இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் நேற்று (10) மாலை 5.30 வரை, 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தங்களால் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார்.
அத்துடன், 17 மாவட்டங்களுக்குட்பட்ட 145 பிரதேச செயலகங்களில் உள்ள 60 ஆயிரத்து 264 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 12 ஆயிரத்து 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி பிரதேசங்களில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக தமது வசிப்பிடங்களில் 3 ஆயிரத்து 648 குடும்பங்கள் வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வெளியேறிய குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 476 பேர், 76 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குடியிருப்புகளிலிருந்து இடம்பெயர்ந்த 10 ஆயிரத்து 23 குடும்பங்களைச் சேர்ந்த 37 ஆயிரத்து 690 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இதேவேளை, குறித்த அனர்த்தங்களால் 1,229 வீடுகள் பகுதியளவிலும், 23 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.