‘சமையல் எரிவாயு வெடிப்பு’ விவகாரம்: சம்பந்தப்பட்டவர்களை உடன் கைது செய்க! – எதிரணி வலியுறுத்து

0
209
Article Top Ad

சமையல் எரிவாயு விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

சமையல் எரிவாயு சிலிண்டரின் கலவையில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடரும் நிலையில் அது தொடர்பாக தர நிர்ணய நிறுவனங்கள் உறுதிசெய்யவில்லை என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அவர், அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டு வெடிக்கும் நிலை நாட்டில் உருவாகி வருகின்றமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண சபையில் நேற்று தெளிவுபடுத்தியதையடுத்து ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமையல் எரிவாயு சிலிண்டர்களின் கலவையின் அளவில் மாற்றம் செய்திருப்பது தொடர்பாக தர நிர்ணய நிறுவனங்கள் உறுதிசெய்யவில்லை என அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

ஆனால், 12.5 சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றில் இருக்க வேண்டிய இரசாயன அளவு தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவர் அனில் கொஸ்வத்த, நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ப்ராடேன் 20 வீதமும், பூடென் 80 வீதமும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையால் இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இரசாயனக் கூறுகள் இரண்டும் 50, 50 என உள்ளடங்குகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” – என்றார்.