Scott Boland அறிமுக போட்டியிலேயே அசத்தல்: ஆஷஸ் தொடரை வென்றது அவுஸ்ரேலியா!

0
144
Article Top Ad

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில், அவுஸ்ரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள அவுஸ்ரேலியா அணி, தொடரையும் வென்றுள்ளது.

மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி, 185 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 50 ஓட்டங்களையும் ஜொனி பேர்ஸ்டொவ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் போலண்ட் மற்றும் கிறீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 267 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்கஸ் ஹரிஸ் 76 ஓட்டங்களையும் வோர்னர் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் ரொபின்சன் மற்றும் மார்க்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்டோக்ஸ் மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 82 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 68 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், அவுஸ்ரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 28 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஸ்கொட் போலண்ட் 6 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் 3 விக்கெட்டுகளையும் கேமரூன் கிறீன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அறிமுக போட்டியிலேயே மொத்தமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்கொட் போலண்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.