கலவர பூமியாக மாறிய இலங்கை ; என்ன நடந்தது? இன்று!

0
188
Article Top Ad

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து அலரிமாளியில் இன்று (09.05.2022)பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தின் பின் கொழும்பில் பதற்றமான நிலை கலவரமாக மாறியதுடன் தற்போது இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முப்படையினர் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக இன்று அலரிமாளிக்கு அழைக்கப்பட்டிருந்த பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பிரதமர் பதவி விலக கூடாதென கூறியதுடன் அதற்கு ஒருபோது சம்மதிக்க மாட்டோமெனவும் கூறினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,

நாட்டு மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார். நான் எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயற்பட்டேன். அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். நாட்டை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. சவால்களை எதிர்கொண்டு சவால்களை சமாளிப்பதுதான் எனது கொள்கை. சவால்களை கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை என ஆக்ரோஷமான ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார்.

கூட்டம் நிறைவடைந்ததும் அலரிமாளிகையை விட்டு வெளியே வந்த ஆதரவாளர்கள் அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ‘மஹினா கோ கம’வை அடித்து நொறுக்கியத்துடன் அங்கு இருந்த இளைஞர்கள்  மீதும் தாக்குதல் நடத்தினர். இதனைத்தொடர்ந்து பொலிஸாரின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு கொள்ளுப்பிட்டியில் இருந்து காலி முகத்திட நோக்கி சென்ற ஆதரவாளர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’வையும் அடித்து நொறுக்கினர்.

இருதரப்பினரையும் கட்டுப்படுத்தும் முகமாக பொலிசார் அங்கங்கே தண்ணீர் பிரயோகத்தையும் மேற்கொண்டனர். இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக 100இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மஹிந்தவின் ஆதரவாளர்கள் வருகைதந்த வாகனங்களும் அடித்து நெருக்கப்பட்டன.

நாடுமுழுவதும் இந்த விடயம் பெரும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் கலவரமாக மாறியது. இதனால் பொதுஜன பெரமுனவின் முன்னாள் இந்நாள்அமைச்சர்களின் பல வீடுகளும் அலுவலகங்களும் தீவைக்கப்பட்டன.  சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கும் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் முப்படையினர் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மஹிந்தவே பொறுப்புக்கூற வேண்டும் என்பதால் அவரை  கைது செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார். .