ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை: மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பு

0
202
Article Top Ad

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பொதுத் தேர்தலில் ஆங்சான் சூகியின் கட்சி வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்தது.

ஆனால் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக கூறி, ஆங்சான் சூகி கட்சியின் அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1ம் திகதி  அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்தது.

இதையடுத்து மியான்மர் மக்கள் ராணுவ ஆட்‌சியை ஏற்க மறுத்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

ஆங்சான் சூகி உள்ளிட்ட பலரை வீட்டு காவலில் அடைத்தது ராணுவம். எம்.பி.க்கள், கட்சி பிரதிநிதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து தேர்தலின்போது சட்ட விரோதமாக வாக்கி டாக்கி வாங்கியது, தேசத்துரோகம், ரகசிய சட்டத்தை மீறியது, சட்ட விரோதமாக தங்கம் பெற்றது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது எனப் பல வழக்குகள் ஆங் சான் சூகி மீது தொடரப்பட்டன.

இந்நிலையில் 76 வயதான ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

505(பி) பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இயற்கை பேரிடர் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான ஆங் சான் சூகி மியான்மரில் மக்கள் விடுதலைக்காக போராடியதற்காக ஏற்கனவே 21 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தவர் ஆவார்.