வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நாடுகளின் பட்டியலில் 1918ற்கு பின் முதன்முறையாக இடம்பிடித்த ரஷ்யா

0
123
Article Top Ad

 

-picture credit : Thibault Camus/Pool via REUTERS

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையால் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் ரஷ்யா ஒரு நூற்றாண்டில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக தனது வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.

ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு குறைந்தவிலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது. இதுமட்டுமின்றி ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளும் அமெரிக்கஇ ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து உலக நிதிய அமைப்பில் இருந்து ரஷ்யா அந்நியப்பட்டுள்ளது. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியை அந்நாடு சந்தித்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த நூற்றாண்டில் இல்லாதவகையில் ரஷ்யா தனது வெளிநாட்டு நாணய கடனை முதன்முறையாகத் திருப்பிச் செலுத்தவில்லை. உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு விதிக்கப்பட்ட அபராதங்களுக்கு பிறகு மே 27 அன்று வட்டி செலுத்துவதற்கான 30 நாள் சலுகைக் காலமான நேற்றைய இரவு காலக்கெடுவுக்குள் ரஷ்யா செலுத்த தவறிவிட்டது.

ரஷ்யா சுமார் 40 பில்லியன் டாலர் வெளிநாட்டுப் பத்திரங்கள் மூலம் கடன் வாங்கியுள்ளது. அதில் பாதி வெளிநாட்டவர்களுக்குக் கொடுக்க வேண்டியது. ரஷ்யாவின் கையிருப்பில் உள்ள டாலர் உள்ளிட்ட பெரும்பாலான வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்க கையிருப்பு வெளிநாடுகளில் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதன எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நெருக்கடியை சந்திக்க சந்திக்க தன்னிடம் பணம் இருப்பதாக ரஷ்யா கூறி வருகிறது. ”இது நட்பற்ற நாடுகளால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலைமை. இதனால் ரஷ்யர்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த விளைவும் ஏற்படாது. எங்களிடம் பணம் உள்ளது கடன் தொகையை செலுத்த தயாராக உள்ளோம்’ என்று ரஷ்ய நிதியமைச்சர் அன்டன் சிலுவானோவ் கடந்த மாதம் கூறினார்.

ஆனால் சர்வதேச கடன் கொடுத்தவர்களுக்கு பணம் செலுத்தும் வழிகளை மேற்குநாடுகள் மூடியுள்ளதால் பணம் செலுத்த முடியாத நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. போல்ஷிவிக் புரட்சியின் போது ரஷ்ய பேரரசு வீழ்ச்சியடைந்து சோவியத் யூனியன் உருவாக்கப்பட்டபோது ரஷ்யா கடைசியாக சர்வதேச கடனை திருப்பி செலுத்தவில்லை.

1998 நிதி நெருக்கடி மற்றும் ரூபிள் சரிவின் போது ரஷ்யா தனது உள்நாட்டு கடன்களில் 40 பில்லியன் டாலர்களை செலுத்தத் தவறியது. ஆனால் சர்வதேச உதவியுடன் அதனை பின்னர் திருப்பிச் செலுத்தியது. அப்போது ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு உறுதுணையாக இருந்ததால் அது தவறவிட்ட வாய்ப்பாக கருதப்படவில்லை. ஆனால் அதுபோன்ற ஒரு சூழல் ரஷ்யாவுக்கு தற்போது இல்லை.

ஐரோப்பியத் தடைகள் காரணமாக ரஷ்ய நிறுவனங்களின் மதிப்பீடுகளை உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனங்கள் திரும்பப் பெற்று வருகின்றன. நிலுவையில் உள்ள 25% பத்திரங்களை பெற்று கடன் வழங்கிய நிறுவனங்கள் ரஷ்யாவின் தற்போதைய சூழலை இயல்பான ஒன்றாக அறிவிக்க மறுத்து விட்டன.

அதாவது ரஷ்யாவிடம் பணம் இருந்தும் அதனை வெளியே எடுக்க முடியாத முடக்க சூழல் மட்டுமே உள்ளது. இதனை முதலீட்டு நிறுவனங்கள் ஏற்கவில்லை. இதனால் ரஷ்யா கடனை திரும்பிச் செலுத்தவில்லை என்பதே தற்போதைய நிலையாக உள்ளது.