வழிபாடுகளை உடனே நிறுத்து: கிறிஸ்தவ தேவாலயத்தில் அத்துமீறி நுழைந்த பிக்குகள் அடங்கலான 600 பேர் கொண்ட கும்பல் அச்சுறுத்தல்

0
286
Article Top Ad

கொழும்பு கிருலப்பனை பிரதேசத்திலுள்ள பிரபலமான கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் பௌத்த பிக்குகள் தலைமையிலான சுமார் 600பேர் கொண்ட கும்பல் அத்துமீறிப் பிரவேசித்து அச்சுறுத்தல் விடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருலப்பனையிலுள்ள மேர்சி கேட் சப்பல் தேவாலயத்திற்கு சுமார் 600 பேர் கொண்ட கும்பல் அத்துமீறிப்பிரவேசித்ததுடன் அனைத்து மத நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு தேவாலயம் உடனடியாக மூடப்படவேண்டும் எனக் கோரியிருந்தாக சிறுபான்மையினருக்கான தெற்காசிய ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

வழிபாடுகள் நிறுத்தப்படாவிடின் கொலையில் முடியும் என மரண எச்சரிக்கையையும் அந்தக் கும்பல் அச்சுறுத்தியிருந்ததாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது ஏற்பட்ட மல்லுக்கட்டலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக விசுவாசியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது அந்தப்பகுதியைச் சேர்ந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அடங்கலாக சுமார் 20 பொலிஸார் அங்கு பிரசன்னமாகியிருந்தாகவும் தேவாலயத்தை இழுத்து மூடச் சொல்வதற்கு எவ்விதமான சட்டபூர்வமான அடிப்படைகளும் இல்லை என்பதால் அந்தப் பகுதியைவிட்டு கலைந்துபோகுமாறும் ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

60 பௌத்த பிக்குகள் அடங்கிய இந்தப் பெரும் கும்பல் அந்த தேவாலயத்தை முழுமையாக உட்சென்று பரிசோதனைசெய்யதாமல் அங்கிருந்த நகரப்போவதில்லை என அடம்பிடித்த நிலையில் அந்த தேவாலய போதகர் முதலில் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இருப்பினும் தனக்கோ தனது ஆலய பக்தர்களுக்கோ எவ்விதமான தீங்கும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பொலிஸ் பொறுப்பதிகாரி உத்தரவாதம் தந்ததையடுத்தே உள்ளே செல்ல அனுமதித்துள்ளார்.

இதன்போது தேவாலயத்தில் இடம்பெறும் மத நடவடிக்கைகள் குறித்து பிக்குகள் கேள்வியெழுப்பியுள்ளனர். கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுக்கொண்டபின்னர் வெளியே வந்த பிக்குகள் தேவாலயம் சட்டவிரோதமானது எனக் கூறிவிட்டு அங்கிருந்த கலைந்துசென்றதாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்த கடந்த ஒன்பதாம் திகதி போதகர் பொலிஸ் நிலையம் கும்பலுக்கு தலைமைதாங்கிய பிக்குகளுக்கு எதிராகவும் கும்பலுக்கு எதிராகவும் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்திருந்தார்.தொடர்ந்து மறுதினமான செவ்வாயக்கிழமையன்று பொலிஸ் நிலையத்திற்கு போதகர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

பொலிஸார் இந்த விடயம் தொடர்பாக தற்போது விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக குண்டர்களின் பல வன்முறைத்தாக்குதல்கள் தொடர்பாக பல உதாரணங்கள் உள்ளன. இருந்தபோதிலும் இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விரைந்து விழிப்புடன் செயற்பட்டதன் காரணமாக ஏற்படவிருந்த தீங்கு தவிர்க்கப்பட்டதாகவும் இதற்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை உறுதிப்படுத்துவதற்கு தேவாலயம் அமைந்துள்ள கிருலப்பனை பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பை எடுத்தபோதும் அங்கிருந்தவர்கள் இப்படி ஒரு சம்பவம் பதிவாகியதை அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்தனர்.