‘உயிர் ஒன்றை ரத்துச் செய்வதை விடவும் நிகழ்ச்சி ஒன்றை ரத்துச் செய்வது சிறந்தது’-உலக சுகாதார அமைப்பு

0
191
Article Top Ad

உலகெங்கும் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் தமது விடுமுறை திட்டங்கள் சிலதை ரத்துச் செய்யும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

‘உயிர் ஒன்றை ரத்துச் செய்வதை விடவும் நிகழ்ச்சி ஒன்றை ரத்துச் செய்வது சிறந்தது’ என்று குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேஸ் ‘கடினமான முடிவுகள்’ எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் ஆதிக்கம் கொண்ட வைரஸ் திரிபாக ஒமிக்ரோன் மாறி இருப்பதாக சுகாதார நிபுணர்கள் அறிவித்திருக்கும் நிலையிலேயே டெட்ரோஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

டெல்டா திரிபை விடவும் ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவுவது தொடர்பில் ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உட்பட பல நாடுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை இறுக்கியுள்ளன.

புதிய திரிபு பரவுவதை கட்டுப்படுத்த இந்த நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளன. கிறிஸ்மஸ் காலத்தில் நெதர்லாந்து கடுமையான முடக்கநிலையை கொண்டுவந்துள்ளது.

எனினும் நாட்டை முடக்குவதற்கு ஜனாதிபதி ஜோ பைடனிடம் திட்டம் இல்லை என்று வெள்ளை மாளிகை கடந்த திங்கட்கிழமை கூறியது.

முழுமையாக தடுப்பூசி பெற்றபோதும் கிறிஸ்மஸ் பயணங்கள் ஒமிக்ரோன் பரவலை அதிகரிக்கும் என்று அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் அந்தோனி பௌச்சி எச்சரித்துள்ளார்.

பிரிட்டனிலும் ஒமிக்ரோன் திரிபு உச்சத்தை பெற்றிருக்கும் நிலையில் புதிய விதிகளை கொண்டுவருவதற்கான வாய்ப்பு பற்றி பிரதமர் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் அந்நாட்டில் மேலும் கட்டுப்பாடுகள் கொண்டுவருவது பற்றிய அறிவிப்புகள் வெளியாகவில்லை.

எனினும் லண்டனில் நோய்ப்பரவல் நிலவரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில்இ புத்தாண்டை வரவேற்கும் முக்கியக் கொண்டாட்ட நிகழ்ச்சியை மேயர் சாதிக் கான் ரத்து செய்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் தொன்னாபிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் திரிபு அவதானத்திற்குரிய ஒரு திரிபாக உலக சுகாதார அமைப்பு அடையாளப்படுத்தியது.