இங்க எப்படி வாழறது?

0
253
Article Top Ad
வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் இலங்கையில் இருப்போரிடம் அங்கு  வந்துவிடவேண்டியது தானே என்று கேட்கும் போது இங்குள்ள உறவினர்களின் பதில் ஒன்றுமே வசதிகள் இல்லாட்டியும் பரவாயில்லை இங்கு நாம் ருசிகரமான சமைத்து வயிறாற சாப்பிடுகின்றோம் என்பதாகவே கடந்த காலத்தில் இருந்தது.
ஆனால் கடந்த ஒரு சில மாதங்களில் அனைத்துமே இலங்கையில் தலைகீழாக மாறிவிட்டது . இன்னமும் சில நாட்களில் 2022ம் ஆண்டு புதுவருடம் வரவிருக்கின்றது. புதுவருடத்தில்  மூன்று வேளையும் சாப்பிடக்கிடைக்குமா என்பதே இன்று சாதாரண மக்கள் பலரின் கேள்வியாக இருக்கின்றது.
PHOTO_20211222_183412.jpg
கொச்சிக்கடை விசித்திரா ஹோட்டலில் அரை ராத்தல் ரோஸ் பாண் ,இரண்டு அப்பம் ,ஒரு பிளேன் ரீயின் விலையை கேட்டேன். 150 ரூபா என்றார் பணியாளர்
 
விலையேற்றம் இலங்கையின் அனைத்துதரப்பு மக்களையும் வெகுவாகப்பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் ஒன்றான கொழும்பு கொச்சிக்கடைப்பகுதிக்கு சென்றிருந்தேன்.  முதலில் அங்குள்ள உணவகமொன்றுக்கு சென்று அரை ராத்தல் ரோஸ் பாண் இரண்டு அப்பங்கள் ஒரு பிளேன் ரீயை வாங்கி பில்லைக் கொண்டு வரச் சொன்னேன். பணியாளர் 150 ரூபா கட்டணம் என்று பில்லைத்தந்தார். எனக்கு தூக்கிவாரிப்போடவில்லை. அதனைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தமையால் இருக்கக்கூடும். ஆனால் அன்றாடக்கூலி வேலைசெய்கின்றவர்களுக்கு இது எப்படி இருக்கும்
கொச்சிக்கடை தோட்டங்களுக்குள் வாழும் மக்களில் கணிசமானவர்கள் வாழ்க்கையில் சோகங்களையும் மகிழ்ச்சியையும் ஒரேமாதிரியாக எடுத்துக்கொண்டு எதிர்கால வாழ்வை முன்னோக்கிப்பார்க்கின்றவர்கள். ஆனால் தற்போதைய விலையேற்றம் அவர்களது வாழ்க்கை முறையிலும் ஆரம்பகட்டமாற்றத்தை காண்பிப்பதை உணவுதொடர்பான கரிசனைகள் உறுதிப்படுத்தின.
விவேகானந்த தெருவிலுள்ள தோட்டமொன்றில் வசிக்கும் ஒரு குடும்பத்தலைவியிடம் பொருட்களின் விலையேற்றம் பற்றிப் பேச்சை ஆரம்பித்ததும் உங்களுக்குத் தெரியாததா ? என்று பதில் கேள்விகேட்டார். இருந்தும் விடாப்பிடியாக கேட்டபோது ‘ முன்னர் 10 இடியப்பங்களை இரவுக்கு வாங்கிச் சாப்பிடும் நிலையில் தற்போது 5 இடியப்பங்களில் கொண்டுவந்துவிட்டிருக்கின்றது விலையேற்றம் ‘ என்றார்
கடந்த சில மாதங்களாகவே பலர் மூவேளையும் வயிறாற உண்பதில்லை. அதற்கு பொருளாதாரமும் இடம்கொடுப்பதில்லை . ஆனால் தற்போது ஒரு வேளையேனும் வயிறாற உண்ணமுடியுமா என்ற கவலைகள் ஏற்கனவே அவர்களை ஆட்கொள்ள ஆரம்பித்திருக்கின்றதனை உணர்ந்துகொள்ளமுடிகின்றது.
கொச்சிக்கடைப்பிரதேசத்தில் ஆலயப்பணிகளிலும் சமூகப்பணியிலும் தன்னை ஆர்வத்தோடு இணைத்துச் செயற்பட்டு தற்போது சுகவீனம் காரணமாக சற்றே ஓய்வில் இருக்கும் எமிலியானுஸ் பெர்னாண்டோ அவர்களிடம் விலையேற்றம் பற்றிக் கேட்டபோது 70வயதைக் கடந்து விட்ட தனது வாழ்நாளில் இப்படியானதொரு விலையேற்றத்

Screenshot_20211223_143121.jpg
தனது மனைவி கிரேட்டா சகிதமாக எமிலியானுஸ் பெர்னாண்டோ

தைக் கண்டதில்லை என்றார் பெருமூச்சு விட்டபடி.  கொச்சிக்கடைப் பிரதேசம் கிறிஸ்மஸ் நாட்களில் வழமையாக களைகட்டுவதுண்டு . ஆனால் இம்முறை பெரிதாக எவ்வித ஆரவாரத்தையும் அங்கே காணமுடியவில்லை .பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை இதற்கு முக்கியமான காரணமாக இருக்க முடியுமோ என ஊகிக்கத்தோன்றியது. ‘ நான் பேசியவர்களில் பலர் இம்முறை கிறிஸ்மஸ் புதுவருடத்திற்கு புத்தாடைகளைக் கூட வாங்கவில்லை என்றார் அவர்.

 
சுற்றுலா விமானத் துறை சார்ந்த வேலையில் இருக்குகின்ற மார்ட்டிஸ் லிட்டோனிடம் தற்போதைய விலையேற்றம் எப்படி கிறிஸ்மஸ் புதுவருடக்கொண்டாட்டங்களில் தாக்கம் செலுத்துகின்றது. எதையேனும் கைவிட உத்தேசமாக என்று வினவியபோது ‘ எதைக் கைவிடச் சொல்கின்றீர்கள் . அன்றாடம் காலையில் பால்மாவுடன் தேநீர் குடிப்போம் அதனைக்கைவிடமுடியுமா மதிய உணவைக் கைவிடமுடியுமா? இல்லையே அது போன்று எப்படி முயன்றேனும் கிறிஸ்மஸ் புதுவருடத்திற்காக வீட்டிற்கு பெயின்ட் அடித்துவிட முயற்சிக்கின்றோம். கேக் அடிக்காமல் புத்தாடை வாங்காமல் இருப்பதை நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்தக்காலத்தில் உறவினர்கள் எல்லோரும் எம்வீட்டிற்கு வந்து பார்ட்டிபோடுவதுண்டு . இம்முறை அதனை நான் இன்னமும் திட்டமிடவில்லை ‘ என்றார் லிட்டோன்.

248048335_10158968231708520_6014102012279121298_n.jpg

லிட்டோன்

======================================= 
எரிவாயு விலை கூடியபோதும்  அரிசி விலை கூடியபோதும்  சீனி விலை கூடிய போதும் உணவுப் பொருட்களின் விலை  கூடியது உண்மைதான் .  ஆனால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பும்  சில நாட்களுக்கு முன்பாக பெற்றோல் ,டீஸல் ,மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்தமையும் மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிட்டுள்ளது.
 பணவீக்கம் அண்மைக்காலத்தில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளமையை கடந்த புதன் கிழமை உத்தியோகபூர்வத்தகவல்களும் உறுதிப்படுத்தின.
 சுற்றுலாத்துறையில் பெரிதும் தங்கியுள்ள இலங்கையின் பொருளாதாரம் கொவிட் பெருந்தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு நாணயக்கையிருப்பை தக்கவைப்பதற்காக மேற்கொண்டுள்ள இறக்குமதி தடை நடவடிக்கைகளால் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் அசூரத்தனமாக உயர்வடைந்துள்ளன .
கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 11. 1 வீதமாக அதிகரித்துள்ள நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிட்டு நோக்குகையில் உணவுப்பொருட்களின் விலைகள் 17 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறியுள்ளது. ஆனால் நடைமுறையில் பார்க்கும் போது இதனை விட பலமடங்கு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமை தூலம்பரமாகின்றது.
நாட்டின் பணவீக்கம் அதிகரித்துச் செல்லும் நிலையில் அண்மையில் இலங்கையில் 10000 நாணயத்தாள்களை அச்சடிக்கும் திட்டம் உள்ளதாகவும் சில இணையத்தளங்களும் சமூக ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன.
 புதிதாக பத்தாயிரம் (10இ000) ரூபா நாணயத்தாளை அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என நிதி அமைச்சு கூறியுள்ளது.

எனினும் இது தொடர்பில் பரவும் வதந்திகளில் உண்மையில்லை என அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலர் தவறான தகவல்களை உருவாக்குவதாக செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே அந்நிய செலாவணி கையிருப்பின் அளவை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்குத் தேவையான திட்டங்களை மத்திய வங்கி ஆளுநர் மேற்கொண்டுள்ளதாக அதன் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி கையிருப்பை விரைவாக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை தொடர்புகொண்டு வினவியபோது இம் மாத இறுதிக்குள் 3 பில்லியன் டொலருக்கும் அதிக அந்நிய செலாவணி கையிருப்பைத் திரட்ட முடியும் என அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

எதிர்வரும் ஜனவரியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஏற்கனவே பெற்றோலிக்கூட்டத்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரலாற்றில் காணாத அளவில் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு குறைந்துள்ளமையால் இறக்குமதிகளுக்கான தடை தொடரப்போவது திண்ணம் இந்த நிலையில் பொருட்களின் விலையேற்றம் இன்னமும் பாரிய அளவில் அதிகரிப்பது மட்டுமன்றி எதிர்வரும் மார்ச் மாதமளவில் அதிக விலைகொடுத்துக் கூட பொருட்களை வாங்கமுடியாத அளவிற்கு உணவுப் பஞ்சம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.  ஒமிக்ரோன் பரவல் இதனை இன்னமும் வேகப்படுத்த வாய்ப்புக்கள் உண்டு.
காஸ் எரிவாயு இருந்தாலும் சமைக்க முடியாது  சங்கடப்படுவது போன்று காஸ் பணம் எவ்வளவு இருந்தாலும் பொருட்களை வாங்கமுடியாத நிலையில் பொருட்களுக்கான பற்றாக்குறையும் தொடர்ந்து பஞ்சமும் தலைவிரித்தாடும் சாத்தியக் கூறுகளையும் நிராகரித்துவிடமுடியாது.
எனவே தூரதிருஷ்டியுடன் சிந்தித்து நடக்காவிட்டால் அடுத்துவரும் கிழமைகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெரும் நெருக்கடி மிக்கதாக உணவுக்கான போராட்டகளமாக அமைவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.