Article Top Ad
“கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்த விட்டது” , “ஒரு சில நிமிடங்களில் நாம் நிர்க்கதியாகிவிட்டோம்” , “வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் தலைகீழாகிவிட்டது” , “இப்படி நடக்கும் என்று நாம் அறிந்திருக்கவில்லை” இவ்வாறான வார்த்தைகளை திடீரென நேரும் மரணங்களை துயரங்கங்களை எதிர்கொண்டவர்களின் உறவினர்கள் ,நண்பர்கள் கூறுவதைப் பார்த்தும் கேட்டும் இருக்கின்றோம்.
அண்மைக்காலமாக நாட்டில் விபத்துக்களிலும் அனர்த்தங்களிலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. தினந்தோறும் தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தால் விபத்துக்களாலும் இயற்றை அனர்த்தத்தாலும் அநியாயமாக உயிரிழப்பவர்களின் கதைகள் மனதை வருத்தும்
விபத்திலோ ,அனர்த்த்திலோ திடீர் மரணத்தை தழுவிக்கொண்டவர்கள் யாரோ ஒருவராக இருந்தால் பலவேளைகளிலே பலரும் அந்த இடத்தில் ஒருவர் இறந்துவிட்டார் இந்த இடத்தில் ஒருவர் இறந்துவிட்டார் என பத்தோடு பதினொன்றாக கணக்குவைத்துக்கொள்வார்களே தவிர ஆழமாக பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களை ஆராய்ந்து பார்ப்பதில்லை என்பதே இயல்பாகும்.
மனித நேயம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் யாரேனும் ஒருவரது ஒரு அவலச் சாவைப் பற்றிக் கேள்விப்படுகின்றபோது ஒருகணம் மன பதறிப்போவதுண்டு. அவர்களின் குடும்பத்தார் நிலை குறித்து அங்கலாய்ப்பதுண்டு.
எங்கோ யாருக்கோ துயரம் என்றபோதே பதறிய மனம் அந்தத் துயரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நம் உறவினர் என்று அறிந்த கணம் ஏற்படும் வேதனை அளவற்றது. அவ்வாறான நிலை அண்மையில் அடியேனுக்கும் ஏற்பட்டது.
அவிஸ்ஸாவலைப் பகுதியிலுள்ள ஆறொன்றில் நீராடச் சென்றபோது மூன்று இளம் பெண்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்த செய்தியைப் பார்த்த போது ஐயோ பாவம் யாரோ எவரோ என மனம் பதறியது.
ஆனால் உயிரிழந்தவர்கள் எமது உறவினர் என்று அறிந்தபோது மனம் அடைந்த வேதனைக்கு அந்தக் குடும்பத்தைப் பற்றிய பின்னணியை அறிந்தமையும் முக்கியகாரணமாகும்.
இன்னமும் சில மாதங்களில் கணவர் செல்வரஜீவனுடன் கனடாவில் இணைந்துகொள்ளவிருந்தார் மேரி பேபினி ( வயது 29).
மேரி பேபினி வீரகேசரி நிறுவனத்திலும் சில மாதங்கள் பணியாற்றியிருக்கின்றார். அவருடன் பழகிய நாட்களை நினைவுகூர்ந்த முன்னாள் பணியாளர் ஒருவர் கூறுகையில் ‘ மிகுந்த பாசமிக்கவர் .
எம்மோடு அன்பொழுகப் பேசுவார். ‘ சில நாட்களின்முன்னரும் அவர் என்னுடன் பேசினார் . அவர் மரணித்துவிட்டதை என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை’ என்றார் .
கனடா சென்றுவிட்டால் மீண்டும் எப்போது உறவினர்களைக் காண்பதென்று நினைத்தாரோ பேபினி, உறவினர்களை வடக்கில் இருந்து அழைத்து மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்திருந்தார்.
இப்படி மகிழ்ச்சியான பல தருணங்களில் கடந்த டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்மஸ் தினமன்று உறவினர்கள் புடைசூழ அந்த வீடு மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது
ஆனந்தம் விளையாடும் வீடு என்பதற்கு அடையாளமாக வத்தளை கெரவலபிட்டிய பகுதியில் அமைந்திருக்கின்ற அவர்களின் வீடுதான் இருக்குமோ என நேரில் கண்டவர்களை எண்ணத்தூண்டியது என்றால் மிகையல்ல.
கனடா பயணம் ,பட்டப்படிப்பு பூர்த்தி, பிறந்த நாள் என மகிழ்ச்சிகொள்ளும் பல காரணங்களை கொண்ட உறவினர்கள் ஓரிடத்திலேயே இருந்தபோது தான் வெளியே சென்று மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.
இப்படியிருக்கையில் தான் அந்த மறக்கமுடியாத நாளாக டிசம்பர் 30ம் திகதி பிறந்தது.
காலை 10.30 மணியளவில் எட்டுப்பேர் கொண்ட உறவினர்கள் அவிஸ்ஸாவெல்லையை நோக்கி புறப்பட்டுச் செல்கின்றனர். அதன் பின்னர் நடந்ததைக் கூறுகின்றார் சம்பவத்தை நேரில் கண்டவரான 23 வயதுடைய மேரி ஜெயந்தினி ( ஜெனி)
” கூகுளில் தேடிப்பார்த்தபோது ஹங்வெல்லயில் அழகிய நீர்வீழ்ச்சி இருந்ததையடுத்து அனைவரும் அங்கே போகத் தீர்மானித்தோம் நாம் இரண்டு மணிளவில் “குமாரி எல்ல” என்ற அந்த நீராடும் பகுதிக்கு சென்றபோது நூறுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் . கைக்குழந்தைகள் முதற்கொண்டு பலரும் அங்கே நீராடிக் கொண்டிருந்ததால் நாமும் துணிந்து அங்கே இறங்கினோம் .
ஒரு சில மணித்தியாலங்கள் நீராடிவிட்டு 4 மணியளிவில் நாம் அங்குள்ள பாறையொன்றில் இருந்து உணவருந்தினோம்.அப்போது குடும்பங்கள் பல அங்கே இருந்தன. அதன்பின்னர் அந்த இடத்தின் அழகைரசித்துக்கொண்டிருந்தோம் . பின்னர் நானும் எனது உறவுக்கார பையனும் உடைகளை எடுத்துவருவதற்காக மேலே சென்றோம். அப்போது மெதுவாக மழை தூறியதால் வாகனத்திற்குள்ளேயே உடையை மாற்றிக்கொண்டு வந்தேன்.
சற்றே நேரத்தில் மழை கனதியாக பெய்யத்தொடங்கிவிட்டதால் பாறையில் இருந்த எனது அக்கா பேபினி உட்பட அனைவரும் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றார்கள். நான் சில மீற்றர்கள் தொலையில் இருந்து அவர்களை வெளியே வந்து உடை மாற்றுமாறு கூறினேன். நான் முதலில் அவர்களைக் கூப்பிட்டபோது முழங்காலுக்கு கீழே தான் நீர்மட்டம் இருந்தது அவ்வளவு பெரிதாக இருக்கவில்லை.
ஆனால் சடுதியாக நீர் விரைந்து வழிந்தோடத்தொடங்கியது. அப்போது அவர்களது செருப்புகள் பைகள் எல்லாம் அடித்துச் செல்லத் தொடங்கியது. அப்போது ஒருவர் கையை மற்றவர் பற்றிக்கொண்டு ஆறுபேரும் வெளியே வர முயற்சித்தனர் . ஆனால் எங்கிருந்துவந்ததோ தெரியவில்லை பெரிதாக ஒரு அலையாக நீர் அடித்துக்கொண்டு வந்தது. ஒரு சொக்லட் நிறத்தில் அந்த நீர்வரத்து இருந்தது. அதில் அனைவரும் அடித்துச்செல்லப்பட்டபோது ஆரம்பத்தில் அங்கிருந்த எமது உறவுக்கார பையன்கள் அக்காவையும் சித்தப்பா மகள் மாரையும் கைகளால் பிடித்து வைத்திருந்தனர்.
ஆனால் அடுத்தடுத்து நீர்மட்டம் அதிகரித்து வேகமாக வரத்தொடங்கியதால் அனைவருமே கைகளை விடவேண்டியதாயிற்று. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாக அடித்துச்செல்லப்பட்டனர். மீண்டுமாக கரங்களையும் தலைமுடியையும் பிடித்து காப்பாற்ற உறவுக்கார பையன்கள் முயன்றதைப்பார்த்தேன் . ஆனால் 6.30ற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. கொழும்பிலுள்ள எனது மூத்த அக்காவிற்கு தொலைபேசி எடுத்தது அந்த நேரம்தான் அதனால் தான் நேரத்தை சரியாகச் சொல்லமுடிகின்றது.
அடித்துச்செல்லப்பட்டவர்களில் மூவர் ஒருவழியாக தப்பிவிட்டனர். தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது தாம் தான் காப்பாற்றியதாக ஊர் மக்கள் கூறியதைக் கண்டேன் . ஆனால் என்னுடைய உறவுக்காரப் பெண் ஒருவரை மாத்திரமே அங்கிருந்த ஒருவர் காப்பாற்றினார் . ஏனைய இரண்டு பேரும் தாமாகவே தப்பி வந்தனர் என்று கூறிய ஜெனி அந்த சில மணிநேரங்களில் அடைந்த துயரத்தை வாழ்நாளில் யாருமே அனுபவித்துவிடக்கூடாது. ‘ எனது சொந்தங்கள் அடித்துச்செல்லப்பட்டபோது காப்பாற்றுவதற்காக நீருக்குள் இறங்க முடியவில்லை . அந்தளவிற்கு வேகமாக இருந்தது.
நான் கரையோரமாக கத்திக்கொண்டு ஓடினேன் . அப்போது அங்கே இருந்த அண்ணா ஒருவர் அந்த ஆறு வளையும் ஒருபகுதிக்கு கூறுமாறு கூறினார் . அங்கேதான் அடித்துக்கொண்டு வருபவை வந்து சேரும் என்றார். நான் பல நிமிடங்கள் நின்றுபார்த்தேன் . எதுவும் வரவில்லை. நான் கதறியழுத சத்தத்தைக் கேட்டு வீடுகளுக்குள் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்தார்கள் . அப்போதுதான் அவர்கள் தாமே அங்கு நீராடச் செல்வதில்லை அது ஆபத்தானதெனக் கூறினார்கள். ஒரு சம்பவம் நடந்த பின்னர் இப்படிச் சொல்பவர்கள் முன்கூட்டியே எச்சரித்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது “என ஜெனி மேலும் தெரிவித்தார்.
வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்று மூன்று இளம் உயிர்களைப் பலிகொடுத்த குடும்பத்தினரின் கதை அமைந்துவிட்டது. அன்றையதினத்தலேயே ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டது. ஜனவரி முதலாம் திகதி இன்னொருவரது உடலமும் ஜனவரி 2ம் திகதி மேரி பேபினியின் உடலமும் கண்டெடுக்கப்பட்டன.
மகிழ்ச்சியின் உச்சத்தில் கடந்த கிறிஸ்மஸைக் கொண்டாடிய குடும்பத்தினருக்கு 2022 புத்தாண்டின் ஆரம்பமே வேதனையின் உச்சமாக அமைந்தது. கடந்த ஜனவரி ஐந்தாம் திகதி மேரி பேபினி செல்வரஜீவனின் பூதவுடல் நாயக்ககந்த சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரோடு பலியான உறவினர்களான தேவதாஸ் விதுஷா ( வயது 14) தேவதாஸ் உஷாரா வயது 16) ஆகியொரின் பூதவுடல்கள் யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.இந்த வாழ்க்கை என்பது நிலையற்றது நீர்க்குமிழி போன்றது நாம் நினையாத கணத்தில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இந்த அழகிய அப்பாவி இளம் பெண்களின் மரணங்கள் உதாரணங்களாகும்
இந்த பெருந்துயரச் சம்பவத்தை அடுத்து இலங்கை உயிர் காப்பு அமைப்பின் தலைவர் அஸங்க நாணயக்காரவை தொலைபேசியூடாக நேர்காணல் செய்த போது வருடாந்தம் 800 பேர் வரையில் இலங்கையில் உள்ள நீர்நிலைகளில் மக்கள் மரணிப்பதாகத் தெரிவித்தார் . இதற்கு நீர் நிலைகள் பற்றிய போதிய அறிவின்மை உட்பட பல காரணங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அஸங்க நாணயக்கார பகிர்ந்துகொண்ட உயிர்களைப்பாதுகாப்பதற்கு மிக அவசியமான குறிப்புகளை அறிந்துகொள்வதற்கு அடுத்த வாரம் வீரகேசரியைக் கட்டாயம் படியுங்கள் .
ஞாயிறு வீரகேசரிக்காக எழுதிய கட்டுரை குளோப் தமிழில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது