எகிறும் மரக்கறி விலைகளால் திணறும் மக்கள்

0
219
Article Top Ad
இலங்கையில் கடந்த இரண்டுவருடகாலமாக பொருட்களின் விலைகள் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காண்பித்துவந்தாலும் கடந்த சில மாதகாலப்பகுதியில் ஏற்பட்ட அதிகரிப்பைப் போன்றதொன்றை நினைவிருக்கும் காலத்தில் யாருமே கண்டதில்லை
 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துக்கொண்டே சென்றாலும் மரக்கறிவிலைகள் பல மடங்கு அதிகரித்திருப்பது சாதாரண மக்களை மட்டுமன்றி வியாபாரிகளையும் கவலை கொள்ளவைத்துள்ளது.
கொழும்பில் மலிவாக மரக்கறிகளைக் கொள்வனவு செய்யக்கூடிய சந்தைகளில் ஒன்றாக கூறப்படும் ஐந்துலாம்புச் சந்தியிலுள்ள மரக்கறிச் சந்தைக்கு சில தினங்களுக்கு முன்னர் நேரில் சென்றபோது அங்கு கண்ட விலைகளைப்பார்த்து அதிர்ச்சிஏற்பட்டது.  அங்கு மரக்கறிகளை வாங்க வருகைதந்திருந்தர்களுடனும் விற்பனை செய்கின்றவர்களுடனும் பேசிய போது அவர்களின் கவலைகளையும் வேதனைகளையும் புரிந்துகொள்ளமுடிந்தது
 கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் துப்பரவுப்பணியாளராக இருக்கும் வயது முதிர்ந்த பெண்மணியொருவர் கருத்துவெளியிடுகையில்
‘கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆயிரம் ரூபா கொண்டு வந்தால் அதிகளவான பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும். தற்போது 5 ஆயிரம் ரூபா கொண்டு வந்தால் 1000 ரூபா பெறுமதியான பொருட்களையே கொள்வனவு செய்ய முடிகின்றது. நான் இலங்கையில் உள்ள பிரபலமான பாடசாலையில் பணிபுரிகின்றேன். வீட்டில் உள்ளோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அதனால் இன்று விடுமுறை எடுத்துத் தான் இந்தப் பொருட் கொள்வனவிற்கு வந்தேன். இந்த முதிர்ந்த வயதிலும் நான் வேலை செய்ய வேண்டியிருக்கின்றது. நான் ஒரு துப்புரவுத் தொழிலாளி.
உழைப்பதற்கு மேலதிகமாக செலவு ஏற்படுகின்றது. அதனால் கடன் வாங்க வேண்டி ஏற்படுகின்றது. நாளாந்தம் பருப்பும் சோறும் தான் சாப்பிடுகின்றோம். பிள்ளைகளுக்கு கூட நல்ல உணவைக் கொடுக்க முடியவில்லை. முன்னர் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அதிக மரக்கறியுடன் உணவு சமைப்போம். ஆனால் இப்போது எதுவும் இல்லை. பணம் வைத்திருப்பவர்கள் சமாளிக்கின்றார்கள் ஆனால் எங்களுக்கு பெரும் துன்பமாக இருக்கின்றது.  
 
கடந்த சில வருடங்களாக  தினந்தோறும் சந்தைக்கு மரக்கறிகொள்வனவிற்காக விஜயம் செய்யும் பி. 24 வயதுடைய பி. கிருஷ்ணா என்ற இளைஞன் விலைகளின் அதிகரிப்பை பற்றி கருத்துவெளியிடுகையில் ..
“நான் நாளாந்தம் மரக்கறி சந்தைக்கு வருவேன். முன்னர் ஒரு தேங்காய் 60 ரூபாவுக்கு வாங்க முடியும். தற்போது 100 ரூபாவுக்கு குறைவாக ஒரு நல்ல தேங்காயை வாங்க முடியாது. ஒரு கீரைக் கட்டுக்கூட சாதாரணமாக 40 – 50 ரூபா சொல்கின்றார்கள். தற்போது ஒரு மரக்கறி குறைந்தது 400 ரூபா. அதற்கு குறைய எதுவும் வாங்க முடியாது. ஒரு கிலோ கரட் தற்போது 420 ரூபா சொல்கின்றார்கள்.
தற்போது மரக்கறி விலைக்கு ஏற்ப உண்ணும் உணவையும் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். “
மரக்கறிவிலையேற்றத்தால் வியாபாரிகளும் பெரும் கேள்விகளுடன் இருப்பதை அவர்களுடன் அளவளாவியபோது உணர்ந்துகொள்ளமுடிந்தது 
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக விற்பனையில் ஈடுபட்டுவரும் செல்வா   கருத்துவெளியிடுகையில்
“மழை காரணமாக மரக்கறிகளின் விலை மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள் தற்போது 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கத்தரிக்காய் கடந்த மாதம் 250 கிராம் 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதே கத்தரிக்காய் இந்த மாதம் 250 கிராம் 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறி கொள்வனவிற்காக மக்கள் வருகின்றார்கள் ஆனால் 1 கிலோ மரக்கறி கொள்வனவு செய்கின்ற இடத்தில் தற்போது 250 கிராம் மாத்திரமே கொள்வனவு செய்கின்றார்கள். அன்றாடம் உழைத்து தமது தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. நாளாந்தம் 2 ஆயிரம் ரூபா உழைத்தாலும் 2500 ரூபா வாழ்க்கைச் செலவு ஏற்படுகின்றது.
நாட்டில் எரிவாயு இல்லை. அங்கர் அதிக விலையில் விற்கப்படுகின்றது. குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியாமல் இருக்கின்றது. கடன்பட்டு வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கின்றது.
அன்றாடம் உழைத்தாலும் 1200 தொடக்கம் 2000 ரூபா தான் கிடைக்கின்றது. அதனை வைத்து எவ்வாறு வாழ முடியும்?
வீட்டு வாடகை நீர்க் கட்டணம் மின்சாரக் கட்டணம் பிள்ளைகளின் படிப்புச் செலவு என்று தேவைகள் அதிகமாகக் காணப்படுகின்றது. சமாளிக்க முடியாமல் திணறுகின்றோம்.
பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு இந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.”
கடந்த 15வருடங்களுக்கு மேலாக மரக்கறி விற்பனையில் ஈடுபட்டுவரும் 40வயதுடைய மொஹமட் உசைர் மொஹமட் ஷவ்ராஸ் கருத்துவெளியிடுகையில்
“வெங்காயம் என்றால் சற்றுக் குறைந்த விலையில் வாங்கலாம். ஆனால் முன்னர் இருந்த விலையை விட அனைத்துப் பொருட்களும் விலை அதிகரித்து விட்டது. வெங்காயம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. அவையும் அதிக விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
இதற்கு காரணம் இப்போது மரக்கறி கொள்வனவிற்கு செல்வதில்லை. தக்காளி கிலோ 50 ரூபாவாக இருந்தது தற்போது 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொத்தமல்லி இலை ஒரு கட்டு இன்று 1200 ரூபா. 6 மாதத்திற்கு முன்னர் போஞ்சி 1 கிலோ 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது தற்போது அது 600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
விலை குறைவு என்று எதுவும் இல்லை. சம்பளம் குறைவு சாப்பாட்டு விலை அதிகம். எங்களிடம் வரும் வர்த்தகர்கள் நினைக்கின்றார்கள் நாங்கள் அதிக விலையில் மரக்கறி விற்கின்றோம் என்று. ஆனால் நாளாந்தம் அறவிடப்படுகின்ற வரி அதிகரிக்கின்றபோது மரக்கறிகளின் விலை அதிகரிக்கின்றது.
நேற்று ஒரு கப் தேநீரின் விலை 20 ரூபா. இன்று அது 30 ரூபா. ஏழை மக்கள் வாழமுடியாத சூழல் தான் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு ஒழுங்கான ஜனாதிபதியை நாட்டுக்கு கொண்டு வருவதே இதற்கான தீர்வாக அமையும். மக்களுக்கு ஆதரவான மக்கள் மீது இரக்கம் கொண்ட ஜனாதிபதியாக இருக்க வேண்டும்.
நாங்கள் இப்போது ஜனாதிபதியிடம் கேட்பது உண்பதற்கான உணவு மாத்திரமே. இதற்காக தானா நாங்கள் அவருக்கு வாக்களித்தோம்?
முறையான திட்டமிடல் அற்ற உரக் கொள்கை காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் அதிகளவான மழைவீழ்ச்சி கொவிட் -19தாக்கத்தால் இரண்டுவருடங்களாக தொடரும் பொருளாதார மந்த நிலை அரசாங்கத்தின் முறையற்ற வரி அமுலாக்கம் இறக்குமதிக் கொள்கை என இன்னமும் பல விடயங்களை ஒன்றுசேர்ந்து மக்களின் வாழ்க்கையை வாட்டி வதைக்கின்றன.  இப்படியே போனால் மரக்கறிகளின் விலைகள் இன்னமும் பல மடங்கு அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நுவரேலிய மரக்கறிச் சந்தைக்கு மரக்கறிகள் வராதால் மூடிக்கிடப்பதான செய்திகள் மக்களுக்கு இனிவரும் நாட்கள் மிகுந்த சவாலாக இருக்கப்போவதை எதிர்வுகூறுகின்றன. நாட்டின் பிரதான் மரக்கறி உற்பத்தி மாவட்டத்தின் சந்தை க்கு இந்த நிலை என்றால் ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதைப் போன்று எதிர்வரும் மார்ச் மாதமளவில் நாட்டில் மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்பது நிஜமானமாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இனிவரும் நாட்களில் மக்கள் வீட்டுத்தோட்டங்களில் அன்றேல் பூச்சாடிகளில் மரக்கறிகளைப் பயிரிடுவதன் மூலம் முழுமையாக இல்லாவிடினும் ஒரளவிற்கேனும்  மரக்கறி பற்றாக்குறையை சமாளிக்க முடியும்