சவூதி அரேபியாவுக்கு இலங்கை விடுத்துள்ள அழைப்பு!

0
97
Article Top Ad

சவூதி அரேபியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்க இலங்கை முயன்று வருவதாகவும், தெற்காசிய நாட்டில் ஒரு சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்கு சவுதியை அழைத்துள்ளதாகவும் அரபு நிவ்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியின் விசேட தூதுவராக ரியாத்துக்கு சென்று சவூதி அரேபிய பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் அல் குரைஜி மற்றும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட அந்நாட்டின் அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

மே மாத இறுதியில் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அஹமட்,Arab News க்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் சவூதி அரேபியாவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவது இலங்கையின் “தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தணிக்க” உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் உட்பட எரிசக்தி மற்றும் எரிபொருள் துறைகளில் சவூதி அரேபியாவுடன் “நீண்ட கால உறவுகளை” உருவாக்க கொழும்பு முயல்கிறது.

சவூதியின் 2030 தொலைநோக்கு, இராச்சியத்தின் பொருளாதாரத்தை பன்முகப்படுத்த வடிவமைக்கப்பட்ட சீர்திருத்தத் திட்டம், இலங்கைக்கும் பயனளிக்கக்கூடும் என்றும் அஹமட் கூறியுள்ளார்.

சவூதி-இலங்கை எரிசக்தி பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் இத்தகைய அபிவிருத்திகளில் இருந்து பயனடைவதற்கும் அதன் இலக்குகளை அபிவிருத்தி செய்வதற்கும் ஒத்துழைப்பதன் மூலம் எமது ஜனாதிபதி இந்த தொலைநோக்குப் பார்வையைப் பயன்படுத்த விரும்புகின்றார்.

வலுவான எரிசக்தி ஒத்துழைப்பு இருதரப்பு வர்த்தகத்தை தற்போதைய $300 மில்லியனில் இருந்து பில்லியன் டாலர்களாக உயர்த்தும் என்றும், “நீண்ட கால நிபந்தனைகளுடன் இலங்கைக்கு எரிபொருள் வாங்க உதவும்” என்றும் அஹமட் நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் சுரங்கத் தொழிலுக்கு சவூதி முதலீட்டாளர்களை ஈர்க்க இலங்கையும் முயற்சிக்கிறது என்றும் கூறியுள்ளார்.