7வது முயற்சியில் T20 உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணி

0
159
Article Top Ad

கடந்த 14 வருடங்களாக கானல் நீராகப்போயிருந்த உலகக்கிண்ணத்தை வென்றதன் மூலம் அவுஸ்திரேலிய அணி அனைத்துவிதமான ஐசிசி கிண்ணங்களையும் வென்ற அணிகளின் வரிசையில் இடம்பிடித்துள்ளது

2007ம் ஆண்டு முதன்முறையாக T20 உலகக்கிண்ணப்போட்டி நடைபெற்றது அதன் பின்னர் இதுவரையில் 7தடவை உலக்கிண்ண போட்டிகள் நடைபெற்றுள்ளன.

ஏழாவது T20 உலக கிண்ணத் தொடரின் இறுதி போட்டி தடுபாயில் கடந்த 14ம்திகதி நடைபெற்றது.

இதில் நியூசிலாந்து – அவுஸ்ரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதிரடியாக விளையாடிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ஓட்டங்கள குவித்தார்.

இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப வீரராக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதேசமயம் மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வோர்னர் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தார். அவர் 38 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 53 ஓட்டங்களை குவித்து நல்ல அடித்தளம் அமைத்தார்.

இதேபோல் நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த மிட்செல் மார்ஷ் விரைவாக அரை சதம் கடந்ததுடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மறுமுனையில் மேக்ஸ்வெல்லும் பொறுப்புடன் விளையாடினார்.

இதனால் அவுஸ்ரேலிய அணி 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் 173 ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மார்ஷ் 50 பந்துகளில் 77 ஓட்டங்களுடனும் மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன்மூலம் இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தினை அவுஸ்ரேலிய அணி முதன்முறையாக முத்தமிட்டுள்ளது.

உலகக்கிண்ணத்தை இம்முறை முதன்முறையாக வெல்வதற்கு முன்பாக அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தில் காண்பித்த சிறந்த பெறுபேறு 2010ம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற்றது.

அப்போது இங்கிலாந்துடனான இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்த அவுஸ்திரேலியா தோல்வியைத்தழுயிருந்தமை குறிப்பிடத்தக்கது.