மிகவும் குளிர்ந்த நிலையில் களஞ்சியப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே அதனைச் செய்வதற்கான வசதி இலங்கையிடம் இருக்கின்றதா என வினவியபோது ‘ பைஸர் என்பது மருந்து தயாரிப்பில் மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனமாகும்.

நேற்றையதினம் தடுப்பூசிகளைக் கொண்டுவரும்போதே அதனுடன் குளிரூட்டியையும் காணமுடிந்தது. அந்தவகையில் தேவையான முன்னேற்பாடுகளை நிறுவனமே செய்திருக்கும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான டொக்டர் தணிகைவாசன் ரட்ணசிங்கத்திடம் வினவியபோது ‘ முதன் முறையாக அஸ்ட்ரா செனெக்காவை ஏற்றியவர்களுக்கு இரண்டாவது டோஸாக பைஸரை ஏற்றமுடியும் என்பது உண்மைதான்.

எனினும் இதற்கு சுகாதார அமைச்சின் குழுவொன்று முறைப்படி அதன் பரிந்துரையை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பாக ஜேர்மனி தடுப்பூசிகளைக் கலந்து ஏற்றுவது தொடர்பாக முக்கியமான பரிந்துரையை வலுவாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பிற்காக முதற்கட்டமாக அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாவது கட்டமாக தடுப்பூசியை ஏற்றும்போது வேறு தடுப்பூசியை மாறிச் செலுத்திக்கொள்ளவேண்டும் என அனைத்துமக்களுக்கும் ஜேர்மனி பரிந்துரைத்திருந்தது.

அதி தீவிரமாக பரவும் கொரோனாவின் டெல்டா திரிபு வேகமாக பரவிவரும் நிலையில் அதனை விரைந்து கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் வீரியமிக்கதாக எதிர்த்துச்செயற்படுவதற்கும் தடுப்பூசிகளைக் கலந்து ஏற்றுவது நல்லது என ஜேர்மனி பரிந்துரைத்திருந்தார்.

தடுப்பூசிகளைக் கலந்து ஏற்றுவது தொடர்பாக தடுப்பூசி தொடர்பான நிலையியற் குழுவானது அதன் ஆரம்பகட்ட பரிந்துரைகளை வழங்கிய மறுதினம் ஜேர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் நாட்டிலுள்ள 16 மாநிலங்களைச் சேர்ந்த தனது சகாக்களுடன் இந்த விடயத்தைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.

தடுப்பூசிகளைக் கலந்து ஏற்றுவது தொடர்பாக ஜேர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை முதற்கட்டமாகவும் இரண்டாவது கட்டமாகவும் செலுத்திக்கொண்டவர்களுக்கு இருக்கின்ற கொரோனா தடுப்புத் திறனுடன் ஒப்பிடுகையில் முதற்கட்டமாக அஸ்ட்ரா செனெக்காவையும் இரண்டாம் கட்டமாக பைஸர் அன்றேல் மொடர்னா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களுக்கு இருக்கும் தடுப்புத்திறன் அதிகமானதென்பது கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜேர்மனியின் அதிபரான அஞ்சலா மேர்க்ல் ( 66 வயது) முதற்கட்ட தடுப்பூசியாக அஸ்ட்ரா செனெக்காவை செலுத்தியிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மொடர்னா தடுப்பூசியை சமீபத்தில் ஏற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது