இலங்கையை கடல்சார் வர்த்தக கேந்திரமாக நிலைநிறுத்த முயற்சி!

0
132
Article Top Ad

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்து, உலகிற்குத் திறந்து விடுவதன் மூலம் பலம்வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தை உறுதிப்படுத்தி இலங்கையை கடல்சார் வர்த்தக கேந்திரமாக நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி பாதுகாப்புக் கல்லூரியில் கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.

விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், நாட்டில் சிறந்ததொரு பாதுகாப்பு முறைமை இல்லை என்றால் எமது எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும் உலக மற்றும் பூகோள அரசியலின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் எனவும் அது நாட்டுக்கு நல்லதல்ல எனவும் தெரிவித்தார்.

முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச துறையில் உயர் பதவிகளை வகிக்கும் நிறைவேற்று அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் குறித்த கல்வியை வழங்கும் நோக்கத்துடன் நாட்டில் நிறுவப்பட்ட முதலாவது ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இதுவாகும்.

தேசிய மட்டத் தேவைகளை உறுதிப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு, இராஜதந்திரம் மற்றும் பொதுக் கொள்கை ஆகிய துறைகளில் மூலோபாய சிந்தனையாளர்கள் மற்றும் தலைவர்களை உருவாக்குவது இந்த தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் நோக்கமாகும்.

2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா இதுவாகும், மேலும் இந்த நிறுவனத்தின் பாடநெறிகளைப் பூர்த்தி செய்த 31 பேருக்கு ஜனாதிபதி பட்டங்களை வழங்கிவைத்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம். பி. எஸ். ரத்நாயக்க, தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் இராணுவ நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சஞ்சீவனி வீரசேகர ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.