ஓயாத அலையாக கொரோனா : தீராத சோகத்தில் மக்கள்;அடுத்துவரும் அபாயமிகு காலம்

0
81
Article Top Ad
நன்றி: இஸார கொடிகார ஏ.எவ்.பி

“கொழும்பில் பயங்கரமான குண்டு வெடித்துள்ளது. தற்போது அது ஏனைய பகுதிகளுக்குப் பரவிவருகின்றது”

கொரோனாவின் அபாயகரத்திரிபான டெல்டா வைரஸ் பற்றி சுகாதார இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்திருந்தமை நிலைமையின் பாரதூரத்தை உணர்த்திநிற்கின்றது.
கடந்த சில நாட்களில் இலங்கையில் கொரோனாவின் தாக்கம் சடுதியாக அதிகரித்திருக்கின்றது. தினமும் பதிவாகும் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 150ஐத் தாண்டிவிட்டது.
தற்போது இடம்பெறும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவானதாக இருக்கின்றபோதும் தினமும் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சராசரியாக மூவாரயிரத்தை நெருக்கியிருக்கின்றது.
கொரொனா தொற்றாளர்களால் வைத்தியசாலைகளும் இறந்தவர்களின் சடலங்களால் பிணவறைகளும் நிறைந்துவழிகின்றபோதிலும் நாட்டை உடனடியாக முடக்கவேண்டும் என்ற மருத்துவ அமைப்புக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் கடந்த வார நடுப்பகுதியில் நிராகரித்திருந்தது.
 நாட்டில் இன்னமும் நெருக்கடி நிலை என்பது அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கருத்தாக இருக்கின்றது.
‘ ஊடரங்கோ பொதுமுடக்கமோ கடைசித் தெரிவாகவே இருக்கும் . இன்னமும் நாம் அந்த இடத்திற்கு வரவில்லை என்பது ஐந்து நாட்களுக்கு முன்பாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.
‘செப்டம்பருக்குள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவதே எமது இலக்காகும் . அதன்பின்னர் அனைத்துமே கடவுளின் கரங்களில் தான் தங்கியுள்ளது ‘ என அவர் மேலும் கூறியிருந்தார்.
உலக நாடுகள் விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கை கொண்டு தடுப்பூசியை துரிதமாக இறக்குமதிசெய்வதில் கவனம் செலுத்திய ஆரம்ப நாட்களில் தம்மிக்க பாணி முதல் ஆற்றில் மந்திரித்த குடத்தை வீசியெறிதல் என  பெறுமதிமிக்க நேரகாலத்தை வீணடித்த அரசாங்கம்  தற்போது கடவுளின் கரங்களில் மக்களின் எதிர்காலம் எனக் கூறிக் கைவிரித்திருக்கின்றமை கவலையளிக்கின்றது.
 இரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறை விரிவுரையாளர் பேராசிரியர் சுனேத் அகம்போதி  அரசாங்கத்தின் தீர்மானங்களை கடந்த வாரத்தில் கடுமையாகச் சாடி.இம்மாதம் 5ம் திகதி தனது டுவிட்டர் தளத்தில்  முக்கியமான கருத்தொன்றை பதிவிட்டிருந்தார்.

“அரசாங்கம் டெல்டா திரிவை சவாலுக்குட்படுத்தும் துணிகரமான தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்தச் சவாலின் ஒரு பாகமாக அமைவாக தினமும் 150 முதல் 200 வரையான இறந்தவர்களை எரிப்பதற்கான பாரிய தகனபீடத்தை நிர்மாணக்கவேண்டும் “

என நாட்டை உடனடியாக முடக்கத்தவறிய அரசாங்கத்தின் தீர்மானம் பற்றி பேராசிரியர் அகம் போதி பதிவிட்டிருந்தார்.
நன்றி: இஸார கொடிகார ஏ.எவ்.பி
கொவிட் உயிரிழப்புக்கள் பற்றி எதிர்வுகூறும் கணினி மாதிரித்தகவலுக்கு அமைவாக உடனடியான ஊடரங்கு அமுல்படுத்தப்படும் பட்சத்தில் அடுத்துவரும் 20 நாட்களில் ஆகக்குறைந்தபட்சம் 1200 மேலதீக இறப்புக்களையேனும் தவிர்க்கமுடியும்.
தீர்மானமெடுப்பதில் காண்பிக்கப்படும் 5 நாள் தாமதம் மேலதீகமாக ஆகக்குறைந்தது 700 பேரையேனும்  பலிகொடுக்கும்  என பேராசிரியர் அகம்போதி மேலும் எச்சரித்துள்ளார்.
அவர் பதிவிட்ட போது நாளாந்த இறப்புக்களின் எண்ணிக்கை நூறிற்கும் குறைவாகவே இருந்தது.
ஆனால் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக 150த்தாண்டி உயிரிழப்புக்கள் அதிகரித்துச் சென்றுகொண்டிருக்கின்றமை அவரது எதிர்வுகூறல் நிஜமாகி வருவதை எடுத்துணர்த்திநிற்கின்றது.
நன்றி: இஸார கொடிகார ஏ.எவ்.பி
ஃபேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் இறப்புக்கள் பற்றிய அறிவிப்புக்களாலும் அஞ்சலிகளாலும் ஒரு பக்கம் நிறைந்துகிடக்கையில் மறுபக்கம் இந்தியாவில் கண்டதுபோன்று நோயாளர்களுக்கு ஒட்சிசன் தேவை என்ற வேண்டுகோள்களும் அதிகரித்துச்செல்வதை காணமுடிகின்றது.
நீண்டநாட்கள் நோயில் வீழ்ந்து பாயில் படுத்து  உறவுகள் உயிரிழந்தால் அவர்களை பராமரித்த திருப்தியைக் கொண்டேனும்  தங்களை ஆற்றுப்படுத்திக்கொள்ளமுடியும்.
ஆனால் ஒரு சில நாட்களுக்கு முன்பாக வரையில் திடமாக இருந்தவர்கள் தம் குடும்பத்தின் தூணாக தாங்கிநின்றவர்கள் நிலைகுலைத்து வீழ்வதும் உயிரிழந்து போவதும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திக்கொண்டிருக்கின்றது.
கொழும்பு பொலிஸ் பிணவறையில் அண்மையில் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் நிலைமையின் பாரதூரத்தை பறைசாற்றிநிற்கின்றது.

கொரோனா தொற்றுக்கிலக்கானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்கள் சிலருடன் உரையாடியபோது அவர்கள் கூறியவை வாழ்க்கை எந்தளவிற்கு நிலையற்றது என்பதை உணர்த்திநிற்கின்றது.

‘இருதய வியாதி என்றுதான் அவரை கண்டிவைத்தியசாலையில் அனுமதித்தோம் . இரண்டுநாட்களில் இறந்துவிட்டார். தற்போது அவருக்கு கொரோனா என்கின்றது  வைத்தியசாலை தரப்பு’ இப்படிக் கூறுகின்றார் அண்மையில் உயிரிழந்த மாவனல்லையைச் சேர்ந்த 49வயது நபரின் உறவினர் .

“காய்ச்சல் என்று காலை 10 மணிக்கு  பீசிஆர் எடுக்கப்போனவர் . இரவு பத்து மணிக்கு அறிக்கை வந்தது . ஆனால் 12 மணிக்கு அவர் இறந்துவிட்டார்’  இது கடந்த செவ்வாய்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த பாடசாலைசெல்லும் வயதுள்ள இருபிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட நிலைமை.
கொட்டாஞ்சேனைபகுதியிலுள்ள அரச தொடர்மாடியில் மாத்திரம் கடந்த சில தினங்களில் ஏழு கொரோனா மரணங்கள் பதிவாகியிருக்கின்றன. இது ஒட்டுமொத்த இறப்புக்களின் ஒரு சிறுதிபகுதி மாத்திரமே.
அண்மையில் கொழும்பு பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் இருந்த சிலருடன் பேசியபோது டெல்டா எப்படியெல்லாம் பரவுகின்றது என்பதை எண்ணி ஆச்சரியம் ஏற்பட்டது.
கொழும்பிலுள்ள அதிநவீன தொடர்மாடிகளில் ஒன்றான ஹவ்லொக் டவுணில் வசிக்கும் ஒருவர் கருத்துவெளியிடுகையில் ‘ நாம் மிகவும் கவனமாகத் தான் இருந்தோம். ஒரே ஒருநாள் குடும்ப நண்பர்கள் தானே என கொழும்பிலுள்ள பூங்காவொன்றுக்கு சென்றோம்.
அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வைத்தியசாலையில் பல நாட்கள் இருக்கவேண்டி நேர்ந்துவிட்டது ‘ என்கிறார் வங்கியொன்றில் ஆலோசகராக இருக்கும்  அந்தப்பெண்மணி
 ‘ராஜகிரியவிலுள்ள தேவாலயத்திற்கு ஒரு நாள் மாத்திரமே திருப்பலிக்கு சென்றிருந்தார் . அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. பிசிஆர் செய்து பார்த்தபோது கொரோன என்று உறுதிப்படுத்தினர்’ என்கின்றார் 52வயதுள்ள அந்தப் பெண்மணியின் உறவினர் .
 இந்த மோசமான நிலைக்கு மத்தியிலும் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பைஸர் போன்ற  தடுப்பூசியைத்தான் பெறவேண்டும் என்பதனால் எந்தவொரு தடுப்பூசியும் பெறாமல் இருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்டா திரிபு என்பது மிகவும் ஆபத்தான வகையில் பரவிச்செல்கின்ற நிலையிலும் இறந்தவர்களின் பலரும் எந்தவொரு தடுப்பூசியையும் பெறாதவர்கள் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாலும் இதுவரை தடுப்பூசியைப் பெறாதவர்களின் நிலை  மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது.
பைஸர் தடுப்பூசிதான் வேண்டும் என்று காத்திருந்து காலத்தை வீணடித்த சிலர் தற்போது எந்தத் தடுப்பூசியாவது கிடைத்தாலும் பரவாயில்லை என மனமாறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இன்னமும் பிடிவாதமாக இருப்பவர்கள் அடுத்துவரும் நாட்களில் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும் .
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு சில தினங்களுக்கு முன்பாக வழங்கிய நேர்காணலில் கருத்துவெளியிட்ட ஸ்ரீஜயவர்த்தன புர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு ஒவ்வாமைப்பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவேந்திர டெல்டா திரிபானது பரவத்தொடங்கி 6 வாரங்களின் பின்னரே அதன் வீரியத்தைக் காண்பிக்கும்.
தற்போது ஆறாவது வாரம் நடக்கின்றது. இனிமேல் தான் விளைவுகளின் தாற்பரியத்தை மக்கள் உணர்வர் .உணவின்றி உயிரிழக்கப்போகின்றனரா இல்லை ஒட்சின் இன்றி உயிரிழக்கப்போகின்றனரா மக்கள் என்பதே தற்போதுள்ள கேள்வி.
உணவில்லையானால் யாரேனும் உணவைக் கொடுக்கமுடியும்.ஆனால் ஒட்சிசன் இல்லை என்றால் என்னவாகும்? இதற்கு அதிகாரத்திலுள்ளவர்களே தீர்மானிக்கவேண்டும்.”என அவர் மேலும் கூறியிருந்தார்.
கடந்த 7ம்திகதி இலங்கையில் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 5000ஐத் தொட்டது .ஆனால் தற்போது இறப்பவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது விரையில் 6000ஐ நெருக்கிவிடும் சாத்தியமுள்ளது.
எனவே அடுத்துவரும் நாட்களில் நாம் எண்ணிக்கைகளில் ஒரு பாகமாக மாறாமல் இருக்கவேண்டுமாக இருந்தால் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்.
மிகவும் அவசியமான தேவைக்காகவன்றி வேறுதேவைக்காக வெளியில் செல்வதைத் தவிர்க்கவேண்டும்.சுகாதார நடைமுறைகளை மிகமிக இறுக்கமாக பின்பற்ற வேண்டும்.
ஏனெனில் உங்களின் உயிர் உங்களுக்கு பெறுமதி அற்றதாக நீங்கள் ஒருவேளை கருதினாலும் நம்பிவாழும் குடும்பத்தவர்களுக்கு அது விலைமதிப்பற்றது.
இந்தக்கட்டுரை ஞாயிறு வீரசேரிக்காக அருண் ஆரோக்கியநாதன் எழுதியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here