நிஜ செங்கேணியை சந்திக்க வேண்டாம் என இயக்குநர் கூறியது ஏன்?

0
81
Article Top Ad

 

நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் என பலரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் நடிகர் மணிகண்டன் ஏற்று நடித்த ‘ராஜாகண்ணு’ கதாபாத்திரமும் அவருடைய இயல்பான நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது.

படத்தின் தாக்கம் குறித்தும், ‘ராஜாகண்ணு’ கதாபாத்திரம் எந்த மாதிரியான அனுபவம் கொடுத்ததுஇ தற்போது ‘ஜெய்பீம்’ படத்திற்கு வந்திருக்கும் நெருக்கடி அடுத்த கட்ட பயணம் என பல விஷயங்கள் குறித்து நடிகர் மணிகண்டன் பிபிசி தமிழுடனான பேட்டியில் பகிர்ந்தார். கலந்துரையாடலில் இருந்து

‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு முன்பும் பின்பும் என உங்களுடைய சினிமா பயணம் எப்படி இருக்கிறது?

”ஜெய்பீம்’ படத்திற்கு பின்பு எனக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்புணர்வு கூடியிருக்கிறது. அதை நான் சரியாக எடுத்து வேலை செய்வேனா என்பது தெரியவில்லை. ஆனால் என்னுடைய நண்பர்கள் என் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். இதேபோன்று கதைகளை தேர்ந்தெடுக்க சொல்லி அறிவுறுத்துகின்றனர். அது எப்படி செய்ய போகிறேன் என்பது தெரியவில்லை. ஏனெனில் சினிமாவில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் சில படங்கள் நடிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இன்னொன்றுஇ நடிகன் என்பதையும் தாண்டி மனிதனாக சில நேர்மையான படங்கள் நடிக்க வேண்டும் என்ற எண்ணமும் உண்டு’.

‘ஜெய்பீம்’ படத்துக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் குறிப்பிட்ட சாதியை தவறாக சித்தரித்திருப்பதாக படத்திற்கு வரக்கூடிய எதிர்ப்பு, நெருக்கடிகள் இதை எப்படி பார்க்கறீர்கள்? சக கலைஞனாக நடிகர் சூர்யாவிற்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

‘இது குறித்து படத்தின் இயக்குநர் ஞானவேல் பல பேட்டிகளிலும் மேடைகளிலும் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். குறிப்பிட்ட நோக்கத்தில் ஒருவர் பற்றி தவறாக சித்தரித்தோ அல்லது அவர்களது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலோ காட்சிப்படுத்தி இந்த படத்திற்கான புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இல்லை. இவ்வளவு நல்ல கதை எடுத்துவிட்டு அதை நம்பாமல் இது போன்ற விஷயங்களை நாங்கள் நம்புகிறோமோ என்றால் நிச்சயம் ஏற்று கொள்ள மாட்டோம்.

இதையும் தாண்டிஇ எனக்கும் தனிப்பட்ட முறையில் இயக்குநரை தெரியும். யாரையுமே கடிந்து ஒரு சொல் சொல்ல மாட்டார். அவரது உதவி இயக்குநரை கூட இதுவரை ஒரு வார்த்தை கடுமையாக சொல்லி நடத்தியது இல்லை. அப்படி இருக்கும்போது படத்தில் தெரிந்தோ தெரியாமலோ அப்படி வைத்திருந்தாலும் அதனை தவறு என சுட்டிக்காட்டியதும் திருத்தி இருக்கிறார்கள். ஒருவேளை அது தெரிந்து வைத்திருந்தால் அதை சொல்லியே ஆக வேண்டும் என இயக்குநர் நினைத்திருந்தால் அதற்காக அவர் உறுதியாக நிற்க கூடிய நபர்தான். ஆனால் அது அவருடைய நோக்கம் இல்லை என்பதால்தான்இ சுட்டிக்காட்டியதும் உடனே அதை மாற்றி விட்டார்.

ஆனால் இந்த படத்தில் வேறு ஒரு வலியை பதிவு செய்திருக்கும்போது அதை கவனிக்காமல் இப்படியான ஒரு விஷயத்தில் இந்த படத்தை திசை திருப்புவது வருத்தமாகதான் உள்ளது. இந்த விஷயத்தில் சூர்யா சாரிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால்இ ‘கவலைப்படாதீர்கள்இ நிச்சயம் நாங்கள் உங்களுடன் இருப்போம்’ என்பதுதான்’ .

‘ஜெய்பீம்’ படம் வெளிவந்த பிறகு பொது சமூகத்தில் ஏற்படுத்தியஃ ஏற்படுத்த கூடிய தாக்கம் என எதை கருதுகிறீர்கள்?

‘தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் கட்டமாக பூஞ்சேரி கிராமத்தில் உள்ள குறவர்ஃ இருளர் இன மக்களுக்கு நிலப்பட்டா சாதிச்சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் படிக்க இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு இது கிடைக்கிறது. சமீபத்தில் அஸ்வினி அவருடைய வீடியோ பார்த்து இருப்பீர்கள். அவர்கள் இன மக்களுக்கு கல்வி கிடைக்க போகிறது என்பதை மகிழ்ச்சியாக பகிர்ந்திருப்பார்.

‘ஜெய்பீம்’ படத்தை முதல்வர் பார்க்கிறார். அதற்கு பிறகு அந்த தாக்கத்தினால் அது நடக்கிறது என்பதாக இருந்தால் கூட இதைத்தாண்டி பொதுச்சமூகம் இந்த படத்தை எப்படி ஏற்று கொண்டார்கள் என்பது மிகப்பெரிய சந்தோஷம். ஏனென்றால் இந்த படத்தை ஒரு முறைக்கு மேல் யாரும் பார்க்க மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால்இ பார்த்தவர்கள் எல்லாம் நான்கைந்து முறை பார்த்தேன்இ குழந்தைகளுடன் பார்த்தேன்இ அவர்களுக்கும் படம் மிகப்பிடித்திருக்கிறது என்று என்னிடம் சொன்னார்கள். இது எனக்கு உணர்த்துவது என்னவென்றால் மக்களுக்கு ஒற்றுமையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்கு தயாராக இருக்கிறார்கள். அப்போது தப்பு மக்கள் மீது இல்லை. வேறு எங்கையோதான் இருக்கிறது’.

கதையில வரக்கூடிய கதைமாந்தர்கள் யாரையாவது நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததா?

‘இல்லை நான் பார்க்கவில்லை. ஆனால் முதலில் நிஜ கதைமாந்தர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். நிஜத்தில் அவர்கள் என்ன மாதிரியான சூழலை சந்தித்தார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இருந்தது. ஆனால் அப்போது எங்களால் போக முடியவில்லை. மற்றொன்று கதையில் பார்வதியின் கதாபாத்திரமான செங்கேணியில் சில புனைவுகள் இருந்ததால் அதற்கேற்றாற்போல லிஜோ வேறு கற்பனை கதாபாத்திரமாக தன்னை உருவகித்து அதற்கேற்ற பயிற்சியில் இருந்தார். அதனால் நிஜ கதைமாந்தரை சந்தித்து லிஜோவின் அந்த பயிற்சிக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என இயக்குநர் எண்ணினார். அதனால் சந்திக்கவில்லை. பிறகு படம் முடிந்ததும் நாங்கள் அடுத்த வேலைக்கு நகர்ந்து விட்டோம். நிஜ பார்வதி சில பேட்டிகள் மூலம்தான் எனக்கும் அறிமுகமானார்’.

நீங்களும் ஒரு இயக்குனர், வசனகர்த்தா. இந்த படத்தின் கதையில் நீங்களும் வேலை பார்த்தீர்களா? என்ன மாதிரியான கலந்துரையாடல் இயக்குநருடன் இருந்தது?

‘இந்த படத்தில் நான் உதவி இயக்குநருக்குரிய எல்லா வேலைகளையும் செய்திருப்பேன். இந்த படத்தில் என்றில்லை. நான் வேலை செய்யும் எல்லா படங்களிலுமே உதவி இயக்குநராக எல்லா வேலைகளையும் செய்வேன். ‘ஜெய்பீம்’ போல ஒரு நல்ல சினிமா உருவாகிறது என்றால் அதில் நம்மால் முடிந்த பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.

இந்த படம் ஆரம்பிக்கும்போதே திரைக்கதைக்கான கலந்துரையாடலில் இயக்குநர் எங்களிடமும் கருத்து கேட்டார். இந்த கதை பொறுத்தவரை நான் வியந்த ஒரு விஷயம் என்னவென்றால்இ உண்மைகளை கோர்வையாக சொல்வது என்பது மட்டுமே நல்ல படமாக வந்துவிடாது. நடந்த நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக தைப்பது என்று ஒரு விஷயம் இருக்கிறதல்லவா? உண்மைகளைஇ உணர்ச்சிகரமாக சினிமாவுக்கு ஏற்ற கமர்ஷியல் தன்மையுடன் கொடுப்பது என்ற விஷயங்கள் எல்லாம் வேறு வேறு. தண்ணீர் எண்ணெய் போன்று இது எளிதில் சேராது. ஆனால்இ இதை இயக்குநர் ஞானவேல் அழகாக கையாண்டிருக்கிறார்.

இதை மெருகேற்றுவதற்கான வேலையை நாங்கள் கலந்துரையாடலில் செய்து கொண்டே இருந்தோம். இதில் என் பங்களிப்பு பெரிதாக இல்லை என்றாலும்இ காட்சிகள் அதில் மாற்றங்கள் செய்வது குறித்து என்னிடமும்இ அனைத்து நடிகர்களிடமும் வெளிப்படையாகவே இருந்தார். இது படத்தின் இறுதிக்கட்டமான எடிட்டிங் வரையிலும் தொடர்ந்தது. அனைவரிடமும் கருத்து கேட்டு இறுதியில் முடிவு எடுக்கக்கூடிய ஒரு நபராகதான் இயக்குநர் இருந்தார்’.

படத்தில் உங்களுடைய பெரும்பாலான காட்சிகள் லாக்கப்புக்குள் இருந்தது. அது மனதளவில் உங்களுக்கு ஏதும் பாதிப்பு இருந்ததா? என்ன மாதிரியான அனுபவம் அது?

‘நிச்சயம் கிடையாது. அந்த காட்சிகளை பார்க்கக்கூடிய பார்வையாளர்களுக்குதான் அது சோகம். ஆனால்இ நாங்கள் அந்த வலி மறக்க அதை மிகப்பெரிய காமெடி காட்சியாக மாற்றி சிரித்து விடுவோம். இந்த காட்சிகளில் எங்களை விட அதிகம் வலியை அனுபவித்தது தமிழ் அண்ணன்தான். ஏனென்றால்இ நாங்கள் அடி வாங்கிவிட்டு வந்தால் கொஞ்ச நேரத்தில் அது சரியாகிவிடும். ஆனால்இ அவர் மனதளவில் குற்றவுணர்ச்சிக்கு போய் விட்டார். படத்தில் அடித்துவிட்டு லிஜோஇ மொசக்குட்டி அண்ணன்இ என்னிடம் என எங்களை நலம் விசாரித்து கொண்டே இருப்பார்’ என்றவரிடம் படம் முடித்துவிட்டு அவரது நடிப்பிற்கு என்ன மாதிரியான விமர்சனங்கள் வந்தது என கேட்டோம்.

”படம் பார்த்துவிட்டு என்னை பயங்கரமா திட்டறாங்கடா! தூங்க முடியலை’ என சொன்னார். ‘அதுதான் உங்கள் நடிப்பிற்கு கிடைத்த வெற்றி’ என சொன்னேன். படம் நடிக்கும்போதே எங்களோடு புகைப்படம் எடுத்து கொண்டார். ‘படம் வெளிவந்ததும் என்னை எப்படியும் சும்மா விடமாட்டார்கள். நான் உங்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறேன்இ என ஒன்றுக்கு மூன்று புகைப்படங்கள் எடுத்து கொண்டார். ‘என் அன்பு தம்பிஇ தங்கையுடன் படப்பிடிப்பு முடிந்ததும் புகைப்படம்’ என அப்போதே புகைப்படத்தின் தலைப்பையும் சொல்வார்’.

உங்கள் நடிப்பிற்கு என்ன மாதிரியான விமர்சனங்கள் வந்தது?

‘நிறைய நல்லவிதமாகதான் சொன்னார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போதே நிறைய பேர் என்னை பார்த்து அழ ஆரம்பித்து விட்டார்கள்.

இதைத்தாண்டி எனக்கு புரிந்த விஷயம் என்னவென்றால் நிஜத்தில் ராஜாகண்ணுவிற்காக நிறைய வருத்தப்பட்டார்கள் என்றே தோன்றியது. ஏனென்றால்இ ராஜாகண்ணுவிற்கு அழகான குடும்பம் இருந்தது. அவருக்கென்று தனியாக பெரிய நோக்கம் எதுவும் இல்லை. அவருடைய ஒரே ஆசை எல்லாம் குடும்பத்தை இப்போதைய நிலையில் இருந்து ஒரு படி மேலே எடுத்து செல்ல வேண்டும் என்பதுதான். அப்படி இருக்கும்போது அவருடைய குடும்பம் சிதைய போகிறது என்பதை யாராலும் ஏற்று கொள்ளவே முடியவில்லை’.

பழங்குடிகள் நிலம் அவர்களுடைய வாழ்வியல் எல்லாமே உங்களுக்கு புது அனுபவமாக இருந்திருக்கும். அங்கிருந்து என்ன கற்று கொண்டீர்கள். அங்கிருந்தவர்கள் உங்களை எப்படி அணுகினார்கள்?

‘என்னுடைய வாழ்க்கையிலேயே அற்புதமான அனுபவம் அது. இப்படிதான் இருக்க வேண்டும் என வாழ்க்கை குறித்து நாம் ஒரு எண்ணம் வைத்திருப்போம் இல்லையா? அது எல்லாவற்றையும் அந்த அனுபவம் புரட்டி போட்டது. எதையாவது செய்ய வேண்டும் என எப்போதுமே பரபரப்பாக இருக்கும் நபர் நான். அப்படி எல்லாம் பரபரப்பாக இல்லாமல்இ நிதானமாக எப்போதுமே மகிழ்ச்சியாக அந்த மக்கள் இருந்தார்கள்.

அவர்களிடம் பழகிய பிறகு என்னுடைய வாழ்க்கை முறையிலும் நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறது. அதேபோலஇ அவர்களுக்கு திரை அனுபவம்இ நடிப்பு என்பது புதிதுஇ அவர்களுக்கு பயிற்சி கொடுக்க சிரமப்பட்டோம் என்பது எல்லாம் நிச்சயம் இல்லை. அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே நன்கு பயிற்சி பெற்றவர்கள் போலதான் நடித்தார்கள். அவர்களிடம் இருந்துதான் நாங்கள் நிறைய கற்று கொண்டோம்’.

சந்துரு, ராஜாகண்ணு, செங்கேணி தவிர்த்து கதையில் வேறு யாருடைய கதாபாத்திரம் உங்களை நெகிழ செய்தது?

‘சந்துரு கதாபாத்திரம். சந்துரு போல ஒரு வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்றால் நமக்கு பத்து வாழ்க்கை அதற்கு வேண்டும் என இயக்குநர் அடிக்கடி எங்களிடம் அவர் குறித்து சொல்வார். ஏனெனில் வரலாற்று சிறப்புமிக்க பல வழக்குகளுக்கு சந்துரு தீர்ப்பு வழங்கி இருக்கிறார். ஓய்வு பெற்ற அன்று மிக சாதாரணமாக கிளம்பி போயிருக்கிறார். இதெல்லாம் நாம் கதைகளில்தான் கேட்டிருப்போம். ஆனால் நம் கண் முன்னே இப்படி ஒருவர் இருக்கிறார் என்பது ஆச்சரியம்தான்’

ஆர்.ஜே. தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர் என்று உங்களுடைய பயணம் இருந்த போது ‘பீட்சா 2’ படத்தின் வசனகர்த்தாவாக மாறிய அந்த திருப்புமுனை எப்படி நிகழ்ந்தது?

”அர்ஜூன் ரெட்டி’ படத்துடைய இசையமைப்பாளர் ரதன். நான் ஆர்.ஜே.-வாக இருந்த காலக்கட்டத்தில் அவர் சவுண்ட் இன்ஜினியராக இருந்தார். இசையமைப்பாளர் ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கிய நாளில் நானும் ரதனும் பேசி கொண்டிருந்தோம். ரஹ்மானுடைய தீவிரமான ரசிகர் ரதன். அவரைப்போலவேஇ இசையமைப்பாளர் ஆகி ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என அவரிடம் சொன்னேன். அவரும் என்னை விருது வாங்க சொன்னார். அப்போது நான் பல குரல் கலைஞன் மட்டும்தான். இதை வைத்து என்ன விருது வாங்குவது என நான் கேட்டு கொண்டிருக்கஇ ‘இதோடு நின்று விட போகிறாயா? உனக்குதான் நன்றாக எழுத வருமே! அதில் கவனம் செலுத்து இல்லையென்றால் நடிக்க போ’ என்றார். அதன் பிறகுதான் நடிப்புஇ எழுத்தை தீவிரமாக எடுக்க ஆரம்பித்தேன்’.

வசனகர்த்தாவாக ‘விக்ரம் வேதா’ படத்துக்கு பல விருதுகளை வாங்கி இருக்கிறீர்கள் நடிகராவும் பல படங்கள்ள உங்களுடைய கதாபாத்திரம் கவனம் பெற்றுள்ளது. எந்த துறையில் கவனம் செலுத்த விரும்புகிறீர்கள்?

”8 தோட்டாக்கள்’ ‘காதலும் கடந்து போகும்’ ‘காலா’ என இந்த படங்களில் நான் இருக்க போகிறேன் என்பது அன்று காலைதான் எனக்கு தெரிய வந்தது. இது எதுவுமே நான் திட்டமிடவில்லை. என்னுடைய வேறு வேலைகளைப் பார்த்துதான் இதற்கு கூப்பிட்டதாகச் சொன்னார்கள். ஒரு வேலைக்கு நாம் உண்மையாக இருந்தால் அதுவே நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என நம்புகிறேன்.

என்னிடம் வாழ்க்கை குறித்த பெரிதாக திட்டமிடல் இல்லை என்பது உண்மை. அப்படி இருக்க கூடாதுதான். ஆனால்இ எனக்கு அது வரவில்லை’ என்றவரிடம் ‘விக்ரம் வேதா’ படத்தில் மிகப்பிடித்த வசனம் எது என்று கேட்டோம். ‘விசாரணை குறித்தான காட்சி ஒன்றில் மாதவன்இ விஜய்சேதுபதி இருவர் மட்டும் இருப்பார்கள். இரண்டு பேருமே சமமான பலம் பொருந்திய ஆட்கள். ஆனால்இ எதிரெதிரான திசையில் பயணிப்பவர்கள். அதை வசனம் மூலம் உணர்த்த வேண்டும் என்பதற்காக ஒரு வசனம் வைத்திருப்போம்.

 

இப்படி இவர்களை நேராக குறிக்காமல் உவமையை வைத்து பேசியிருப்பது போல வசனம் அமைத்திருப்பேன். இந்த வசனம் எப்படி அமைப்பது என யோசித்த போதுஇ ‘பம்மல் கே. சம்பந்தம்’ படத்தில் ‘குரங்குக்கும் காத்தாடிக்கும் கூடதான் வால் இருக்கும். அதற்காக குரங்கு காத்தாடி போல பறக்க முடியுமா’ என்ற அர்த்தத்தில் ஒரு வசனம் இருக்கும். அதுதான் ‘விக்ரம் வேதா’ படத்தில் இந்த வசனத்திற்கான ஈர்ப்பு’.

‘சில்லுக்கருப்பட்டி’ ‘காலா’ ‘நெற்றிக்கண்’ இப்போது ‘ஜெய்பீம்’ என இந்த படங்களில் உங்களுடைய கதாபாத்திரங்கள் எல்லாமே இயல்பான அதிகம் ஆர்ப்பாட்டமில்லாத குறிப்பிடத்தக்கவை. எப்படி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கிறீர்கள்?

‘அந்த கதாபாத்திரங்களுக்கும் எனக்கும் என்ன மாதிரியான ஒற்றுமைகள் இருக்கிறது என்பதை கவனிப்பேன். அந்த கதாபாத்திரத்தில் நம்மை கண்டுபிடிப்பது என்பதுதான். இதைத்தாண்டி என்னுடைய கதாபாத்திரத்திற்கு எதிரான ஒன்று வந்தால் அதில் நடிக்க மாட்டேன் என்றில்லை. நம்மிடம் இல்லை என்றால் இல்லாத விஷயங்களை கடன் வாங்குவோம் இல்லையா? அப்படிதான் ‘காலா’ லெனின் ‘சில்லுக்கருப்பட்டி’ கதாபாத்திரங்கள் எல்லாம் நடித்தேன்’.

புஷ்கர்- காயத்ரி, ஹலீதா, இரஞ்சித், ஞானவேல் என நீங்கள் வேலை பார்த்த இயக்குநர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் நீங்கள் கற்று கொண்ட விஷயங்கள்?

‘நிறைய விஷயங்களை நான் கற்று கொண்டேன். இவர்கள் எல்லாரையும் பொதுவான ஒரு விஷயத்தில் இணைக்க வேண்டும் என்றால் வேலை மீது அவர்கள் கொண்ட ஆர்வமும் ஈடுபாடும்தான். இந்த விஷயத்தைதான் நான் முதலில் நம்புவேன். அதுதான் என்னையும் அவர்களிடமும் வேலை செய்ய வைக்கும்’.

அடுத்த படங்கள் என்ன?

”சில நேரங்களில் சில மனிதர்கள்’ என ஒரே ஒரு படம் மட்டுமே அடுத்து வர இருக்கிறது. அசோக் செல்வன் நடித்திருக்கிறார். விஷால் இயக்கி இருக்கிறார். ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த நண்பர்கள் எல்லாருமே சேர்ந்து ஒரு படத்தில் இணைந்திருக்கிறோம். இதில் நான் நடித்துஇ வசனமும் எழுதியிருக்கிறேன்.

‘ஜெய்பீம்’ போல தீவிரமான கதை இது இல்லை என்றாலும் சுவாரஸ்யமான நிறைவான ஒரு படமாக உருவாகி இருக்கிறது. இந்த தலைப்பு ஒரு புத்தகத்தின் தலைப்பு என்பதால் அந்த கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஆனால் அந்த புத்தகத்தின் கதைக்கும் படத்திற்கும் தொடர்பு இல்லை. இரண்டும் வேறு வேறு களம்’.