சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கவே மாட்டோம்! – மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் திட்டவட்டம்

0
165
Article Top Ad

எவர் எத்தகைய யோசனைகளை முன்வைத்தாலும் அரசு கடன் பெற்றுக்கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கடன் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது மிக ஆபத்தானது எனத் தெரிவித்துள்ள அவர், நாட்டின் பொருளாதார பிரச்சினையை சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்லாமல் உள்நாட்டிலேயே முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நிபந்தனைகளுக்கு அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால் நாட்டுக்கு முதலீடுகளோ சுற்றுலா பயணிகள் வருகையோ இடம்பெறாமல் விடலாம்.

அவ்வாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற்றுக்கொள்வதற்குச் சென்றால் அவர்கள் கண்டிப்பாக வட்டி வீதத்தை அதிகரிப்பதாகவும் நாணயத்தின் பெறுமதியை குறைக்க இடமளிக்குமாறும் நாட்டின் வளங்களை விற்பனை செய்யுமாறும் ஓய்வூதியக் கொடுப்பனவை குறைக்குமாறும் கூற வாய்ப்புண்டு. அதுமட்டுமன்றி பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டி வரும். நாட்டின் நெருக்கடி நிலைமையைச் சிறந்த முகாமைத்துவம் மூலம் தீர்க்க முடியும்” – என்றார்.