PTA சட்டமூலம்: ஒரு சில சரத்துகளில் திருத்தம் அவசியம்; ஒரு சிலவற்றிற்கு 2/3 பெரும்பான்மை அவசியம்

0
238
Article Top Ad

 

பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலத்தில் (தற்காலிக விதிகள்) சில சரத்துக்களில் திருத்தங்கள் அவசியம் எனவும் மேலும் சில சரத்துகள் 2/3 பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்றையதினம் (08) பாராளுமன்றம் கூடிய போது சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.

இன்றையதினம் சபாநாயகரினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிவித்தல் வருமாறு…

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்)” எனும் தலைப்பிலான சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன்.

“பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்)” எனும் தலைப்பிலான சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான செல்லுபடியாகும் தன்மை பற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் பின்வருமாறு:-

சட்டமூலத்தின் வாசகம் 2
சட்டமூலத்தின் 2 ஆம் வாசகம் அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாகவில்லை என உயர் நீதிமன்றம் கருதுகிறது.

சட்டமூலத்தின் வாசகம் 3
அரசியலமைப்பின் பிரகாரம், சட்ட மூலத்தின் 3 ஆம் வாசகத்திற்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையானது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில்  மூன்றில் இரண்டு பங்கிற்கு (வருகை தராதவர்கள் உட்பட) குறையாதிருந்தாலொழிய அதனை சட்டமாக இயற்ற முடியாதென உயர் நீதிமன்றம் கருதுகிறது.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி சட்டமூலத்தின் 3வது வாசகத்தில் உள்ள ஏற்பாடுகள் திருத்தப்பட்டால், அது அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாக இருக்காது என உயர் நீதிமன்றம் கருதுகிறது.

சட்டமூலத்தின் வாசகம் 4

எவ்வாறாயினும், அது அவ்வாறு இருக்கையிலும், சட்டமூலத்தின் 4 ஆம் வாசகத்தில் முன்மொழியப்பட்ட 10 ஆம் பிரிவின் உள்ளடக்கத்தில் 141 வது உறுப்புரையை உட்புகுத்துமாறு கெளரவ சட்ட மா அதிபர் அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவார் எனவும் மனுதாரர்களின் கரிசனைகளை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர் அந்தத் திருத்தத்தை பாராளுமன்றத்தின் குழுநிலையில் முன்மொழிவார் எனவும் கற்றறிந்த மேலதிக மன்றாடி அதிபதி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டமூலத்தின் வாசகம் 5
உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில், சட்டமூலத்தின் 5 ஆம் வாசகம் அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாகவில்லை என உயர் நீதிமன்றம் கருதுகிறது.

சட்டமூலத்தின் வாசகம் 6
அரசியலமைப்பின் 80 (3) வது உறுப்புரையின் பிரகாரம் எந்தவொரு காரணத்திற்காகவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரிவு 11 இன் செல்லுபடி பற்றி உயர் நீதிமன்றம் விசாரித்தலோ, தீர்ப்பளித்தலோ அல்லது  எவ்விதத்திலும் கேள்விக்கு உட்படுத்தலோ ஆகாது என அது கருதுகிறது.

சட்டமூலத்தின் வாசகம் 10
உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி சட்டமூலத்தின் 10வது வாசகம் திருத்தப்பட்டால், அது அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாக இருக்காது என உயர் நீதிமன்றம் கருதுகிறது.

சட்டமூலத்தின் வாசகம் 11
சட்டமூலத்தின் 11வது வாசகம் அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டுக்கு முரணானது எனக் கருதுவதற்கு எந்த அடிப்படையும் கிடையாதென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டமூலத்தின் வாசகம் 12
12வது வாசகத்தில் உள்ள உத்தேச பிரிவு 26(2) அது உள்ள வடிவத்தில் அரசியலமைப்பின் 12(1) வது உறுப்புரைக்கு  முரணாக இருக்குமென உயர் நீதிமன்றம் கருதுகிறது.

123(1)(இ) உறுப்புரையின் படி, உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி, சட்ட மூலத்தின் 12வது வாசகத்தில் உள்ள உத்தேச பிரிவு 26(2) இன் ஏற்பாடுகள் திருத்தப்பட்டால், அது அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாக இருக்காது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய நடவடிக்கைகளுக்கான அதிகாரப்பூர்வ அறிக்கையில் அச்சிட உத்தரவிடுகின்றேன்.