இந்திய பவுலிங் சொதப்பல் ; முதல் போட்டியில் தோல்வி

0
70
Article Top Ad

முதல் ‘டி–20’ போட்டியில் வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலியாவின் வேட், இந்திய அணிக்கு ‘வேட்டு’ வைத்தார். பவுலிங், பீல்டிங்கில் சொதப்பியதால், 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராகுல், ஹர்திக் பாண்ட்யாவின் அரைசதம் வீணானது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று மொஹாலியில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பீல்டிங் தேர்வு செய்தார்.

மூன்று ஆண்டுக்குப் பின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்காக டிம் டேவிட்அறிமுகம் ஆனார்.

ராகுல் அரைசதம்

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. ரோகித், 11 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். திணறலாக ஆட்டத்தை துவக்கிய கோஹ்லி, 7 பந்தில் 2 ரன் மட்டும் எடுத்த போது, நாதன் எல்லிஸ் பந்தில் வீழ்ந்தார்.

ராகுலுடன் இணைந்தார் சூர்யகுமார். மேக்ஸ்வெல் பந்தில் சிக்சர் அடித்த ராகுல், 32 வது பந்தில் அரைசதம் எட்டினார். சர்வதேச ‘டி–20’ல் இது இவரது மூன்றாவது அரைசதம்.

சூர்யகுமார் விளாசல்

மூன்றாவது விக்கெட்டுக்கு 42 பந்தில் 68 ரன் சேர்த்த நிலையில் ராகுல் (55), ஹேசல்வுட் ‘வேகத்தில்’ வீழ்ந்தார். போட்டியின் 13வது ஓவரில் பந்தை சுழற்றினார் ஜாம்பா. இதன் ஐந்தாவது பந்தை 84 மீ., துாரத்துக்கு அனுப்பி சிக்சராக மாற்றினார் சூர்யகுமார். 25 பந்தில் 46 ரன் எடுத்த சூர்யகுமார், கிரீன் பந்தில் அவுட்டானார்.அக்சர் படேல் (5) நிலைக்கவில்லை.

பாண்ட்யா நம்பிக்கை

போட்டியில் 25 பந்துகள் மீதமிருந்த நிலையில் களமிறங்கினார் தினேஷ் கார்த்திக். இவர் 6 ரன் மட்டும் எடுத்து திரும்பினார். பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பாண்ட்யா, கிரீன் பந்தில் சிக்சர் அடித்தார். பின் வந்த ஹேசல்வுட் பந்துகளில் பவுண்டரிகளாக விளாசிய இவர், 25 வது பந்தில் அரைசதம் எட்டினார்.

கிரீன் வீசிய கடைசி ஓவரின் கடைசி 3 பந்தில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடிக்க, ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன் குவித்தது.

இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 22 ரன்களில் வெளியேறிய நிலையில், கேமரான் கிரீன் – ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட கேமரான் கிரீன் 61 ரன்கள் விளாசினார். ஸ்மித் 35 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ஜோஸ் இங்லிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பரபரப்பான கடைசி கட்டத்தில், டிம் டேவிட், மேத்யூ வேட் இருவரும் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தனர். டிம் டேவிட் 18 ரன்களும், மேத்யூ வேட் 45 ரன்களும் விளாச, ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 23ம் தேதி நடக்கிறது.