மியன்மாரில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை!

0
61
Article Top Ad

11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டர், தண்டனை விதிக்கப்பட்ட மூன்றே நாட்களில் விடுதலை செய்யப்பட்டார்.

ஃபிராண்டியர் மியன்மார் ஆன்லைன் தளத்தின் நிர்வாக ஆசிரியராக இருந்த 37வயதான ஃபென்ஸ்டர், மே மாதம் யாங்கூன் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

பெப்ரவரியில் இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள டஸன் கணக்கான உள்ளூர் ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர்.

ஃபிரான்டியரின் கூற்றுப்படி ஃபென்ஸ்டர் இதற்கு முன்னர் மியன்மார் நவ் என்ற ஒரு சுயாதீன செய்தித் தளத்தில் பணியாற்றினார். இது ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் இராணுவத்தை விமர்சித்துள்ளது.

மியன்மார் நவ் என்ற தடைசெய்யப்பட்ட ஊடகத்தில் அவர் பணியாற்றுகிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அமைந்தன. டேனி 2020ஆம் ஆண்டு ஜூலையில் மியன்மார் நவ்வில் இருந்து இராஜினாமா செய்து அடுத்த மாதமே ஃபிரான்டியரில் சேர்ந்தார்.

ஃபென்ஸ்டர் குடியேற்றச் சட்டத்தை மீறியதற்காகவும் சட்ட விரோதமான தொடர்பு மற்றும் இராணுவத்திற்கு எதிரான எதிர்ப்பை ஊக்குவித்ததற்காகவும் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.

அத்துடன் அவர் மீது தேசத்துரோகம் மற்றும் பயங்கரவாதம் ஆகிய இரண்டு கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கான தண்டனை அறிவிக்கப்படாத நிலையில் கடந்த 12ஆம் திகதி அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மியன்மாரில் இருக்கும் முன்னாள் அமெரிக்க தூதர் பில் ரிச்சர்ட்சன் ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டரை விடுவிப்பது குறித்து இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இதில் டேனி ஃபென்ஸ்டரை விடுதலை செய்ய மியன்மார் இராணுவ அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இதன்படி சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு டேனி ஃபென்ஸ்டர் திங்கட்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும்இ ஃபென்ஸ்டர் அமெரிக்கா செல்வதற்கும் மியன்மார் இராணுவ அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் அங்கு ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டு ஊடகத்தினர் மீது வன்முறை கட்டவிழத்துவிடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.