சீனக் கப்பலின் வருகையும் தமிழ்த் தேசியத் தரப்பின் எதிர்ப்பும்

0
178
Article Top Ad

யுவான் வோங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தரவிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் குறித்த கப்பல் வருகைக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த கப்பலின் வருகையானது இலங்கையின் நட்பு நாடான இந்தியாவை அதிக கண்காணிப்பை மேற்கொள்ளத் தூண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்துகின்ற எந்த செயற்பாட்டையும் தமிழர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கின்றார்.

இலங்கை பொருளாதார ரீதியாக நலிவடைந்து மக்களுடைய அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இராஜதந்திர நடவடிக்கையாக இலங்கை அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “இந்தியாவினுடைய புலனாய்வு அறிக்கையின் படி சீனாவினுடைய உளவு கப்பல் வருகை என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரிய ஒரு இடைவெளியை கொண்டு வரும் என நாங்கள் நினைக்கிறோம்.” என அவர் கூறியுள்ளார்.

“எங்களைப் பொறுத்தமட்டில் இந்தியாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை வருமாக இருந்தால் அதனை அனுமதிக்க முடியாது என்பதில் எமது மக்கள் உறுதியாக உள்ளார்கள்.”

இந்த நிலையில், சீனாவின் யுவான் வோங் 5 கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தருகின்றமையானது, வலயத்திற்குள் மீண்டும் அமைதியின்மையை தோற்றுவிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எந்தவொரு விடயத்தையும் எதிர்ப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தெரிவிக்கின்றது.

“இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் நாம் எதிர்ப்பினை வெளியிடுவோம். இந்த கப்பலானது சீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகளை மையப்படுத்தியுள்ளமையாலும், இந்த ஆய்வு இது இந்தோ-பசுபிக் திட்டங்களுடன் தொடர்புபட்டுள்ளதால் இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாகவே அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இதனை நாம் எதிர்க்கின்றோம்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கணகரட்னம் சுகாஸ் தெரிவிக்கின்றார்.

மேலும், இந்திய இராணுத்தின் பெரும்பாலான தளங்கள் அமைந்திருக்கக்கூடிய தென்னிந்தியாவை அண்மித்து இலங்கை அமைந்திருப்பதால் அதிநவீன சீனக் கப்பலொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் அதேவேளையில், இலங்கையிலும் இது மேலும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துமென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிலாஷைகளை பாதிக்கும் எந்தவொரு விடயத்தையும் மிக கவனமாக கண்காணித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி, கடந்த வாரம் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த கப்பல் தொடர்பில் இந்தியா தேவையற்ற கவலையை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக இந்திய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், சீன கப்பலின் இலங்கை விஜயம் குறித்து வெளியாகியுள்ள கரிசனைகளை இலங்கை நிராகரித்துள்ளது.

கப்பலின் இலங்கை விஜயம் குறித்து அமைச்சரவை ஆராய்ந்ததுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன அந்த கப்பலை நங்கூரமிட அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் முன்னொருபோதும் இல்லாத பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த தருணத்தில் இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு உதவியுள்ளன”

அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இந்த விவகாரத்திற்கு இராஜதந்திர தீர்வு காணப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.