ICC டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம்

0
205
Article Top Ad

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்திய மண்ணில் 14 தொடர்களில் பங்கேற்ற இந்திய அணி 14 தொடரிலும் வென்று சாதித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில் ‘டாஸ்’ வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்திய அணியில் துவக்க வீரர் மயங்க் அகர்வால் 150 ரன்கள் குவித்து அசத்தினார்.

நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாற்று சாதனை நிகழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 62 ரன்களில் சுருண்டது.

அடுத்து நியூசிலாந்துக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காத இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது.

70 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்து இருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது இந்தியா.

540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை துவங்கியது.

இந்திய அணியின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து நியூசிலாந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

போட்டியின் நான்காம் நாளான நேற்று 56.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து.

இதன் மூலம் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்க்ஸில் அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை வென்றுள்ளது இந்திய அணி.

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 டெஸ்ட் போட்டிகளில் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.