டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக குயிண்டன் டி கொக் திடீர் அறிவிப்பு!

0
139
Article Top Ad

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான குயிண்டன் டி கொக், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

தற்போது இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் குயிண்டன் டி கொக், நேற்று (வியாழக்கிழமை) முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தனது ஓய்வுக் குறித்து குயிண்டன் டி கொக் கூறுகையில், ‘இது நான் மிக எளிதாக எடுத்த முடிவு அல்ல. சாஷாவும் (மனைவி) நானும் எங்கள் முதல் குழந்தையை இந்த உலகத்திற்கு வரவழைத்து, எங்கள் குடும்பத்தை வளர்க்கப் போகிறோம் என்ற நிலையில் இந்த முடிவு எடுத்துள்ளேன்.

என் வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க நான் நிறைய நேரம் எடுத்துக்கொண்டேன். குடும்பம் தான் எனக்கு எல்லாமே. எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய மற்றும் அற்புதமான அத்தியாயத்தின் போது அவர்களுடன் இருக்க நேரத்தையும் இடத்தையும் பெற விரும்புகிறேன்.

நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறேன், மேலும் எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும், அதனால் வரும் அனைத்தையும் நான் விரும்புகிறேன். ஏற்றத் தாழ்வுகளையும், கொண்டாட்டங்களையும், ஏமாற்றங்களையும் கூட அனுபவித்து மகிழ்ந்தேன். ஆனால் இப்போது நான் இன்னும் அதிகமாக விரும்பும் ஒன்றைக் கண்டேன்.

வாழ்க்கையில், நீங்கள் நேரத்தைத் தவிர எல்லாவற்றையும் வாங்கலாம், இப்போது, எனக்கு மிகவும் பொருத்தமான நபர்களால் சரியாகச் செய்ய வேண்டிய நேரம் இது’ என கூறினார்.

29 வயதான குயிண்டன் டி கொக், கடந்த 2012ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கெதிரான ரி-20 கிரிக்கெட்டில் தனது சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்டார்.

2013ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியிலும், 2014ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார்.

இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டி கொக், 6 சதங்கள் 22 அரைசதங்கள் அடங்களாக 3,300 ஓட்டங்களை பெற்றுள்ளார். சராசரி 38.82ஆகும். அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை 141 ஆகும்.