வெளிநாட்டவரை திருமணம் செய்ய பாதுகாப்பு அறிக்கை : தவிர்ப்பதற்காக இறுதிக்கட்டத்தில் பதிவாளர்களை நாடும் மணமக்கள்

0
281
Article Top Ad

வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்ய எதிர்பார்க்கும் எந்த இலங்கையரும் அத்திருமணத்தைப் பதிவுசெய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் ‘ பாதுகாப்பு தடைநீக்கல் சான்றிதழ் பெறுவது’ 2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையால் திருமணம் செய்துகொள்ளும் எதிர்பார்ப்பில் இலங்கை வந்துள்ளவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளமை பற்றிய தகவல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளியாகியவண்ணமுள்ளன.

புதிய பாதுகாப்பு விதிமுறைகளை தவிர்த்துக்கொள்வதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டவர்கள் பலரும் திருமணப்பதிவாளர்களிடம் படையெடுத்துதவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் பணத்தையும் பெறுமதியான நேரத்தையும் செலவழித்து திருமணத்திற்காக இலங்கை விஜயம் செய்துள்ள வெளிநாட்டவர்கள் எப்படியேனும் திருமணப்பதிவையேனும் நடத்திமுடித்துவிடவேண்டும் என்ற முனைப்பில் இறுதிக்கட்ட நகர்வுகளில் முனைப்பாக இறங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

கொழும்பைச் சேர்ந்த திருமண பதிவாளரொருவர் கருத்துவெளியிடுகையில் ‘ இலங்கை அரசாங்கம் புதிதாக கொண்டுவந்துள்ள நடவடிக்கை முற்றுமுழுதாக வெளிநாட்டவர்களையா கட்டுப்படுத்தும் அன்றேல் இலங்கையைப்பூர்வீகமாக கொண்ட ஆனால் தற்போது வெளிநாடுகளின் பிரஜைகளாக மாறிவிட்டவர்களையும் கட்டுப்படுத்துமா என்பது தொடர்பில் தமக்கே தெளிவற்ற நிலை இருப்பதாக தெரிவித்தார்.

மற்றுமொரு திருமணப் பதிவாளரிடம் வினவியபோது ‘ இந்த நடைமுறை 2022 ஜனவரி முதலாம் திகதி முதலே அமுலுக்கு வருகின்ற காரணத்தால் திருமணத்திற்காக இலங்கை வந்திருக்கின்றவர்கள் இந்த வருட முடிவிற்குள் எழுத்துமூல திருமணப்பதிவை செய்வதற்கு தாம் ஆலோசனை வழங்குவதாக தெரிவித்தார். எழுத்துமூல பதிவை முடித்துவிட்டு பின்னர் தேவைப்படின் அவர்கள் அடுத்த வருடத்தில் வைபவத்தை எடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட ஜோடிகள் கடந்த சில தினங்களுக்குள்ளாக தமது அலுவலகத்தில் எழுத்துமூல திருமணப்பதிவைச் செய்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள சூழல் தொடர்பாக பதிவாளர்களும் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

கடந்த டிசம்பர் 26ம்திகதி வெளியான அறிவிப்பிற்கு அமைய,இலங்கைப் பிரஜைகள் வௌிநாட்டவரைத் திருமணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் விசேட பாதுகாப்பு அறிக்கையைப் பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கைப் பிரஜைகள் வௌிநாட்டவரை திருணம் செய்யும்போது முதலில் வௌிநாட்டவர் தமது நாட்டு பாதுகாப்புப் பிரிவின் சான்றிதழைப் பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

⭕ இலங்கையர் திருணம் செய்யும் வௌிநாட்டவர் இறுதி 06 மாதங்களுக்குள் எவ்வித குற்றவியல் குற்றச்சாட்டையும் எதிர்நோக்கவில்லை என்பது அந்தச் சான்றிதழில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

⭕ அதனைத் தொடர்ந்து இலங்கைப் பிரஜை அல்லது அவர் சார்பான ஒருவரால் மாத்திரம், அந்தச் சான்றிதழ் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

⭕ பின்னர் அந்தச் சான்றிதழ் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவூடாக பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்படும்.

⭕ பாதுகாப்பு அமைச்சு வழங்கும் அறிக்கைக்கு அமைய பதிவாளர் நாயகத்தினால் திருமணத்திற்கான அனுமதி, மேலதிக மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதனையடுத்து, திருமணப் பதிவிற்கான அனுமதி கிடைப்பதுடன் இந்தச் சட்டத்திற்கு அமைய மேலதிக மாவட்டப் பதிவாளர் நாயகத்திற்கு சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

01. செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, அதன் பிரதி மற்றும் செல்லுபடியாகும் வீசா

02. வௌிநாட்டவரின் சிவில் நிலைமையை உறுதிப்படுத்தும் அந்நாட்டு சான்றிதழ்

03. பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரம்

04. வௌிநாட்டவரால் தயாரிக்கப்பட்ட தமது சுகாதார நிலைமை தொடர்பான அறிக்கை

05. பிறப்புச் சான்றிதழ் மற்றும் அதன் பிரதி

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் இந்தப் புதிய நிபந்தனை அறிவிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயம் று.ஆ.ஆ.டீ. வீரசேகர தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிதித்தூய்தாக்கலுடன் தொடர்புடைய வௌிநாட்டவர்கள், இலங்கையர்களைத் திருமணம் செய்வதைத் தடுப்பதற்காக புதிய நிபந்தனை அறிவிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் மேலும் கூறியிருந்ததாக நியுஸ் பெர்ஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

 

இதேவேளை ஒருவர் தான் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள ஏன் வேறொருவரின் அனுமதியை கோரவேண்டும் என சட்டத்தரணி திஷ்யா வெரகொட கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையர்கள் வெளிநாட்டு பிரஜைகளை திருமணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவைப்படும் என்ற அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘எனது பிள்ளைகளும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள். ஒரு நாள் அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பும் போது, ​​பாதுகாப்பு செயலாளரிடம் அனுமதி கேட்பதை நான் விரும்பவில்லை. அவர்கள் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ள யாருடைய அனுமதியும் தேவையில்லை.

தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள அவர்கள் ஏன் வேறு நபர்களிடம் அனுமதி பெற வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.

புதிய நிபந்தனைகள் சட்டவிரோதமானது, சட்டத்திற்கு புறம்பானது, பகுத்தறிவற்றது, நியாயமற்றது, அபத்தமானது, அதிதீவிரமானவை மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் முன்னுரிமையின் அடிப்படையில் விசாரிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவர் கோரியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கூறப்படும் சுற்றறிக்கையை அமுல்படுத்த வேண்டாம் என பதிவாளர் நாயகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.