நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழத்தல் :உங்களைப் பாதுகாத்துக்கொள்ள வழியுண்டா?

0
169
Article Top Ad
ஒருவர் நீர் நிலைக்குள் மூழ்கும் போது அவரைக் காப்பாற்ற  உடனே சென்றவரோ வெளியே நிற்பவரோ நீர் நிலைக்குள் குதித்தால் ஒரு மரணம் நிகழும் இடத்து இரண்டு மரணங்களும் இருவர் குதித்தால் ஒரு மரணம் நிகழுமிடத்தில் மூன்று மரணங்களும் நிகழ வாய்ப்புண்டு. எனவே உயிர் காப்பு பயிற்சி எடுக்காதவராயின் ஒருவர் மூழ்கும் போது அவரைக் காப்பாற்றுவதற்காக நீர் நிலைக்குள்  பாய்வதைத் தவிர்ந்துகொள்ளவேண்டும் .
“நாம் செய்த புண்ணியங்கள் எம்மைக் காப்பாற்றிவிடும்”, ” நாம் யாருக்குமே தீமைசெய்யவில்லையே, எமக்கு ஒரு தீங்கும் நடக்காது’, ‘கடவுள் நம்மைப் பார்த்துக்கொள்வார்’ , ‘விதிப்படி எது நடக்கவேண்டுமோ அது நடக்கும்’ இந்த வார்த்தைகள் யாரோ எவரோ உச்சரிக்கும் வார்த்தைகளல்ல.
நாமோ எமக்கு தெரிந்தவர்களோ உச்சரிக்கும் வார்த்தைகள் தான். அதிலும் அதிக ஆபத்துமிக்க இடங்களுக்கு செல்லும் போது கூட இப்படியான நம்பிக்கைகளைக் கொண்டிருப்பவர்களாக எம்மவர்களில் அதிகமானவர்கள் இருக்கின்றனர்.
சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டிய விடயங்களுக்கு மிகுந்த அக்கறை செலுத்தும் எம்மவர்கள் உயிர் ஆபத்துமிக்க விடயங்கள் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இப்படியாக தமக்கு தாமே மனதைச் சாந்தப்படுத்திக்கொள்கின்றனர் என்று கூறுகிறார் இலங்கை உயிர் காப்பு அமைப்பின் தலைவர் அஸங்க நாணயக்கார .
,இலங்கையில் நீர்நிலைகளில் வருடாந்தம் 800 பேர் வரையில் நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதாக இலங்கை உயிர் காப்பு அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே  மனதைப்பதறவைக்கும்  மூழ்கிபலியான சம்பவங்கள் பற்றி ஊடகங்கள்  வாயிலாக  அறிந்துகொண்டோம்.
நீர் நிலைகளைப் பற்றிய போதிய அறிவு இன்மை நீரில் தம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது தொடர்பாக போதிய அறிவற்றவர்களாக அதிகமான இலங்கையர் இருக்கின்றனர் .
இதுவே பெருமளவிலானவர்கள் நீரில் மூழ்கிப் பலியாவதற்கு காரணமாகும் என்கிறார் இலங்கை உயிர் காக்கும் அமைப்பின் தலைவர் .இதனைத்தவிர  அறிந்துகொள்வதில் காண்பிக்கும் அசட்டையீனம்,  மதுப்பாவனை என்பனவும் காரணங்கள் அவர் சுட்டிக்காட்டினார்.
“நாம் ஒரு தீவு நாடு  நாம் நீருடனேயே பிறக்கின்றோம் . ஆனால் 90 சதவீதமானர்வளுக்கு மேற்பட்டவர்களுக்கு எப்படி நீந்துவது எனத் தெரியாது” என்ற கசப்பான உண்மையை அவர் கூறியபோது எம்முன் காணப்படும்  அபாயத்தின் பரிமாணத்தை உணர்ந்துகொள்ளமுடிந்தது.

90 சதவீதத்திற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு எப்படி நீந்துவது என்று தெரியாது

தமது வாழ்வாதாரத்திற்காக 20 சதவீதமானவர்களே கடலைப் பயன்படுத்துகின்றநிலையில் பெரும்பான்மையானவர்கள் உள்நாட்டு நீர்நிலைகளையே பயன்படுத்துகின்றனர் இதனால் ஆறுகள் குளங்கள் ஏரிகள் கால்வாய்கள் நீர்வீழ்ச்சி போன்ற உள்நாட்டு  நீர்நிலைகளைப் பயன்படுத்துவோரே அதிக உயிராபத்துக்களை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
  நீர்வீழ்ச்சிகளே மிகவும் ஆபத்தானது என்று கூறிய அஸங்க இதற்கான காரணங்கள் அடுக்குகின்றார். நீர்வீழ்ச்சிகளுக்கான நீர் வரத்து என்பது எங்கு நீர் வீழ்ச்சி இருக்கின்றதோ அங்கிருந்து பெரும்பாலும் வருவதில்லை மாறாக வேறு இடங்களில் இருந்தே நீர்வீழ்ச்சிகளுக்கான நீர்வரத்து காணப்படும்.
எனவே நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்தில் மழை பெய்யாவிட்டாலும் சடுதியாக நீர்வரத்து அதிகரித்து பெருமளவு நீர் கரைபுரண்டோட வாய்ப்புண்டு. இதனைத்தவிர பாறைகள் மரஞ்செடிகள் கூட நீர் வீழ்ச்சியில் இருந்து கீழே வீழ்வதற்கு வாய்ப்புண்டு இதனால் அதிக ஆபத்துமிக்கவையாக நீர் வீழ்ச்சிகள் காணப்படுகின்றன.
இது ஆறுகளுக்கும் பொருந்தும் என அவர் கூறுகின்றார். ஓரிடத்தில் மிக அமைதியான காலநிலை காணப்படலாம் . ஆனால் திடீரென ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து அபாயம் அதிகமுடையதாக மாறுவதற்கு  பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள வேறிடத்தில்  கடும் மழைபெய்தல் அணைகள் திறந்துவிடப்படுதல் போன்ற இன்னோரன்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்கிறார்  அஸங்க
நீரில் மூழ்கி மரணிப்பது என்பது மரணிப்பவர்களுக்கு மிகவும் வேதனைதரும் எனச் சுட்டிக்காட்டும் அஸங்க நீரில் மூழ்கும் போது நாம் மரணிக்கப்போகின்றோம் என்ற உணர்வு ஆட்கொள்கின்றமையால் மிகுந்த வேதனையுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கின்றது என்கிறார்.

உயிர் காப்பு வீரர்கள்  வீராங்கனைகள் இல்லாத நீர் நிலைகள் என்றால்  அந்த நீர் நிலைகளில் இறங்கி குளிக்காமல் இருப்பது நன்று. அதையும் தாண்டி குளித்தே ஆகவேண்டும் என்றால் நீர் நிலை காணப்படும் பிரதேசத்தை பற்றி இணையத்தில் தேடி இதற்கு முன்னர் இடம்பெற்ற அனர்த்தங்கள் பற்றி அறிந்துகொண்டு செயற்படலாம்.

அதனைவிட முக்கியமானது அந்தப்பிரதேசத்திலுள்ள மக்களுடன்  கதைத்து  1. எந்தப்பகுதியில் குளிக்க வேண்டும்? எங்கு ஆபத்தான பகுதி உள்ளது? இதற்கு முன்னர் நடந்துள்ள அனர்த்தங்கள் என்ன? நாம் எந்த விடயங்கள் தொடர்பாக எச்சரிக்கை கொள்ளவேண்டும்? எத்தனை மணிவரை குளிப்பது நல்லது ? அணை எதனையும்  குறிப்பிட்ட நேரத்திற்கு திறந்துவிடுவார்களா? போன்ற கேள்விகளை எழுப்பி பதிலைப் பெற்றுக்கொண்ட  பின்னரே நீர் நிலைகளில் இறங்கவேண்டும்..
நீர் நிலைகளுக்கு செல்லும் போது அனைவரும் ஓரே நேரத்தில் இறங்குவதைத் தவிர்த்து ஓரிருவர் வெளியே இருந்த நிலைமையை அவதானித்துக்கொண்டிருக்கவேண்டும்.

கையுடன் கயிறு, போத்தல்கள் ,பிளாஸ்டிக்கான்கள், தடிகள் போன்றவற்றை எடுத்துச் சென்று வெளியே இருப்பவர் வைத்திருக்கவேண்டும்.

ஒரு ஆபத்து நேரும் போது இவற்றை நீர் நிலைகளுக்குள் இருப்பவர்களை நோக்கிய எறிந்து அவர்களை காப்பாற்ற முற்படலாம்.
இதனைவிடுத்து ஒருவர் நீர் நிலைக்குள் மூழ்கும் போது அவரைக் காப்பாற்ற  உடனே சென்றவரோ வெளியே நிற்பவரோ நீர் நிலைக்குள் குதித்தால் ஒரு மரணம் நிகழும் இடத்து இரண்டு மரணங்களும் இருவர் குதித்தால் ஒரு மரணம் நிகழுமிடத்தில் மூன்று மரணங்களும் நிகழ வாய்ப்புண்டு.
எனவே உயிர் காப்பு பயிற்சி எடுக்காதவராயின் ஒருவர் மூழ்கும் போது அவரைக் காப்பாற்றுவதற்காக நீர் நிலைக்குள்  பாய்வதைத் தவிர்ந்துகொள்ளவேண்டும் .  எம்மோடு சென்ற உறவினர் நண்பர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அந்தக்கணத்தில் மேலோங்கினாலும் உயிர்ப்பாதுகாப்பு பற்றி தெரியாதவிடத்து பாய்வதைப் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்கிறார்  இலங்கை உயிர் காக்கும் அமைப்பின் தலைவர் அஸங்க நாணயக்கார.
ஆக்கம் : அருண் ஆரோக்கியநாதர்