உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு

0
114
Article Top Ad

திருச்சபைத் தலைவராக, நிறவெறிக்கு,எதிரான போராளியாக, மனித உரிமைச் செயற்பாட்டாளராக சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவராக தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு அவர்கள் உலகெங்கும் அறியப்பட்டவர். இவர் கடந்த 26ஆம் திகதி தனது 90 வது வயதில் காலமானார்.

தென்னாபிரிக்க நாட்டின் அங்கிலிக்கன் திருச்சபைப் பேராயரான இவர், அந்நாட்டின் சிறுபான்மையினரான வெள்ளை இனத்தவரின் நிறவெறிக் கொள்கைக்கு எதிராக 1980களில் சாத்வீக வழியில் தீவிரமாகப் போராடிய துணிவுமிக்க ஒரு திருச்சபைத் தலைவர். 1984ஆம் ஆண்டு இவர் சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார்.

தனது சொந்த நாடாகிய தென்னாபிரிக்காவில் தான் சார்ந்த கறுப்பினத்தவரின் உரிமைக்காக மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இவர் குரல் கொடுத்தார்.

எய்ட்ஸ், காசநோய் தற்பாலினர் வெறுப்பு, திருநங்கை இனத்தினர், வறுமை, இனப்பாகுபாடு ஆகிய துறைகளில் தீவிரமாகப் பணியாற்றியுள்ளார். இவர் ‘தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’ தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.இவர் 1931ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7ஆம் திகதி பிறந்தார்.

கிங்ஸ் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். 1955ஆம் ஆண்டு நொமொலீசோலியா சென்கான் என்ற பெண்ணை திருமணம் செய்து நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையானார்.

இவர் தென்னாபிரிக்க அங்கிலிக்கன் திருச்சபையின் குருவாக 1961ஆம் ஆண்டு திருநிலைப்படுத்தப்பட்டார். 1976 ஆம் ஆண்டு ஆயராக உயர்த்தப்பட்டார்.கேப் ரவுன் மறைமாவட்டத்தின் ஆயராக 1986 தொடக்கம் 1996 வரை பணியாற்றியுள்ளார். பேராயர் டுட்டு அவர்கள் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும் தனது நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.

இவர் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் குறித்து நன்கு அறிந்திருந்தார். தமிழ் மக்கள் கடந்த காலத்தில் அனுபவித்த துன்பங்களை அறிந்திருந்தார். தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென இவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

கேப் ரவுணில் வெளியிட்ட அறிக்கையொன்றில் இவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக லண்டனில் இருந்து வெளிவரும் ‘தமிழ் கார்டியன்’ என்ற ஏடு 1997ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது.

மனித உரிமைச் செயற்பாடுகளுக்காகவும் சாத்வீகப் போராட்டங்களுக்காகவும் பல சர்வதேச விருதுகளை இவர் பெற்றுள்ளார். நோபல் பரிசை விட இன்னும் சில பரிசில்களும் இவரைத் தேடி வந்தன. 1986ஆம் ஆண்டு மனிதத்திற்கான அல்பேர்ட் சுவைட்சர் பரிசையும் 1987ஆம் ஆண்டு பாசெம் இன் டெர்ரிச பரிசையும், 1999ஆம் சிட்னி அமைதிப் பரிசையும் 2005 ஆம் ஆண்டு காந்தி அமைதிப் பரிசையும் பெற்றார்.

2009 ஆம் ஆண்டு இவருக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் சுதந்திரப் பதக்கம் வழங்கப்பட்டது. தனது மேடைப் பேச்சுக்களையும் மேற்கோள்களையும் பல நூல்களாகத் தொகுத்துள்ளார்.

பேராயர் டுட்டு அவர்களின் மரணத்தை உறுதி செய்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோச, விடுதலை பெற்ற தென்னாபிரிக்காவை மக்களுக்கு வழங்கியவராக டெஸ்மண்டு டுட்டு வரலாற்றில் பதிவாகியுள்ளதாக தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

டெஸ்மண்ட் டுட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அறியப்பட்ட தென்னாபிரிக்காவின் சிறந்த நபர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். நாட்டின் கறுப்பின பெரும்பான்மையினருக்கு எதிரான வெள்ளையினத்தவர்களின் கொடூரமான ஒடுக்குமுறையை அவர் வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.

தென்னாபிரிக்காவின் வெள்ளை இனத்தவரின் சிறுபான்மை ஆட்சிக்கு எதிராக வன்முறையற்ற எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொண்டார். உறுதி, கருணை, பிறர் நலனில் அக்கறை கொண்டவராக இவர் திகழ்ந்தார் என தென்னாபிரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அனுதாபச் செய்தியில், ‘முன்னாள் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு அவர்கள் உலகம் முழுவதும் எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்ந்தவர். மனித கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கான அவரது வலியுறுத்தல் என்னென்றும் நினைவில் கொள்ளத்தக்கது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேயல் நாட்டவரால் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள் பற்றி விசாரிக்க ஐ.நாவால் அனுப்பப்பட்ட குழுவுக்கு ஒரு யோசனை சொன்னார். ‘நிறத்தால் பாகுபடுத்தும் இந்நாட்டில் இருக்கும் உங்களது முதலீடுகளை திரும்பப் பெறுங்கள். இதனால் இழப்பு எங்களுக்குத்தான். அது அற்புதமான நோக்கத்திற்கான இழப்பு’ என்றார்.

பேராயர் டெஸ்மன்ட் டுட்டு அவர்கள் ஆயர், இறையியலாளர், சமூக செயற்பாட்டாளர், நூலாசிரியர் என்று பன்முக ஆளுமையைக் கொண்டவர். இவர் நீதியின் குரலாக ஒலித்தவர். உற்சாகமூட்டும் உரையாளராகத் திகழ்ந்தார். சிறந்த நகைச்சுவையாளராகவும் விளங்கினார். இவருடைய பெருவாழ்வுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

அருட்திரு தமிழ் நேசன் அடிகளார்