காபுலின் விளிம்பில் தலிபான்கள்- ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது ?

0
205
Article Top Ad

பலரையும் வியப்பில் ஆழ்த்தி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் நாலா புறமும் தாலிபன்கள் சூழ்ந்துள்ளனர். அங்குள்ள நகர எல்லையில் காத்திருக்குமாறு தமது போராளிகளை தாலிபன்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

காபூலை விட்டு வெளியேற குடிமக்கள் விரும்பினால் அவர்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் வெளியே செல்ல அனுமதிக்குமாறு தமது போராளிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக தாலிபன்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் தமது போராளிகளை காபூல் எல்லையிலேயே காத்திருக்குமாறும் மக்கள் நெரிசல் உள்ள அந்த நகரில் அவர்களின் பாதுகாப்புக்கு அங்குள்ள ஆட்சியாளர்களே தற்போதைக்கு பொறுப்பு என்றும் தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.

அமைதியான வழியில் அதிகாரத்தை தங்கள் வசம் ஆட்சியாளர்கள் ஒப்படைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தாலிபன்கள் தரப்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலைநகரம் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்று காபூல் குடியிருப்புவாசிகளுக்கு நம்பிக்கையுட்டும் செய்தியை தமது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியிட்டிருக்கிறது அதிபர் அலுவலகம்.

எனினும், அந்த பிராந்தியத்தில் விரிவாக செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிபிசியின் யால்டா ஹக்கிம் ‘தாலிபன்கள் தலைநகருக்குள் முன்னேறி வரும்போது பெரிய எதிர்ப்பு காணப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

ஐ.நா சிறப்புப் பிரதிநிதியுடன் அதிபர் அஷ்ரஃப் கானி அவசர ஆலோசனை

ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா சிறப்புப் பிரதிநிதியுடன் அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அமைதியான வழியில் ஆப்கானிஸ்தானில் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்க அங்குள்ள அமைச்சர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

இது தொடர்பாக டோலோ டிவி என்ற உள்ளூர் தொலைக்காட்சியில் தோன்றிய ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் ‘அமைதியான வழயில் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படும்’ என்று கூறினார். காபூல் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆட்சி ஒப்படைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தாலிபன் பிரதிநிதிகள் அதிபர் மாளிகை நோக்கி சென்றுள்ளதாக ஆப்கன் அதிகாரியை மேற்கோள்காட்டி அசோசியேட்டட் பிரஸ் என்ற சர்வதேச செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக காபூல் நகர எல்லைகளில் காத்திருக்குமாறு தமது போராளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தாலிபன்கள் தெரிவித்திருந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நிலைமை மனிதாபிமான பேரழிவாகி விட்டது என்று ஐ.நா சர்வதேச வளர்ச்சிக்குழுவின் முன்னாள் செயலாளர் ரோரி ஸ்டீவார்ட் கூறியுள்ளார்.

‘இந்த நாட்டில் எல்லாமே தவறாக நடக்கிறது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மருத்துவ நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கியிருக்கிறார்கள். எங்கும் சூறையாடல்கள் நடக்கின்றன. சொந்த நாட்டை விட்டே மக்கள் அகதிகள் போல வெளியேறுகிறார்கள். நடக்கும் சம்பவங்களைப் பார்த்து பல ஆப்கானியர்களும் அச்சம் அடைந்து காணப்படுகின்றனர்’ என்று அவர் தெரிவித்தார்.

தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள் வலுவாக இருந்த வடக்குப் பகுதியின் கடைசி முக்கிய நகரமான மசர் இ ஷரீஃப்பையும் தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர்.

பன்னெடுங்காலமாகவே மசர் இ ஷரீஃப் நகரம் தாலிபன்களுக்கு எதிராக இருந்தது. அப்படிப்பட்ட நகரத்தை தாலிபன்கள் கைப்பற்றி இருப்பதுஇ தாலிபன்களின் முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு தான் ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி அந்நகரத்தில் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் மசர் இ ஷரீஃப் உட்பட பல்வேறு முக்கிய நகரங்கள் தொடர்ந்து தாலிபன்கள் வசமாகி வருகின்றன. மேலும் தாலிபன்கள் ஆப்கன் தலைநகரான காபூலை நோக்கி முன்னேறி வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்த வன்முறையால் சுமார் 2.5 லட்சம் மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களை விட்டு பாதுகாப்புக்காக காபூலுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுவரை தாலிபன்கள் கைப்பற்றிய நகரங்களில் பெண்கள் புர்கா அணிய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் சமூக விதிகளை பின்பற்றாதவர்களை அடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேற்குலக நாடுகளோ ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் இருக்கின்றனர்.

நன்றி பிபிசி