மெஸ்ஸி vs ரொனால்டோ: யார் G.O.A.T விவாதத்திற்கு முற்றுப்புள்ளியா?

0
251
Article Top Ad

கால்பந்தாட்ட விளையாட்டுலகில் மிகப்பெரியதும் பெறுமதியானதுமான விருதாக கருதப்படும் உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்டீன அணிக்கு வென்று கொடுத்ததன் மூலம் உலக வரலாற்றில் மிகச்சிறந்த கால்ப்பந்தாட்ட வீரர் Greatest Of All Time (G.O.A.T) என்ற மகுடத்திற்காக கடந்த ஒரு தசாப்த காலமாக நிலவிய விவாதத்திற்கு லியனொல் மெஸ்ஸி முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பல பதிவுகளைப் பார்த்தேன்.

தன் வாழ்நாளில் கழகமட்டத்திலும் தேசிய அணிக்காகவும் வெல்லக் கூடிய அனைத்து கிண்ணங்களையும் உலகக்கிண்ணத்தோடு வென்றுவிட்டார் மெஸ்ஸி . தற்போது புகழாரங்கள் குவிந்துகொண்டு பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கின்றார் மெஸ்ஸி.

அனைத்துகிண்ணங்களையும் வென்ற வீரர் தான் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர் என்றால் மெஸ்ஸியின் ஆர்ஜென்டீன சகா ஏங்கல் டி மரியாவும் அதற்கு பாத்திரமானவர். ஏனெனில் அவரும் அனைத்து கிண்ணங்களையும் கழக மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் வென்றிருக்கின்றார். வென்றது மட்டுமல்ல ஒவ்வொரு முக்கிய இறுதிப்போட்டியிலும் கோல்களை அடித்து வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றார்.

ஆனால் வெறுமனே வென்ற கிண்ணங்களின் எண்ணிக்கைக்காகவும் அடித்த கோல்களுக்காகவும் மாத்திரம் GOAT என்ற மகுடம் ரசிகர்களால் சூடப்படுவதில்லை.

மாறாக வீரர்கள் களத்தில் காண்பிக்கும் மேதாவிலாச ஆட்டம் அவர்கள் போட்டிகளின் போதும் வாழ்நாளிலும் ஏற்படுத்திய தாக்கம் உட்பட பல விடயங்களை கருத்தில் கொண்டுதான் அவர்கள் என்பதைத் தீர்மானிப்பார்கள். தீர்மானிக்கவேண்டும்.

மரடோனாவா ?பீலேயா?

மெஸ்ஸி ரொனால்டாவிற்கு முன்னர் உலக வரலாற்றில் மிகச்சிறந்தவீரர் என்ற விவாதம் எழுந்தபோது பிரேசில் வீரர் பீலேக்கும் ஆர்ஜென்டீன வீரர் மரடோனாவிற்கும் இடையே பலத்த போட்டியிருந்தது.

இதுதொடர்பாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளம் 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வீரர் யார் என்ற  இணையவழி வாக்கெடுப்பை நடத்தியபோது அதிலே மரடோனாவிற்கே அதிக வாக்குகள் கிடைத்தது . ஒட்டுமொத்த வாக்குகளில் 53 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை மரடோனா பெற்றிருந்தார். பீலேக்கு வெறுமனே 18 வீத வாக்குகளே கிடைத்திருந்தது.

மறுமுனையில் Fifa சஞ்சீகை வாசகர்கள் மத்தியிலும் நடுவர்கள் (FIFA Magazine and Grand Jury vote )மத்தியிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில் பீலேக்கு 72 %மான வாக்குகள் கிடைத்தன. மரடோனாவிற்கு 6% வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.

பீலே விளையாடிய 1950களின் இறுதி முதல் 1970களின் ஆரம்ப காலகட்டத்தில் தற்போதுள்ள இணைய தலைமுறையினரில் பிறந்திருக்கவோ அவரது விளையாட்டைப் பார்த்திருக்கவோ வாய்ப்பில்லை என்பதால் இணைய வழி வாக்கெடுப்பின் அளவுகோல் சரிவராது என்பதை உணர்ந்து Fifa சஞ்சீகை வாசகர்கள் மத்தியிலும் நடுவர்கள் மத்தியிலும் வாக்கெடுப்பை நடத்தியிருந்தது.

Maradona and Pele

ரசிகர்கள் இடையேயான பெரும் குழப்பத்தை தடுப்பதற்காக மரடோனா மற்றும் பீலே இருவரையும் 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வீரர்களாக அறிவித்தது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம். ஆனால் இன்னமும் இதுதொடர்பான சர்ச்சை இருந்துகொண்டே இருக்கின்றது.

மரடோனா பீலே இருவரையும் தவிர்த்து மெஸ்ஸிக்கும் ரொனால்டோக்கும் முன்பாக உலகின் சிறந்தவீரர்களாக புகழப்படும் வீரர்கள் பட்டியலில் அடிக்கடி இடம்பெறும் பெயர்களாக ஆர்ஜென்டினாவின் அல்பிரட் டி ஸ்டேபானோ Alfredo Di Stefano , நெதர்லாந்தின் ஜொஹான் குருய்வ் Johan Cruyff மற்றும் பிரான்ஸின் மைக்கேல் பிளேடினி Michel Platini ஆகியோரின் பெயர்களும் இருக்கின்றன.

இந்த மூன்று ஜாம்பவான்களும் தமது நாட்டிற்காக உலகக்கிண்ணத்தை வென்று கொடுக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது

 

தமது தேசிய அணிகளுக்காக காண்பித்த ஆற்றல்களுக்காக அன்றி அவர்கள் முறையே விளையாடிய ரியல் மட்ரிட் ,பார்சிலோனா மற்றும்  ஜுவென்டஸ் கழகங்களுக்காக காண்பித்த ஆற்றல் வெளிப்பாடுகளுக்காகவே போற்றப்படுகின்றனர்.

                     21ம் நூற்றாண்டின் சிறந்தவீரர்?

கிரிட்கட்டில் சச்சின் டெண்டுல்கர் ,பிரயன் லாரா போன்றவர்கள் ஏற்படுத்திய சாதனைகளை, மேதாவிலாசத் துடுப்பாட்டத்தை சேர் டொன் பிரட்மன் ,சேர் கார்பீல்ட் சோபர்ஸ் போன்றவர்களுடன் ஒப்பிடமுடியாதோ அதே போன்றுதான் மரடோனா மற்றும் பீலே சாதனைகளை அவர்களின் மேதாவிலாசத்தை மெஸ்ஸியுடனோ ரொனால்டோவுடனோ ஒப்பிடமுடியாது . ஏனெனில் அவர்கள் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள்.

அப்படிப் பார்க்கும் போது 21ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வீரர் யார் ? என்ற போட்டிதான் ரொனால்டோவிற்கும் மெஸ்ஸிக்கும் இடையே இடம்பெறவேண்டும்.

21ம் நூற்றாண்டில் இரண்டு தசாப்தங்களே நிறைவடைந்துள்ளன . இன்னமும் 8 தசாப்தங்கள் எஞ்சியுள்ளன. அந்தவகையில் 21ம் நூற்றாண்டின் மிகச்சிறந்தவீரர்கள் யார் என்பதை இந்த நூற்றாண்டின் முடிவிலேயே நடத்தவேண்டும்.

சரி இந்த நூற்றாண்டில் இரு வீரர்கள் காண்பித்த அசாத்திய சாதனைகள் அடித்த கோல்கள் வெளிப்படுத்திய மேதாவிலாசம் இவற்றை வைத்து யார் சிறந்த வீரர் என்ற முடிவிற்கு வரமுடியுமா?

கால்பந்தாட்ட வீரர் ஒருவர் தனது தேசிய அணிக்காகவும் முதற்தர கழகங்களுக்காகவும் காண்பிக்கும் ஆற்றல் வெளிப்பாடுகளுக்கு அமைவாக ஆண்டின் சிறந்த வீரருக்காக வழங்கப்படும் Ballon d’Or விருதை 2008ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் லியனொல் மெஸ்ஸியும் 12தடவைகள் வென்றெடுத்துள்ளனர். மெஸ்ஸி 7 தடவைகளும் ரொனால்டோ 5 தடவைகளும் வென்றெடுத்துள்ளனர்.

இவர்களுக்கு முன்னர் எந்தவொரு வீரருமே இந்த விருதை ஐந்து தடவைகள் வென்றதில்லை. மைக்கல் பிளேடினி ,ஜொஹான் குருய்வ் மற்றும் மார்க்கோ வென்பஸ்டன் ஆகியோர் தலா மூன்று முறை வென்றதே அதிகபட்சமாகும்.

கழக மட்டத்திலும் தேசிய அணிக்காகவும் வென்ற கிண்ணங்களின் வரிசையிலும் மெஸ்ஸி, ரொனால்டோ விட முன்னணியில் இருக்கின்றார் . அடித்த கோல்கள் என்று வரும் போதும் பங்கேற்ற போட்டிகள் என்று வரும் போதும் ரொனால்டோ முன்னணியில் இருக்கின்றார்.

Ronaldo Vs Messi 

எல்லாற்றையும் விட கால்பந்தாட்ட விளையாட்டின் மணிமகுடமாக கருதப்படும் உலகக்கிண்ணத்தை வென்றமையை அடுத்து மெஸ்ஸியா ரொனால்டோவா என்ற விவாதத்திற்கே அவசியமில்லை. மெஸ்ஸியே மிகச்சிறந்த வீரர் என்று முற்றாகிவிட்டது என்று கூறும் பல விற்பன்னர்களும் ரசிகர்களும் இருக்கின்றார்கள். உலகக்கிண்ணத்தை வெல்வதற்கு முன்பே மெஸ்ஸியே மிகச்சிறந்த வீரர் என்று வாதிட்டவர்களும் உள்ளனர்.

ரொனால்டோ கால்பந்தாட்ட அரங்கில் செய்வதை இன்னுமொரு வீரரால் செய்யமுடியும் மாறாக மெஸ்ஸி செய்வதை செய்யமுடியாது அவர் தனித்துவ மேதாவிலாசத்தை வெளிப்படுத்துகின்றார் என்பது அவர்களது வாதம்.

விளையாடும் அபூர்வமான அழகியலுக்காக அசாத்திய வியூகக்கணிப்புக்களுக்காக மெஸ்ஸியே சிறந்தவர் என்று பார்ப்பவர்களுக்கு எண்ணத்தோன்றும். டென்னிஸ் விளையாட்டில் ரொஜர் பெடரர் விளையாடும் போது பார்ப்பவர்களுக்கும் இதே எண்ணம் தோன்றுவதுண்டு.

விளையாட்டு என்று வந்துவிட்டால் விளையாடும் அழகு அசத்தல் அட்டகாசம் என்பவற்றைத்தாண்டு புள்ளிவிபரங்களும் வரலாற்றில் முக்கியமாக பேசப்படும். அங்கு பல இடங்களில் மெஸ்ஸியுடன் ரொனால்டோ மல்லுக்கட்டி நிற்பார்.

அதனையும் தாண்டி விளையாட்டில் ஏற்படுத்திய தாக்கம் என்று வரும் போதும் எப்படி ஒரு காலத்தில் பீலேயும் மரடோனாவும் பல இளைஞர்கள் கால்பந்தாட்ட விளையாட்டை தீவிரமாக எடுத்துக்கொள்ள அதிலே சாதிக்க ஊந்தப்பட்டனரோ அதே போன்று மெஸ்ஸியும் ரொனால்டோவும் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.

குறிப்பாக உடற்கட்டமைப்பை பேணிக்காத்தல் தீவிர பயிற்சி மேற்கொள்ளல் தன்னை ஒறுத்து விளையாட்டிற்காக தியாகம் செய்தல் என்ற விடயத்தில் ரொனால்டோவின் தாக்கம் அதிகம்.

இன்று உலகின் கவனத்தை அதிகமாக ஈர்த்து நிற்கும் இளம் கால்ப்பந்தாட்ட வீரரான பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே தனது சிறுவயதில் முன்மாதிரியாக கொண்டிருந்த வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்றால் மிகையல்ல.

ஐந்து உலகக்கிண்ணங்களில் விளையாடிய ரொனால்டோ ஒட்டுமொத்தமாக அடித்த கோல்களின் எண்ணிக்கை 8 ஆனால் இம்முறை உலகக்கிண்ணத்தில் மாத்திரம் எம்பாப்பே அடித்த கோல்களின் எண்ணிக்கை 8 . ஆகவே எம்பாப்பே தான் ரொனால்டோவை விட சிறந்தவர் என்று கூறமுடியுமா?

ஐந்து உலகக்கிண்ணங்களில் விளையாடிய மெஸ்ஸி ஒரு தடவை ஆர்ஜென்டினாவை சம்பியன் ஸ்தானத்திற்கும் மற்றுமொரு தடவை இறுதிப்போட்டிக்கும் வழிநடத்தியிருந்தார். ஆனால் எம்பாப்வே ,இரண்டு உலகக்கிண்ணங்களில் பங்கேற்று ஒருமுறை உலகச் சம்பியன் பட்டத்தை பிரான்ஸ் வென்றெடுக்க காரணமாக அமைந்ததுடன் இம்முறை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச்சென்றிருந்தார். அதுவும் 23 வயதில் இதனைச் சாதித்திருக்கின்றார். ஆக மெஸ்ஸியை விட எம்பாப்பேயே சிறந்த வீரர் என்று கூற முடியுமா?

கிரிக்கட் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான வீராட் கோலி கூறுவது போன்று ஒருவர் வென்றெடுக்கும் கிண்ணங்கள் மாத்திரம் அவர்கள் அந்த விளையாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை தீர்மானிக்காது .

மெஸ்ஸி எந்தளவிற்கு முன்னாள் இந்நாள் வீரர்கள் மத்தியிலும் புதிய இளம் தலைமுறையினர் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றாரோ அதேபோன்றே கிறிஸ்டியானோ ரொனால்டோவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்.அவரது செல்வாக்கு கால்பந்தாட்டத்தை தாண்டி வியாபித்திருப்பதற்கு வீராட்கோலியின் கருத்துக்கள் சான்று.

ஆக மொத்தம் ஆர்ஜென்டினா உலகக்கிண்ணத்தை வென்றெடுத்துள்ள நிலையில் மெஸ்ஸியை நோக்கி புகழ்மாலைகளும் பாராட்டுக்களும் குவியலாம். அவரே சிறந்தவர் என்ற வாதத்திற்கான ஆதரவு அவரது ரசிகர்கள் மத்தியிலிருந்து மட்டுமன்றி வீரர்கள் விற்பன்னர்கள் மத்தியிலிருந்தும் வலுப்பெறலாம்.

ஆனால் அடுத்து சில தசாப்தங்கள் காலங்கள் உருண்டோடிய பின்னர் மெஸ்ஸியையும் ரொனால்டோவையும் முன்னர் எந்த இரு வீரர்களும் தொடர்ச்சியாக நிகழ்த்தியிராத சாதனைகளை சுமார் 20 ஆண்டுகளாக நிகழ்த்தியமைக்காகவும் காண்பித்த ஆற்றல்வெளிப்பாடுகளுக்காகவும் வியந்து போற்றப்போது நிச்சயம். அதுபோன்றே இருவரில் யார் சிறந்தவர் என்ற விவாதமும் தீவிர ரசிகர்களை மட்டுமன்றி வீரர்களையும் காலாகாலத்திற்கும் ஆட்கொள்ளப்போவதும் நிச்சயம்.

ஆக்கம்: அருண் ஆரோக்கியநாதர்