இலங்கையில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று, மரணம் அதிகரிப்பு! – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

0
240
Article Top Ad

தொடர்ச்சியாகக் கடந்த சில தினங்களாகக் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் தொகையும் அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக திருமண வைபவங்கள், மரண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் காரணமாகவே வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது எனவும், சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாது மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலை தொடருமானால் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும், அதனால் மக்களே பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்றும் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாகப் புதிய வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 700 ஐத் தாண்டியுள்ள நிலையில் நேற்று அது 718 ஆக அதிகரித்துள்ளது எனவும், மரணங்களின் தொகையும் கடந்த 3 நாள்களாக 20 ஐக் கடந்துள்ளது எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடத்த வாரத்தோடு ஒப்பிடுகையில் இந்த வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் மரணங்களும் அதிகரித்துள்ளன.

அதற்கிணங்க நாட்டில் இதுவரை மொத்தமாக 5 இலட்சத்து 49 ஆயிரத்து 500 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 5 இலட்சத்து 23 ஆயிரத்து 503 பேர் பூரண குணமடைந்துள்ளனர் எனவும், மேலும் 12 ஆயிரத்து 25 பேர் பல்வேறு வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.