19வயதோருக்கான ஆசிய கிரிக்கெட் கிண்ணம்: இந்தியக் கிரிக்கெட் அணி சம்பியன்!

0
132
Article Top Ad

19வயதோருக்கான ஆசிய கிரிக்கெட் கிண்ணத் தொடரின், சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணியும், இலங்கை கிரிக்கெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்போது இலங்கை கிரிக்கெட் அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கையில், போட்டியின் இடைநடுவே மழைக் குறுக்கிட்டது.

இதனால், போட்டி சற்று நேரம் இடை நிறுத்தப்பட்டது. பின்னர், 38 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு போட்டி ஆரம்பமானது.

இதன்படி இலங்கை கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 38 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, யசிரு ரொட்றிகோ ஆட்டமிழக்காது 19 ஓட்டங்களையும் ரவீன் டி சில்வா 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், விக்கி ஒஸ்ட்வால் 3 விக்கெட்டுகளையும் கௌசல் தம்பே 2 விக்கெட்டுகளையும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவி குமார் மற்றும் ராஜ் பாவா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 106 என்ற வெற்pற இலக்கை நோக்கி இந்தியக் கிரிக்கெட் அணி, துடுப்பெடுத்தாட களமிறங்கிய போது, மீண்டும் மழைக் குறுக்கிட்டது.

இதனால், இந்தியக் கிரிக்கெட் அணிக்கு போட்டி, 32 ஓவர்களாக குறைக்கப்பட்டு 102 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 21.3 ஓவர்கள் நிறைவில் வெறும் 1 விக்கெட்டினை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் ஷேக் ரஷீத் ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், யசிரு ரொட்றிகோ 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.