நாட்டை முடக்க நேரிடலாம்! – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

0
193
Article Top Ad

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாத் தொற்று உறுதியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் நாட்டை முடக்க நேரிடலாம்.

எனினும், தற்போதைக்கு அவ்வாறான ஒரு தேவை ஏற்படவில்லை.

கொரோனாப் பரவுகை நிலைமை மோசமடையாதிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

நாட்டில் கொரோனா மரணங்களில் தளம்பல் நிலை காணப்படுகின்றது. அண்மைய நாட்களாக இந்த மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஓமிகோர்ன் திரிபால் இலங்கைக்கு எவ்வாறான தாக்கம் ஏற்படும் என்பது குறித்து எதிர்வுகூறல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது.

தென்னாபிரிக்காவுடன் நேரடியான விமானப் போக்குவரத்துச் சேவை கிடையாது” – என்றார்.

தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து இரு வாரங்களாக எவரும் வரவில்லை! – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு

புதிதாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா மாறுபாட்டின் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்ட ஆறு தென்னாபிரிக்க நாடுகளின் சுற்றுலாப் பயணிகள், கடந்த 14 நாட்களாக நாட்டுக்கு வரவில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தென்னாபிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, சிம்பாப்வே, லெசோதோ மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள், கடந்த 14 நாட்களாக நாட்டுக்கு வரவில்லை என்றும், ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக, நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நாட்டுக்குள் நுழைய அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 14 நாட்களில் இந்த நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தவிர வேறு எவரும் நாட்டுக்கு வந்துள்ளார்களா என்பது குறித்து உரிய திணைக்களங்கள் ஆராயும் என்றும், அதற்கேற்ப சுகாதாரத்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

தடை செய்யப்பட்ட 6 நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும், விசா வழங்கும்போது மேற்குறிப்பிட்ட பயணிகள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்களா என்பதை அதிகாரிகள் பரிசோதிப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.