வெளிநாட்டவரை திருமணம் செய்ய பாதுகாப்பு அறிக்கை காலத்தின் அவசியமா?

0
201
Article Top Ad

ஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக்கட்டிக்கொடுப்பேன்

என்று பெண்ணைப்பெற்ற பெற்றோர் வீம்பாக இருப்பார்கள் என்று

என் தாத்தா பாட்டி பேசும் போது கேட்டு இருக்கின்றோம் . ஆனால்

இப்போது அந்த நிலை  வலுவிழந்து யாராவது ஒரு

வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை

கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது

மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு.

ஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும்

அவன் குணம், குடும்பம், படிப்பு,வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு

மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி

முன்பின் தெரியாதவனுக்கு வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக பொத்தி பொத்தி வளர்த்த அந்த அப்பாவிகளை

அவனுடன் அனுப்பிவைப்பது எந்த வகையில் நியாயம்..!  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் கடந்த இரண்டு வருட கால ஆட்சிக்காலத்தில் அவ்வப்போது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் உருவாக்கும் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தது.  அந்த வகையில் இலங்கைப் பிரஜைகள் வௌிநாட்டவரைத் திருமணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் விசேட பாதுகாப்பு அறிக்கையைப் பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் கடந்த வாரம் விடுத்துள்ள அறிவிப்பையும் எடுத்துக்கொள்ளமுடியும்.
இலங்கைப் பிரஜைகள் வௌிநாட்டவரை திருமணம் செய்யும்போது முதலில் வௌிநாட்டவர் தமது நாட்டு பாதுகாப்புப் பிரிவின் சான்றிதழைப் பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில்

 இலங்கையர் திருமணம் செய்யும் வௌிநாட்டவர் இறுதி 06 மாதங்களுக்குள் எவ்வித குற்றவியல் குற்றச்சாட்டையும் எதிர்நோக்கவில்லை என்பது அந்தச் சான்றிதழில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து இலங்கைப் பிரஜை அல்லது அவர் சார்பான ஒருவரால் மாத்திரம், அந்தச் சான்றிதழ் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

 பின்னர் அந்தச் சான்றிதழ் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவூடாக பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்படும்.

 பாதுகாப்பு அமைச்சு வழங்கும் அறிக்கைக்கு அமைய பதிவாளர் நாயகத்தினால் திருமணத்திற்கான அனுமதி, மேலதிக மாவட்ட பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதனையடுத்து, திருமணப் பதிவிற்கான அனுமதி கிடைப்பதுடன் இந்தச் சட்டத்திற்கு அமைய மேலதிக மாவட்டப் பதிவாளர் நாயகத்திற்கு சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

01. செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, அதன் பிரதி மற்றும் செல்லுபடியாகும் வீசா

02. வௌிநாட்டவரின் சிவில் நிலைமையை உறுதிப்படுத்தும் அந்நாட்டு சான்றிதழ்

03. பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரம்

04. வௌிநாட்டவரால் தயாரிக்கப்பட்ட தமது சுகாதார நிலைமை தொடர்பான அறிக்கை

05. பிறப்புச் சான்றிதழ் மற்றும் அதன் பிரதி

இந்த நடவடிக்கைகள் எதற்காக என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த   பதிவாளர் நாயம் று.ஆ.ஆ.டீ. வீரசேகர தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் இந்தப் புதிய நிபந்தனை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் கருத்துவெளியிட்டிருந்தார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிதித்தூய்தாக்கலுடன் தொடர்புடைய வௌிநாட்டவர்கள்இ இலங்கையர்களைத் திருமணம் செய்வதைத் தடுப்பதற்காக புதிய நிபந்தனை அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியிருந்தார். ஆனால் இதற்கு சமூகத்தில் பலதரப்பட்டவர்களிடையே இருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.  மக்களின் சுதந்திரத்தை பறிக்கின்ற மனித உரிமைகளை மீறும் செயல் என்ற கருத்தும் பரவலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் முன்னாள் இலங்கை மனித உரிமை ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் கருத்துவெளியிடுகையில் ‘ இது அபத்தமான நடவடிக்கை . பாதுகாப்பு அமைச்சிடம் திருமணம் செய்வதற்கான சான்றிதல் பெறுவது என்பது மக்களின் உரிமைகளில் நேரடியாக தலையீடு செய்வதாகும்’ என்று தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை தொடர்பாக பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடுகையில் ‘ அப்பாவிப் பெண்களை ஏமாற்றி நடுத்தெரிவில் விட்டுச் செல்லும் பேர்வழிகள் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறான நடவடிக்கை கண்டிப்பாக அவசியமாகும். தமிழர்கள் போர் காரணமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து அந்த நாடுகளின் குடியுரிமையை பெற்றபின்னர்  தமது திருமணத்திற்கான இலங்கையில் இருந்து மணப்பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் கடந்த சில தசாப்தங்களாக இருக்கின்றது. முகவர்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பெண்களில் பலரும் தம்மை முகவர்களே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பல கதைகளை அறிவோம் . அதேபோன்று யுத்தத்தின் காரணமாக ஏழ்மை நிலையிலுள்ள பெண்களையும் வசதி வாய்ப்பை விரும்பும் பெண்களையும் ஆசை வார்த்தை கூறி நம்பவைத்து திருமணம் செய்து நட்டாற்றில் விட்ட கதைகள் பலவும் உள்ளன. வெளிநாட்டவர்கள் இங்கு வந்து திருமணம் புரிகின்றனர். ஆனால் அவர்களுக்கு அந்த நாடுகளில் குடும்பங்கள் உள்ளன என்பது பிறகே தெரியவருகின்றது. திடீர் பணக்காரரான வெளிநாட்டவர்கள் இலங்கை வந்து தமது சொந்த ஊருக்கு வெளியே வீடு கட்டி அங்கொரு குடும்பம் இங்கொரு குடும்பம் எனவும் வாழ்கின்றனர்.

இங்குள்ள பெண்களைத் திருமணம் செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு அழைக்காமல் பல ஆண்டுகளாக வாழாவெட்டியாக அலைக்கழிய விடும் பலரது கதைகளும் உள்ளன. இவ்வாறான நிலையில் வெளிநாட்டவர்களின் பின்னணி தொடர்பாக ஆராய்ந்து சான்றிதழ் பெறுவது மிகமிக முக்கியம் அப்போது தான் அப்பாவிப் பெண்களை ப் பாதுகாக்க முடியும் என்றார்.

உண்மையாகவே இங்குள்ள அப்பாவிப் பெண்களை மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது வரவேற்கப்படவேண்டியது . ஆனால் இந்த அரசாங்கம் உண்மையில் எந்த நோக்கத்திற்காக இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்தது என்பது பற்றிய தெளிவில்லாமல்  இதனை எடுத்த எடுப்பில் ஆதரித்து விடமுடியாத நிலை உள்ளது.