இலங்கையில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய இரு குற்றவாளிகளை தமிழக பொலிஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கடந்த மார்ச் 22-ம் திகதி முதல், பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி வழியாக அகதிகளாக தமிழகத்துக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இந்தியக் கடற்கரைக்கு வந்ததை அறிந்த கரையோரக் காவல் படையினர் கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி இலங்கைத் தமிழர்களை மீட்டு கடலோர பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு வந்தவர்க்சிலில் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் என்ற நபர், தொடர்பில் நடத்திய விசாரணையில் பிரபல நகைக்கடையில் கொள்ளையடித்து தமிழ்நாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. கொலை மற்றும் மனித கடத்தல் தொடர்பான குற்றங்களுக்காக அவர் பிணையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த கிருபாகரன் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு குற்றவாளி கொலைக் குற்றச்சாட்டில் இலங்கையில் தேடப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தமிழக காவல்துறைக்கு அளித்த தகவலின்படி, தேடப்படும் குற்றவாளிகள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் அகதிகளாக வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.