Ashes 1st Test கிரிக்கெட்: இங்கிலாந்தை துவம்சம் செய்த அவுஸ்ரேலிய அணி

0
171
Article Top Ad

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

கடந்த 8ஆம் திகதி பிரிஸ்பேன் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸிற்காக 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களையும் ஒல்லி போப் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் பெட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் மற்றும் ஜோஸ் ஹெசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கிறீன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி 425 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ட்ராவிஸ் ஹெட் 152 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 94 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில்இ ரொபின்சன் மற்றும் மார்க்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் ஜெக் லீச் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 278 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 297 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்படி இங்கிலாந்து அணி அவுஸ்ரேலியா அணிக்கு 20 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்போது இங்கிலாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ஜோ ரூட் 89 ஓட்டங்களையும் டாவிட் மாலன் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் நாதன் லியோன் 4 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் மற்றும் கிறீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் மற்றும் ஜோஸ் ஹெசில்வுட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ட்ராவிஸ் ஹெட் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.